அருள்பணியாளர் Mattia Ferrari அருள்பணியாளர் Mattia Ferrari 

அருள்பணியாளர் மத்தியா ஃபெராரி அவர்களுக்குத் திருத்தந்தை வாழ்த்து

2019 ஆம் ஆண்டு மே 9ஆம் நாள் "மனிதர்களைப் பிடிப்பவர்கள்" என்ற தலைப்பில் சிசிலியா, லீபியா பகுதியிலிருந்து புலம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கை நிலையை புத்தகமாக வெளியிட்டுள்ளார் அருள்பணியாளர் மத்தேயு ஃபெராரி.

மெரினா ராஜ் - வத்திக்கான்

மத்திய தரைக்கடலில் வாழும் மனிதர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு உதவும் குழுவினருக்கு தன் ஆசீரை வழங்கவதாகவும் அவர்க்ளது சான்று வாழ்க்கைக்கு நன்றி என்றும் கூறி அருள்பணியாளர் மத்தியா ஃபெராரி அவர்களுக்கு வாழ்த்து செய்தி ஒன்றினை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 24 சனிக்கிழமை திருத்தூதர் பர்த்தலோமேயு திருவிழாவினைத் திருஅவை  சிறப்பிக்கும் வேளையில் மத்திய தரைக்கடலில் வாழும் புலம்பெயர்ந்தோர்க்கு தன்னார்வமனம் கொண்டு உழைக்கும் அருள்பணியாளர் மத்தியா ஃபெராரி அவர்களுக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றினை அனுப்பி தொடர்ந்து உழைக்க ஊக்கப்படுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மத்திய தரைக்கடல் பகுதியில் புலம்பெயர்ந்தோரைத் தேடும் புதிய பணிக்கு தனது சிறப்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள திருத்தந்தை அவர்கள், இறைவன் அக்குழுவினரை நிறைவாக ஆசீர்வதிக்கவும் அன்னை மரியா அவர்களைப் பாதுகாக்கவும் தான் தொடர்ந்து செபிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அருள்பணியாளர் மத்தேயு ஃபெராரி அவர்கள், 1993ஆம் ஆண்டு நவம்பர் 27 அன்று மொதெனா மாநிலத்தில் உள்ள  ஃபொர்மிங்னே  என்னும் ஊரில் பிறந்தார். 2018ஆம் ஆண்டு குருவாக அருள்பொழிவுபெற்ற இவர், நோனாந்த்தோலா பங்கின் உதவிபங்குத்தந்தையாகப் பணியாற்றினார். தற்போது மத்திய தரைக்கடல் பகுதி மனிதாபிமான உதவி அமைப்பில் ஆலயப்பணிப் பொறுப்பாளராக பணியாற்றி வருகின்றார்.      

2019 ஆம் ஆண்டு மே 9ஆம் நாள் மனிதர்களைப் பிடிப்பவர்கள் என்ற தலைப்பில் சிசிலியா லீபியா பகுதியிலிருந்து புலம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கை நிலையை புத்தகமாக வெளியிட்டுள்ளார் அருள்பணியாளர் மத்தேயு ஃபெராரி.

மனிதர்களைப் பிடிப்பவர்கள் என்ற புத்தகமானது, அச்சத்திற்கு அடிபணிய விரும்பாத இக்காலத் தலைமுறையினரின் குரலுக்கு செவிமடுப்பதற்கான ஓர் அழைப்பாகவும் பலவீனமானவர்களுக்கும், புகலிடம் இழந்தவர்களுக்கும் நேரடியாக உதவவும், அநீதி எதிராக போராடவும் வழிவகுக்கின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 August 2024, 11:46