கிரீஸ் நாட்டில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்காகத் திருத்தந்தை செபம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஆகஸ்ட் 15, இவ்வியாழனன்று, தனது சிறப்பு மூவேளை செப உரைக்குப் பின்பு, கிரீஸ் நாட்டில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களை நினைகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அம்மக்களுடன் தான் நெருக்கமாக இருப்பதாகவும், அவர்களுக்காக இறைவேண்டல் செய்வதாகவும் உறுதியளித்தார்.
இந்தக் காட்டுத்தீயால் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டுள்ள வேளை, பல குடும்பங்கள் வீடற்ற நிலையில் உள்ளன என்றும், ஆயிரக்கணக்கான மக்கள் பயங்கரமான துயரங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்றும் குறிப்பிட்ட திருத்தந்தை, பெரும் பொருள் சேதத்திற்கும் அதிகமாக, சுற்றுச்சூழல் பேரழிவு உருவாக்கப்படுகிறது என்றும் பெரிதும் கவலை தெரிவித்தார்.
கட்டுக்குள் காட்டுத்தீ
இதற்கிடையில், கிரீஸ் நாட்டில் பரவி வரும் காட்டுத்தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இந்தத் தீ விபத்தின்போது, ஏறக்குறைய 700 தீயணைப்பு வீரர்கள், 29 தீயணைப்பு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், 190 தீயணைப்பு வாகனங்கள், ஆயுதப்படைகள் மற்றும் தன்னார்வலர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, கிரீஸ் நாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் சிவில் பாதுகாப்பு பொறிமுறையை செயல்படுத்தியது. இதன் காரணமாக, உடனடியாக இத்தாலி, பிரான்ஸ், செக் குடியரசு மற்றும் ருமேனியாவிலிருந்து கூடுதல் உதவிகளைப் பெறமுடிந்தது.
ஆகஸ்ட் 11-ஆம் தேதி ஞாயிறன்று தொடங்கிய இந்தக் காட்டுத்தீ பல வீடுகளையும் வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளது. மேலும் பல ஹெக்டேர் வறண்ட காடுகள் தீக்கு இரையாகி உள்ளன. காட்டுத்தீயால் ஏற்பட்ட கடுமையான புகையால் அவ்வட்டார மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எதனால் இந்தக் காட்டுத் தீ ஏற்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்