தேடுதல்

திருத்தந்தையுடன் Beniamino Zuncheddu திருத்தந்தையுடன் Beniamino Zuncheddu  (VATICAN MEDIA Divisione Foto)

திருத்தந்தை பிரான்சிஸை சந்தித்த Beniamino Zuncheddu

1991 ஆம் ஆண்டு மூன்றுபேரைக் கொன்றவர் என்று கொலைக் குற்றம் சாட்டப்பட்டு 33 ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்த Beniamino Zuncheddu அவர்கள் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விடுதலை செய்யப்பட்டார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

33 ஆண்டுகளுக்கு முன்பு கொலையாளி என்று தவறாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து அண்மையில் விடுதலையாகி இருக்கும் Beniamino Zuncheddu அவர்களை சந்தித்து, அவர் எழுதிய புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 23 வெள்ளிக்கிழமை திருப்பீட நூலகத்தில் 60 வயதுடைய சர்தேனியாவின் புருசேய்  பகுதியைச் சார்ந்த Beniamino Zuncheddu அவர்களை சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நான் நிரபராதி (“I Am Innocent”) என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள புத்தகத்தை பெற்றுக்கொண்டார்.

1991 ஆம் ஆண்டு மூன்றுபேரைக் கொன்றவர் என்றுக் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு 33 ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்த Beniamino Zuncheddu  அவர்கள் 2024 ஆம் ஆண்டு  ஜனவரி மாதம் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் தான் அனுபவித்த சிரமங்கள் மற்றும் துன்பங்கள் அனைத்தையும் “நான் நிரபராதி” என்ற தலைப்பில் புத்தகமாக படைத்துள்ளார்.

திருப்பீட நூலகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து அப்புத்தகத்தை வழங்கிய Zuncheddu அவர்கள், சிறைச்சாலையில் கடவுளை முழுமனதாக நம்பி ஆற்றல் பெற்றுக்கொண்டதாகவும், தன் குடும்பத்தை நினைத்துக் கொண்டதாகவும் பகிர்ந்துகொண்டார்.

33 ஆண்டுகள் சிறைத்தண்டனையில் தான் 3 வெவ்வேறு சிறைகளில் இருந்ததாகவும், அச்சிறைகளில் உள்ள அறைகள் அனைத்தும் மிகச்சிறியதாக இருந்ததாகவும் அப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள Zuncheddu அவர்கள், சில சமயங்களில் 11 பேருடன் அச்சிறு அறைகளில் தான் வாழ நேர்ந்ததாகவும் எடுத்துரைத்துள்ளார்.

குளித்தல், தூங்குதல் என அனைத்திற்கும் மிக அதிகமான துன்பங்களை அனுபவித்ததாக சுட்டிக்காட்டியுள்ள Zuncheddu அவர்கள், மோசமான மனிதாபிமானமற்ற சூழலில் தான் இருந்தாலும் உடன் இருந்தவர்களுக்கு தன்னால் இயன்ற உதவியைச் செய்ய முடிந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 August 2024, 11:48