தோல்வியடையாத மகிழ்ச்சியைத் தரும் கடவுளுடனான நட்புறவு
மெரினா ராஜ் - வத்திக்கான்
கடவுளுடனான நட்பு என்பது மற்ற எல்லா மனித உறவுகளிலும் பிரதிபலிக்கிறது என்றும், அது ஒருபோதும் தோல்வியடையாத மகிழ்ச்சியை நமக்குத் தருகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
“மிக முக்கியமானதைத் தேடவில்லை என்றால் நாம் எதைத் தேடுகின்றோம்?” என்ற தலைப்பில் ரிமினியில் ஆகஸ்ட் 20 முதல் 25 வரை நடைபெற உள்ள 45 ஆவது "மக்கள் மத்தியில் நட்புறவை வளர்த்தல்" கூட்டத்திற்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
1980ஆம் ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் மாதத்தில் இத்தாலியின் ரிமினி நகரில், மக்கள் மத்தியில் நட்புறவை வளர்ப்பது குறித்த கூட்டம் நடைபெறும். இவ்வாண்டு அதன் 45ஆவது கூட்டம் வருகின்ற ஆகஸ்ட் 20 முதல் 25 வரை நடைபெற இருக்கின்ற நிலையில், அக்கூட்டத்திற்கான திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தியானது திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் கையொப்பமிடப்பட்டு ரிமினி மறைமாவட்ட ஆயர் NICOLÒ ANSELMI அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மிக முக்கியமானவற்றில் கவனம் செலுத்துவது என்பது நம் வாழ்க்கையை நம் கைகளில் எடுத்துக்கொள்வதற்கு உதவுகின்றது என்று எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், அன்பு, கருணை மற்றும் இரக்கத்தின் ஒரு கருவியாக நம்மை மாற்றுவதற்கும் அது உதவுகின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிக்கலான காலங்களைக் கடந்து செல்லும்போது, வாழ்க்கை மறைபொருளின் முக்கியம், எதார்த்தம் எது என்பதைத் தேடுவது மிக முக்கியமானது என்றும், பல்வேறு பிரச்சனைகள் மற்றும் சவால்களால் சக்தியற்ற உணர்வு, செயலற்ற மனப்பான்மையினால் நமது "வாழ்க்கை இழுத்துச் செல்லப்படும் சூழலில் இன்றையமையாததை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.
பலவிதமான முன்மொழிவுகள் வழியாக அத்தியாவசியமானவற்றைத் தேடுபவர்களாக மாறுவதற்கும், அனைத்து அடிமைத்தனத்திலிருந்தும் விடுதலைக்கான அடிப்படையான நற்செய்தியைப் பிரகடனப்படுத்துவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கும் பலருக்குத் தூண்டும் என்ற தன் நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மனிதகுலத்தை குணப்படுத்துகின்ற மற்றும் மாற்றுகின்ற ஆற்றல் நம் ஒவ்வொருவரின் இதயங்களில் மலர்கின்றது என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், அமைப்பாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் அன்புடன் தனது ஆசீரை அனுப்புவதாகவும் செபிப்பதாகவும் எடுத்துரைத்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்