தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் சிறுவன் ஒருவனுடன் திருத்தந்தை பிரான்சிஸ் சிறுவன் ஒருவனுடன்  (ANSA)

ஓஸ்தியா லீதோ மக்களைச் சந்தித்த திருத்தந்தை

போர், நெருக்கடிகள், சமூக சிக்கல்கள் நிறைந்த இக்காலத்தில் மக்களை சிரிக்க வைக்கும் கலைஞர்களின் பணிக்கு சிறப்பான நன்றி. - திருத்தந்தை

மெரினா ராஜ் – வத்திக்கான்

மக்கள் அனைவரையும் மகிழ்வுடன் சிரிக்க வைக்கும் சர்க்கஸ் கலைஞர்கள் மற்றும் கேளிக்கை பூங்காவின் பணியாளர்கள் அனைவருக்கும் தன் நன்றியினைத் தெரிவிப்பதாகவும், உண்மையான மகிழ்ச்சியை அவர்களிடத்தில் காண்பது குறித்து தான் மிகவும் ஆனந்தம் அடைவதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூலை 31 புதன்கிழமை உரோம் உள்ளூர் நேரம் பிற்பகல் 3 மணியளவில் ஓஸ்தியா லீதோ என்னும் இடத்தில் உள்ள நிலா பூங்காவின், கண்காட்சி மற்றும் சர்க்கஸ் சாகச விளையாட்டு வீரர்களையும் அவர்களது குடும்பத்தாரையும் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கலைஞர்கள் மற்றும் குழந்தைகளின் விளையாட்டு மற்றும் கண்காட்சிகளைப் பார்த்து மகிழ்ந்த திருத்தந்தை அவர்கள், எப்போதும் மகிழ்ச்சியுடனும், துணிவுடனும் முன்னோக்கிச் செல்லுங்கள், நான் உங்களோடு இருக்கின்றேன் என்ற ஊக்கமூட்டும் வார்த்தைகளை அவர்களுக்கு வழங்கினார்.

நிலா பூங்கா உங்களை அன்புடன் வரவேற்கின்றது என்ற பதாககைகளுடன் திருத்தந்தையை மிக ஆரவாரத்துடன் கலைஞர்கள் வரவேற்க, கேளிக்கைப் பூங்காவின் மையத்தில் வைக்கப்பட்டிருந்த அன்னை மரியாவின் திருஉருவத்தை ஆசீர்வதித்து அங்கு சிறிது நேர அமைதியில் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

போர், நெருக்கடிகள் மற்றும் சமூக சிக்கல்கள் நிறைந்த இக்காலத்தில் மக்களைச் சிரிக்க வைக்கும் கேளிக்கை பூங்கா கலைஞர்களின் பணிக்கு தனது சிறப்பான நன்றியினைத் தெரிவித்த திருத்தந்தை அவர்களுக்கு, குழந்தைகள் மற்றும் கலைஞர்கள் பலர் தங்களது பரிசுகளைக் கொடுத்து மகிழ்ந்தனர்.

கடந்த 50 வருடங்களாக இந்த கேளிக்கைக் கண்காட்சி மற்றும் சாகச விளையாட்டுகள் புரியும் மனிதர்களோடு பயணிக்கும் 81 வயதான அருள்சகோதரி Geneviéve, மற்றும் 56 வயது நிரம்பிய அவரது உடன்சகோதரி அன்னா அமேலியாவைச் சந்தித்து வாழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவின் சிறிய சகோதரிகள் சபையைச் சார்ந்த அருள்சகோதரி Geneviève Jeanningro அவர்கள், 50 வருடங்களாக இம்மக்களுடன் இருந்து பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  

உரோம் நகரில் இருந்து ஒரு மணி நேர தூர தொலைவில் இருக்கும் ஓஸ்தியா லீதோவின் நிலா பூங்காவிற்கு வருகை தந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பெருந்தொற்று நோய்க்கு முன்பு அதாவது 2015 ஆம் ஆண்டும் ஒருமுறை இம்மக்களை சந்தித்து இருக்கின்றார். அவ்வகையில் இம்முறை இரண்டாவது முறையாக இம்மக்களைச் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற்பகல் 3 மணிக்கு கேளிக்கை பூங்காவிற்கு சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மாலை 4.55 மணிக்கு வத்திக்கான் திரும்பினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 August 2024, 15:24