வாழ்க்கையின் ஒரு பகுதியான தெளிந்து தேர்தல்
மெரினா ராஜ் – வத்திக்கான்
தூய ஆவியின் குரலுக்கு செவிசாய்த்தல், அதற்குப் பலனளிக்கும் வகையில் தொடர்ந்து செயலாற்றுதல், சபையைத் தோற்றுவித்தவர்களின் நோக்கத்தால் தூண்டுதல் பெறுதல் போன்றவற்றால் செழிப்படைய வேண்டும் என்றும், தெளிந்து தேர்தல், உருவாக்கம், பிறரன்புப் பணிகள் என்னும் மூன்றின் அடிப்படையில் பணியாற்றவேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆகஸ்ட் 12 திங்கள் கிழமை, தூய சிஸ்தோவின் டொமேனிக்கன் சபை அருள்சகோதரிகள், இயேசுவின் திருஇருதய சமூக சபை அருள்சகோதரிகள், காணிக்கை அன்னை சபை அருள்சகோதரிகள், சமூக இறையழைத்தல் சபை அருள்தந்தையர்கள் ஆகியோரை அவர்களது சபையின் பொதுப்பேரவையை முன்னிட்டு வத்திக்கானில் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தூய ஆவியின் குரலுக்கு செவிசாய்த்தல், அதற்குப் பலனளிக்கும் வகையில் தொடர்ந்து செயலாற்றுதல், சபையைத் தோற்றுவித்தவர்களின் நோக்கத்தால் தூண்டுதல் பெறுதல் போன்றவற்றால் செழிப்படைய அச்சபையார் இப்பொதுப்பேரவைக் காலத்தில் அழைக்கப்படுகின்றார்கள் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தெளிந்து தேர்தல், உருவாக்கம், பிறரன்புப் பணிகள் என்ற மூன்று தலைப்புகளின் கீழ் தனது கருத்துக்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்ட திருத்தந்தை அவர்கள், பொதுப்பேரவையைக் கொண்டாடுபவர்கள், நன்றியுணர்வையும் அடிப்படையான தருணத்தை வாழக்கூடிய பொறுப்பையும் பெற்றிருக்கின்றார்கள் என்றும் கூறினார்.
தெளிந்து தேர்தல்
வாழ்க்கையின் முக்கியமான தருணங்களிலும், அன்றாட வாழ்வின் சிறு சிறு முடிவுகளிலும் தெளிந்துதேர்தல் என்பது நமது வாழ்க்கையின் ஒரு பகுதியாக உள்ளது என்றும், நமது சுதந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்தத் தேர்ந்து தெளிதலானது நம் ஒவ்வொருவரின் குறிப்பிட்ட மற்றும் தனித்துவமான அடையாளத்தையும் வெளிப்படுத்துகிறது மற்றும் பலனளிக்கிறது என்றும் கூறினார்.
கடவுளின் குரலுக்கும், பிறருக்கும், நமக்கும் நாம் செவிசாய்ப்பதும், செபம், தியானம், பொறுமையுடன் காத்திருத்தல், துணிவு, தியாகம், ஆகியவை கடினமாகத் தோன்றினாலும் இறைவன் நமது இதயத்தின் விருப்பங்களை அறிகின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தெளிந்து தேர்தலினால் நாம் எடுக்கும் முடிவுகள் நல்லவையாக சரியானவைகளாக இருக்கும்போது நமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், நமது முடிவெடுப்பதன் சுவையை, அழகை மீண்டும் கண்டறிய வேண்டிய தேவை உள்ளது என்றும் எடுத்துரைத்தார்.
உருவாக்கம்
இறைவன் பணியினைச் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் இதயங்கள் தூய்மையில் வளர்க்கப்படவும், அதன் வளர்ச்சிப்பாதையை ஒருங்கிணைக்கவும் உருவாக்கம் மிக முக்கியமாக செயல்படுகின்றது என்றும், இறைவன் தான் தேர்ந்தெடுத்தவர்களின் பாதையை உருவாக்கத்தின் வழியாக வடிவமைக்கின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை.
செபத்தின் வழியாக உருவாக்கம் ஆழமான வளர்ச்சி பெறுகின்றது என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், கடவுளுக்குச் செலுத்தும் ஆராதனை பக்தி தற்போது குறைந்து வருகின்றது என்றும், துறவறத்தார் ஒவ்வொருவரும் கொண்டுள்ள கிறிஸ்துவுடனான உறவு செபத்தினால் வலுப்பெறுகின்றது என்றும் எடுத்துரைத்தார்.
தாழ்ச்சியுடன் தொடர்ந்து தங்களை உருவாக்கத்தில் அடையாளம் கண்டுகொள்பவர்கள் மட்டுமே, உண்மையில், மற்றவர்களுக்கு ஒரு நல்ல உருவாக்குனர்களாக இருப்பார்கள் என்றும், கல்வியின் பாதைகளைப் பகிர்தல் எப்போதும் முதன்மையானது மற்றும் முக்கியமானது என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
பிறரன்புப்பணிகள்
ஏழைகளின் முகத்தை எப்போதும் நம் கண்களுக்கு முன்பாக வைத்திருத்தல், அவர்களுக்குப் பணியாற்ற விழிப்புடன் இருத்தல், மிக முக்கியமானது என்றும், தேவையிலுள்ள சகோதர சகோதரிகளிடத்தில் கடவுள் அன்பின் பிரதிபலிப்பு இருக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்
இறுதி நாளில் இறைவன், நான் பசியாய் இருந்தேன் எனக்கு உண்ணக்கொடுத்தாயா? என்று நம்மிடம் கேட்பார் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், எளிய மக்களை நிராகரிக்காதீர்கள் அவர்களை உலக அளவுகோள்களின்படி நிர்ணயித்து அன்பு செய்யாதீர்கள் என்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்