குருத்துவக் கல்லூரி பொறுப்பாளர்கள் மற்றும் மாணவர்களுடன் திருத்தந்தை குருத்துவக் கல்லூரி பொறுப்பாளர்கள் மற்றும் மாணவர்களுடன் திருத்தந்தை  (VATICAN MEDIA Divisione Foto)

வாழ்க்கையின் மையமாக கிறிஸ்து இருக்க வேண்டும்

ஆன்மிக வாழ்க்கை, கல்வி, சமூக வாழ்க்கை, மேய்ப்புப்பணிச் செயல்பாடுகள் ஆகிய நான்கு அடிப்படை நிலைகளைக் கருத்தில் கொண்டு அருள்பணித்துவ மாணவர்கள் செயல்பட வேண்டும்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

அருள்பணித்துவ மாணவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையின் மையமாகக் கிறிஸ்து இருக்க வேண்டும் என்றும், கிறிஸ்துவின் இதயத்திற்கு ஏற்ப நமது இதயங்கள் வடிவமைக்கப்பட ஒத்துழைக்கவும், நமது இதயத்திற்கு நெருக்கமாக அவரை வைத்திருக்கவும் வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 3 சனிக்கிழமை இஸ்பெயினில் உள்ள Getafe குருத்துவக் கல்லூரி அருள்பணித்துவ மாணவர்களை வத்திக்கானில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்கல்லூரியின் 30 ஆம் ஆண்டு நிறைவிற்காக தனது வாழ்த்துக்களையும் கூறினார்.

2025 ஆம் ஆண்டு திருஅவையில் சிறப்பிக்கப்பட இருக்கும் யூபிலி ஆண்டை முன்னிட்டு உரோமிற்கு திருப்பயணிகளாக வந்திருக்கும் அவர்களின் ஆன்மிகப் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த திருத்தந்தை அவர்கள், ஆகஸ்ட் 4 திருஅவை நினைவுகூரும் தூய ஜான் மரிய வியான்னி பற்றியும் எடுத்துரைத்தார்.

பங்குப்பணியாளர்களின் பாதுகாவலரான தூய மரிய வியான்னியின் கூற்றான, “இப்பூமியில் அருள்பணியாளர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நாம் நன்கு அறிந்துகொண்டோமானால் பயத்தினால் அல்ல மாறாக அன்பினால் நாம் இறந்து போவோம்” என்ற வரிகளை மேற்கொள்காட்டிய திருத்தந்தை அவர்கள், இவ்வார்த்தைகளுக்கு வடிவம் கொடுத்து வாழ்ந்து, கடவுளுக்குத் தன்னை அர்ப்பணித்து தூய்மையாக வாழ்ந்தவர் தூய மரிய வியான்னி என்றும் எடுத்துரைத்தார்.

அருள்பணித்துவ மாணவர்கள் ஒவ்வொருவரும் தூய ஜான் மரிய வியான்னியைப் போல வாழ, இறைவனின் அழைப்பைப் பெற்றுள்ளார்கள் என்றும், உருவாக்கத்திற்கு உதவும் பலரின் துணையுடன் கிறிஸ்துவிற்காகத் தங்களையே அர்ப்பணிப்பவர்களாக வாழ்ந்து சிறக்கவேண்டுமென்று கூறினார் திருத்தந்தை.

நல்ல ஆயரான இயேசுவின் பாதையைப் பின்பற்றுவதில் சிரமங்கள் இல்லாமல் இல்லை என்று கூறிய திருத்தந்தை அவர்கள், ஆன்மிக வாழ்க்கை, கல்வி, சமூக வாழ்க்கை, மேய்ப்புப்பணிச் செயல்பாடுகள் ஆகிய நான்கு அடிப்படை நிலைகளைக் கருத்தில் கொண்டு அருள்பணித்துவ மாணவர்கள் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பெற்றுக்கொண்ட அழைப்புக்கேற்ப வாழ்பவர்களாக, நேர்மையும் தாராள மனமும் கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்றும், செவிசாய்க்கவும் மன்னிக்கவும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், ஏழைகள், எளியவர்கள் மற்றும் மிகவும் துன்பப்படுபவர்களுக்காக  தங்கள் வாழ்வை அர்ப்பணித்து வாழ வேண்டும் என்றும் கூறினார்.

திருத்தந்தையின் இக்கருத்துக்கள் அருள்பணித்துவ மாணவர்களுக்கு எழுத்து வடிவில் அளிக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 August 2024, 14:56