நல்லிணக்கம், அமைதியின் பாதைளை வளர்க்கும் அருளாளர்களின் வாழ்க்கை

1964ஆம் ஆண்டு நவம்பர் 28 அன்று காங்கோ நாட்டில் கொல்லப்பட்ட காங்கோ அருள்பணியாளார் ஆல்பர்ட் ஜோபர்ட், இத்தாலிய சவேரியன் மறைப்பணியாளார்களான லூய்ஜி கராரா, ஜியோவான்னி திதோனே, வித்தோரியோ ஃபாச்சின் ஆகியோர் 2024 ஆகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை காங்கோவின் உவ்விராவில் அருளாளர்களாக உயர்த்தப்பட்டனர்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

காங்கோ ஜனநாயகக் குடியரசின் உவிராவில், அருளாளர்களாக உயர்த்தப்பட்ட நால்வரின், மறைசாட்சி வாழ்வானது, வாழ்வின் மணிமகுடமாகத் திகழ்கின்றது என்றும், புதிய அருளாளர்களின் முன்மாதிரிகையான வாழ்க்கையும் பரிந்துரையும், நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கான பாதைகளை வளர்க்கட்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செபஉரையின் பின் தனது செப விண்ணப்பங்களை எடுத்திரைத்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருளாளர்களின் சான்றுள்ள வாழ்க்கையானது கடவுளுக்கும் பிறமனிதர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டது என்றும் கூறினார்.

1964ஆம் ஆண்டு நவம்பர் 28 அன்று காங்கோ நாட்டில் கொல்லப்பட்ட காங்கோ அருள்பணியாளார் ஆல்பர்ட் ஜோபர்ட், இத்தாலிய சவேரியன் மறைப்பணியாளார்களான லூய்ஜி கராரா, ஜியோவான்னி திதோனே, வித்தோரியோ ஃபாச்சின் ஆகியோர் 2024 ஆகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை காங்கோவின் உவ்விராவில் அருளாளர்களாக உயர்த்தப்பட்ட நிலையில், அவர்கள் குறித்து எடுத்துரைத்து வாழ்த்தினார் திருத்தந்தை.

மத்திய கிழக்கு, பாலஸ்தீனம், இஸ்ரேல், உக்ரைன், மியான்மார் மற்றும் போர் நடைபெறும் ஒவ்வொரு பகுதிகளிலும் அமைதிக்கானப் பாதைகள் திறக்கப்பட தொடர்ந்து செபிப்போம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள்,  பேச்சுவார்த்தை மற்றும் உரையாடலினால் வன்முறை நடவடிக்கைகள் மற்றும் எதிர்வினைகளைத் தவிர்ப்போம் என்றும் கூறினார்.

உரோம் நகர் இறைமக்கள் மட்டுமன்றி, இத்தாலி மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், குறிப்பாக பிரேசிலின் தூய பவுல் மாநிலத்திலிருந்து வந்திருந்தவர்களையும், தூய எலிசபெத் சபை அருள்சகோதரிகளையும் வாழ்த்தினார்.

போலந்தில் உள்ள Piekary Šląskie மரியன்னைத் திருத்தலத்தில் கூடியிருந்து செபிக்கும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு தனது வாழ்த்துக்களையும் ஆசீரையும் வழங்குவதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், குடும்பத்திலும், சமூகத்திலும் நற்செய்திக்கு மகிழ்ச்சியுடன் சான்றுபகரக்கூடியவர்களாக வாழ அனைவரையும் வாழ்த்தி தனது செப விண்ணப்பங்களை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 August 2024, 09:08