தேடுதல்

தூய யோசேப்பு சபை அருள்சகோதரர்களுடன் திருத்தந்தை  தூய யோசேப்பு சபை அருள்சகோதரர்களுடன் திருத்தந்தை   (VATICAN MEDIA Divisione Foto)

முன்மாதிரிகையாளர், பரிந்து பேசுபவர் தூய யோசேப்பு

நாசரேத்தூர் யோசேப்பின் மறைந்த வாழ்வு, தந்தைக்குரிய அன்பு, கடைநிலையில் இருப்போர் மேல் கவனம் ஆகிய பண்பு நலன்களானது துறவற வாழ்விற்கும் திருஅவையில் ஆற்றும் பணிக்கும் மிகமுக்கியமானதாக இருக்கும். - திருத்தந்தை

மெரினா ராஜ் – வத்திக்கான்

நன்றியுணர்வு மற்றும் பொறுப்புணர்வு எனும் இரண்டு பண்புநலன்கள் தூய யோசேப்பின் உருவத்தை அடையாளப்படுத்துகின்றன என்றும், திருக்குடும்பத்தை பாதுகாத்து வழிநடத்திய யோசேப்பு நமக்கு முன்மாதிரிகையாகவும், ஊக்குவிப்பாளராகவும், பரிந்து பேசுபவராகவும் இருக்கிறார் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 26 திங்கள் கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் தூய யோசேப்பு சபை அருள்சகோதரர்கள் ஏறக்குறைய 50 பேரை அவர்களது 18 ஆவது பொதுப்பேரவையை முன்னிட்டு சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

“உனக்குள் எழுந்த கடவுளின் அருள்கொடையினைத் தூண்டி எழுப்புமாறு” என்ற திருத்தூதர் பவுல் திமோத்தேயுவிற்கு எழுதிய இறைவார்த்தைகளை தங்களது பேரவையின் கருப்பொருளாகக் கொண்டிருக்கும் அச்சபையினரை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், சபையை உருவாக்கியவரின் புனிதத்துவம், சபையின் நோக்கம் மற்றும் வரலாறு, போன்றவற்றைக் கொடையாக பெற்றுள்ளீர்கள் என்றும், பொறுப்புக்களை உருவாக்கி அதற்காகத் தங்களையே அர்ப்பணித்து வாழ வேண்டும் என்று எடுத்துரைத்தார்.

நாசரேத்தூர் யோசேப்பின் பரிமாணங்களான மறைந்த வாழ்வு, தந்தைக்குரிய அன்பு, கடைநிலையில் இருப்போர் மேல் கவனம் ஆகிய மூன்று தலைப்புக்களில் தனது கருத்துக்களை அவர்களுடன்  பகிர்ந்து கொண்ட திருத்தந்தை அவர்கள், யோசேப்பின் பண்பு நலன்களானது துறவற வாழ்விற்கும் திருஅவையில் ஆற்றும் பணிக்கும் மிகமுக்கியமானதாக இருக்கும் என்றும் கூறினார்.

மறைந்த வாழ்வு

நமது நம்பிக்கை வாழ்க்கையையும் நமது துறவற அர்ப்பணிப்பையும் இயேசுவோடு அன்றாடம் இருப்பதன் வழியாக வேரூன்றச் செய்யலாம் என்றும், அவரின்றி நம்மால் இருக்க முடியாது, ஏனெனில் நாம் ஒவ்வொருவரும் பலவீனமானவர்கள், அவர் நம்மைத் தாங்காவிட்டால், நம்மால் நிற்கக்கூட முடியாது என்று கூறினார் திருத்தந்தை.

செப வாழ்வை மேம்படுத்திக்கொள்ளுங்கள், நல்ல செப வாழ்வை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள் என்றும், திருவருளடையாளங்களில் பங்கேற்றல், இறைவார்த்தையை வாசித்தல் மற்றும் தியானித்தல், திருநற்கருணை ஆராதனையில் பங்கேற்றல் போன்றவற்றைத் தனியாகவும் குழுவாகவும் செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

இறைவனின் கொடையான இறைமகன் இயேசுவைத் தனது வீட்டிற்குள் அனுமதித்தார் தூய யோசேப்பு என்று கூறிய திருத்தந்தை அவர்கள், இயேசுவோடு இருந்தார், அவரை வரவேற்றார், உரையாடினார், வாழ்க்கையை அவரோடு ஒவ்வொரு நாளும் பகிர்ந்துகொண்டார் என்றும் கூறினார்.

கடவுளுக்கு மிக அருகில் நாம் இருக்கும்போது நாம் பாவத்தில் விழ மாட்டோம் என்றும், நாம் பாவம் செய்யும்போது கடவுளை விட்டு தொலைவில் இருக்கின்றோம் என்றும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள்,  இளையோர்க்கு நாமல்ல கடவுள் தேவை என்று கூறினார்.     

தந்தைக்குரிய அன்பு

சபையின் நிறுவனரான தூய யோசேப்பு மரெல்லா அவர்கள் அருள்பணியாளர் ஸ்டீஃபன் டெலாட் அவர்களுக்கு எழுதியுள்ள வரிகளான ஏழைகள் இளைஞர்கள், கைவிடப்பட்டவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள், ஆகியோர் மீது தனிப்பட்ட இரக்கம் காட்டவேண்டும் என்பதை எடுத்துரைத்தார்.

தூய மரெல்லா தந்தைக்குரிய அன்போடு அனைவரையும் அரவணைத்தவர் என்றும், துன்புறும் மக்கள் மீது இரக்கம் காட்டி அவர்களது நிலைக்காக மிகவும் வருந்தும் தந்தையுள்ளம் படைத்தவர் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இளைஞர்களின் ஒருங்கிணைந்த நலனில் கவனம் செலுத்துவதோடு, அவர்களுடனும் அவர்களது குடும்பங்களுடனும் உறுதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், நல்ல உருவாக்குனர்களாக ஒவ்வொருவரின் காலங்களையும் சாத்தியங்களையும் அறிவுக்கூர்மையுடன் மதிக்க வேண்டும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

கடைநிலையில் இருப்போர் மேல் கவனம்

ஏழ்மையில் கடவுளின் உண்மையான இருப்பைக் கண்டறிந்த தூய மரெல்லா அதனை தனது சொந்தமாக்கிக் கொண்டார் என்றும், ஏழைகளை மிகவும் அன்பு செய்து அவர்களுக்குப் பணியாற்றினார் என்றும் கூறினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 August 2024, 13:25