நம்பிக்கையின் அடையாளங்களாகத் திகழ்ந்திடுங்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நம்பிக்கை கொண்டுள்ள நீங்கள், அனைவருக்கும் நம்பிக்கையின் அடையாளங்களாக இருங்கள் என்றும், அமைதி, உடன்பிறந்த உறவு, மரியாதை ஆகியவற்றின் வார்த்தைகள் மற்றும் அடையாளங்களை வளர்க்கும் ஒரு பிரசன்னமாக இருங்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆகஸ்ட் 28, இப்புதனன்று, அரபு மறைமாநிலத்தின் இலத்தீன் ஆயர் பேரவை உறுப்பினர்களை அவர்களது ஆண்டின் நிறையமர்வு கூட்டத்தை முன்னிட்டு திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, உங்களுக்கும் நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தலத்திருஅவைகளுக்கும் எனது நெருக்கத்தை நேரடியாக வெளிப்படுத்த இன்று எனக்கொரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கு மிகவும் வலுவான பதற்றத்தின் தருணங்களை அனுபவித்து வருகிறது என்றும், இது சில சூழல்களில் வெளிப்படையான மோதல்கள் மற்றும் போர்களுக்கு வழிவகுக்கிறது என்று கவலையுடன் குறிப்பிட்ட திருத்தந்தை, இந்த மோதல், ஒரு சமமான தீர்வைக் காண்பதற்குப் பதிலாக, தொடர்ந்து முன்னேறுவது போன்று தெரிகிறது என்றும், அது முழு பகுதியையும் தீயைப்போல் பற்றிக்கொண்டு பரவிவருகிறது என்றும் வேதனை தெரிவித்தார்.
மேலும் இத்தகையதொரு சூழல் ஆயிரக்கணக்கான இறப்புகளையும், பேரழிவினையும், துன்பங்களையும் கசப்பு மற்றும் வெறுப்புணர்வுகளையும் பரவச்செய்துள்ளது என்று குறிப்பிட்ட திருத்தந்தை, இது புதிய துயரங்களுக்கான களத்தை தயார்படுத்துகிறது என்றும் கூறி வருத்தமடைந்தார்.
இதுகுறித்து இன்று உங்களுடன் பேசுவதற்கு எனக்கு அரியதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று உரைத்த திருத்தந்தை, நீங்கள் அனைவரோடும் மரியாதையுடனும் நேர்மையுடனும் உரையாடுவதன் வழியாக, கடவுள்மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு சாட்சியாக இருப்பதற்கான பலத்தை அவர் எப்போதும் உங்களுக்கு அருள்வாராக! என்றும் அவர்களை வாழ்த்தினார்.
குறிப்பாக, கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக இருக்கும் சூழலில், அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்குப் போதுமான கிறிஸ்தவ உருவாக்கத்தை உறுதி செய்வதற்கான சிறந்த மற்றும் மிகவும் பயனுள்ள வழியை நீங்கள் காணுங்கள் என்றும் அவர்களிடம் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, அதனால் நம்பிக்கையின் உளநிறைவை அறிந்துகொள்வதற்கும், உள்ளுணர்வு சிந்தனைகளுடன் இணைந்துகொள்வதற்கும், கலாச்சாரத்துடன் கூடிய மோதலில் நம்பிக்கை பலப்படுத்தப்படுவதற்கும், கிறிஸ்தவ நம்பிக்கைக்கான காரணங்களைக் கூறுவதற்கு வழிவகை செய்வதற்கும் ( காண்க.1 பேது 3:15) இந்த உருவாக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் எடுத்துக்காட்டினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்