தேடுதல்

செய்தி வழங்கும் திருத்தந்தை  செய்தி வழங்கும் திருத்தந்தை   (ANSA)

கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒவ்வொரு மனிதரின் மாண்பையும் காக்கவேண்டும்

எந்தத் திருச்சபையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மனித மாண்பைக் காப்பதில் மீண்டும் உறுதியேற்க வேண்டும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மனிதராக இருப்பதன் அர்த்தம் என்ன என்பது பற்றிய தற்கால கேள்விகளின் பார்வையில் அனைத்துக் கிறிஸ்தவர்களும் அவர்கள் எந்தத் திருச்சபையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், ஒவ்வொரு மனிதரின் உள்ளார்ந்த மாண்பை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 28, இப்புதனன்று கிறிஸ்தவர்களுக்கு இடையேயான கருத்தரங்கம் ஒன்றின் பங்கேற்பாளர்களுக்கு அனுப்பிய செய்தியொன்றில் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ள திருத்தந்தை, சமகால மானுடவியலில் ஒரு முழு அளவிலான புரட்சியை எடுத்துக் காட்டியுள்ளார். குறிப்பாக,  மனித அடையாளம், உலகம் மற்றும் சமூகத்தில் மனிதரின் பங்கு மற்றும் ஒவ்வொரு மனிதரின் ஆழ்நிலைத் தொழில் பற்றிய மறுபரிசீலனை ஆகியவற்றைக் குறித்துப் பேசியுள்ளார்.

மனித இயல்பைப் பற்றிய அடிப்படைக் கேள்விகளின் அடிப்படையில், இன்றைய ஆண்களும் பெண்களும் தங்கள் இருப்பின் அடிப்படை அனுபவங்களான, அதாவது, உருவாக்குவது, பிறப்பது, இறப்பது போன்றவற்றைப் புரிந்து கொள்ளும் விதம் கட்டமைப்பு ரீதியாக மாறுகிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மற்றும் அறிவியலில் அசாத்தியமான முன்னேற்றங்கள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப புரட்சியால் இத்தகைய கேள்விகள் உந்தப்பட்டு வருகின்றன என்றும் தனது செய்தியில் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார் திருத்தந்தை.

ஒரு 'மானுடவியல் புரட்சி'

இந்த மானுடவியல் புரட்சியின் எதார்த்தம் என்பது, ஆழமான பிரதிபலிப்பு, சிந்தனையை புதுப்பிக்கும் திறன் மற்றும் செய்ய வேண்டிய தேர்வுகள் என்று கூறியுள்ளார் திருத்தந்தை.

'மனிதர் என்பதன் அர்த்தம் என்ன' என்ற மையக்கருத்தில் நிகழும் இவ்வாண்டு கருத்தரங்கின் ஏற்பாட்டாளர்களை வாழ்த்துவதாகக் கூறியுள்ள திருத்தந்தை, இதுவொரு சவால் என்றும், இது அனைத்து கிறிஸ்தவர்களையும் அவர்கள் எந்தத் திருச்சபையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களைப் பாதிக்கிறது என்றும், மானுடவியல் பிறழ்வு காலத்தில், கத்தோலிக்கர்களும் ஆர்த்தடாக்ஸ் சபையினரும், இந்தப் சிந்தனையை ஒன்றாக ஊக்குவிப்பதை பார்ப்பது மிகவும் ஆர்வமிக்கதாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மனித மாண்பை உறுதிப்படுத்துகிறது

எந்தத் திருச்சபையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கிறிஸ்தவர்கள் மனித மாண்பைக் காப்பதில் மீன்றும் உறுதியேற்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கூறியுள்ள திருத்தந்தை, இத்தாலிய நகரமான திரானியின் 11 ஆம் நூற்றாண்டின் பாதுகாவலர் புனித நிக்கோலா பெல்லெக்ரினோவின் பரிந்துரையின் வழியாகவும், தனது இறைவேண்டல் வழியாகவும் இம்மாநாட்டின் பங்கேற்பாளர்களுடன் தானும் ஒன்றித்திருப்பதாகக் கூறி தனது செய்தியை நிறைவு செத்துள்ளார்.

ஆகஸ்ட் 28 முதல் 30 வரை இத்தாலிய நகரமான திரானியில் இந்தக் கருத்தரங்கு நடைபெறுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 August 2024, 12:25