தேடுதல்

மேரி மேஜர் பெருங்கோவிலில் திருத்தந்தை மேரி மேஜர் பெருங்கோவிலில் திருத்தந்தை  (ANSA)

இறையருளும் நமக்கு எதிர்பாராத வேளையில் வழங்கப்படுகிறது

இயேசுவை தாங்கியிருக்கும் அன்னை மரியா திருஉருவம், இறையருளைப் பெற்றுத் தருவதாக உள்ளது. நாம் இறையருளைப்பெற அன்னை மரியா இடையீட்டாளராக உள்ளார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

உரோம் நகரின் புனித மேரி மேஜர் பெருங்கோவில் அர்ப்பணிக்கப்பட்டதன் நினைவுத் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி திங்கள் மாலையில் அப்பெருங்கோவிலில் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களை நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போரால் சிதறுண்டிருக்கும் இவ்வுலகில் அமைதி நிலவ உருக்கமாக செபித்தார்.

358ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கும் 5க்கும் இடப்பட்ட இரவில் அப்போதைய திருத்தந்தை லிபேரியஸ் அவர்களுக்கும், பிறிதொரு தம்பதிக்கும் அன்னை மரியா கனவில் தோன்றி, உச்சகட்ட அந்த கோடை காலத்தில் பனி விழும் இடத்தில் தனக்கான ஒரு கோவில் கட்டுமாறு கேட்டுகொண்டதற்கு இணங்க ஆகஸ்ட்  5ஆம் தேதி பனி விழுந்த இடத்தில் இந்த கோவில் கட்டப்பட்டதன் நினைவு இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்டது.

பனி விழுந்ததை நினவுகூரும் விதமாக பெருங்கோவிலின் உள்முகப்பிலிருந்து வெள்ளைப் பூவிதழ்கள் கொட்டப்பட, இங்கு திருவழிபாட்டைத் துவக்கி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கோடை காலத்தில் விழுந்த பனி எவ்வாறு எதிர்பாராத ஒரு நிகழ்வோ அதுபோல் இறைவனின் அருளும் நமக்கு எதிர்பாராத வேளையில் வழங்கப்படுகிறது என்றார்.

இப்பெருங்கோவிலில் வைக்கப்பட்டிருக்கும் “Salus Populi Romani” என்ற புகழ்வாய்ந்த திருஉருவத்தைப் பற்றியும் தன் மறையுறையில் குறிப்பிட்ட திருத்தந்தை, இயேசுவை கையில் தாங்கியிருக்கும் அன்னை மரியாவின் இத்திருஉருவம், நமக்கு இறையருளைப் பெற்றுத்தருவதாக உள்ளது, ஏனெனில் நாம் இறையருளைப்பெற அன்னை மரியா இடையீட்டாளராக உள்ளார் எனவும் எடுத்துரைத்தார்.

வரும் ஜூபிலி ஆண்டில் உரோம் நகரில் இடம்பெறவிருக்கும் கொண்டாட்டங்களைப் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, உலக அமைதிக்காக அன்னை மரியாவின் பரிந்துரையை நாடுவோம் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 August 2024, 14:30