தேடுதல்

இயேசுவில் நம்பிக்கையைப் புதுப்பித்து வாழ்வோம்

இயேசுவில் நமது நம்பிக்கையைப் புதுப்பித்து வாழவும், வரலாற்றை, சிறந்த உயர்ந்த திட்டங்களை நோக்கி வழிநடத்த, தூய ஆவியார் உதவுகின்றார் என்பதை நினைவில் கொள்ளவும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் - வத்திக்கான்

உலகளாவிய நலவாழ்வு அவசரநிலையை உருவாக்கி இருக்கும் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுடன் தனது ஒன்றிப்பை வெளிப்படுத்துவதாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் குறிப்பாக காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள மக்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 25 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் வளாகத்தில் வழங்கிய மூவேளை செப உரையைத் தொடர்ந்து வெளியிட்ட செப விண்ணப்பங்களின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உள்ளூர் தலத்திருஅவைகளில் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்தார்.

மருத்துவ வசதிகள் அனைத்தும் மக்கள் அனைவரையும் சென்றடைய அரசு, தனியார் தொழில் நிறுவனங்கள் ஆகிய அனைத்தும் இணைந்து தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ சிகிச்சைகளை பகிர்ந்து கொள்ள அழைப்பு விடுத்த திருத்தந்தை அவர்கள், மருத்துவ உதவிகள் தேவைப்படும் நிலையில் இருக்கும் அனைவருக்கும் எல்லா வசதிகளும் சென்றடைய வலியுறுத்தினார்.

நிகராகுவா மக்களுக்குத் தன் அன்பினை வெளிப்படுத்திய திருத்தந்தை அவர்கள் இயேசுவில் நம்பிக்கையைப் புதுப்பித்து வாழவும், வரலாற்றை சிறந்த உயர்ந்த திட்டங்களை நோக்கி வழிநடத்த தூய ஆவியார் உதவுகின்றார் என்பதை நினைவில் கொள்ளவும் வலியுறுத்தி அமலோற்பவ அன்னை சோதனைக் காலங்களில் உங்களைப் பாதுகாத்து மென்மையான தாயன்பை உணரச்செய்வாராக என்றும் கூறினார்.

உக்ரைன் மற்றும் இரஷ்யாவில் தொடர்ந்து நடைபெறும் மோதல்களை அறிந்து தான் வருந்துவதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், செபிக்கும் மனிதன் தீமை செய்வதில்லை. எனவே ஆலயத்தில் செபிக்க விரும்புவோருக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்றும், கிறிஸ்தவ ஆலயங்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ தாக்கப்படக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

பாலஸ்தீனம், இஸ்ரயேல், மியான்மார் மற்றும் எல்லா இடங்களிலும் நடக்கும் போர்களுக்கு முடிவு கட்ட நாம் தொடர்ந்து செபிப்போம் என்றும் மக்கள் அமைதியை விரும்புகின்றார்கள் எனவே இறைவன் நம் அனைவருக்கும் அமைதியை வழங்க செபிப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை.

உரோம் நகரத்தார், இத்தாலி மற்றும் பல நாடுகளில் இருந்து வரும் திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வட அமெரிக்கக் குருத்துவக் கல்லூரியின் புதிய மாணவர்களின் உருவாக்கும் பயணம் நன்முறையில் தொடர வாழ்த்தினார்.

மேலும் அவர்கள் தங்களது குருத்துவத்தை மகிழ்ச்சியுடன் வாழவும், செபம் மட்டுமே உண்மையான மகிழ்ச்சியைத் தரக்கூடியது என்னதை உணர்ந்து வாழவும் வலியுறுத்தி கூடியிருந்த திருப்பயணிகள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை எடுத்துரைத்து செப விண்ணப்பங்களை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 August 2024, 14:29