தேடுதல்

திருத்தந்தையும் அருள்பணி ஜேம்ஸ் மார்ட்டினும் திருத்தந்தையும் அருள்பணி ஜேம்ஸ் மார்ட்டினும் 

தன்பாலின ஈர்ப்புடையோரின் கருத்தரங்கிற்கு திருத்தந்தை செய்தி

“Outreach” என்ற பெயரில் கருத்தரங்குகளை தன்பாலின ஈர்ப்புடைய மக்களுக்கு நடத்தி அவர்களிடையே அமெரிக்க ஐக்கிய நாட்டில் மறைப்பணியாற்றுகிறார் அருள்பணி மார்ட்டின்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

தன்பாலின ஈர்ப்புடையோர், இருபாலின நடவடிக்கையாளர்கள், திருநங்கையர், எப்பாலினத்தையும் சேராதோர் என்ற  இம்மக்களுக்கு அமெரிக்க ஐக்கிய நாட்டில் தலத்திருஅவையால் நடத்தப்படும் கருத்தரங்கிற்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பாலின முரண்பாடுகள் காரணமாக சமூகத்தில் இயல்பான வாழ்வை வாழமுடியாது இருக்கும் இம்மக்களுடன் பணியாற்றும் இயேசு சபை அருள்பணி James Martin அவர்களால் அமெரிக்க ஐக்கிய நாட்டின் வாஷிங்டனில் ஏற்பாடுச் செய்யப்பட்ட “Outreach”, அதாவது, ‘தேடி உதவுதல்’ என்ற பெயரிலான கருத்தரங்கிற்கு செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை, இக்கருத்தரங்கில் பங்குகொள்ளும் அனைவரோடும் தான் செபத்தில் ஒன்றித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Georgetown பல்கலைக்கழகத்தில் இம்மாதம் 2ஆம் தேதி முதல் 4 வரை இடம்பெறும் இக்கருத்தரங்கில் வாஷிங்டன் பேராயர், கர்தினால் Wilton Gregory அவர்கள் திருப்பலி நிறைவேற்ற உள்ளது குறித்து தான் மகிழ்வதாகவும், பங்கேற்பாளர்கள் அனைவருடனும் செபத்தில் இணைந்திருக்கும் அதேவேளை, இயேசுவின் அருளையும் அன்னைமரியாவின் அக்கறையையும் அவர்களுக்காக இறைஞ்சுவதாகவும் தெரிவித்துள்ளார்.

“Outreach” என்ற பெயரில் கருத்தரங்குகளை தன்பாலின ஈர்ப்புடைய மக்களுக்கு என நடத்தி அவர்களிடையே அமெரிக்க ஐக்கிய நாட்டில் மறைப்பணியாற்றிவரும் இயேசு சபை அருள்பணி Martin அவர்கள் கேட்டுகொண்டதற்கு இணங்க இக்கருத்தரங்கிற்கு தன் செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தன்பாலின ஈர்ப்புடைய மக்கள் மீது இறைவன் கொண்டிருக்கும் நெருக்கம், இரக்கம் மற்றும் பாசத்தை அம்மக்களிடம் தெரிவிக்குமாறு திருத்தந்தை தன் செய்தியில் அருள்பணி மார்ட்டின் அவர்களிடம் விண்ணப்பித்துள்ளார்.

“Outreach” என்ற பெயரில் நடத்தப்படும் கருத்தரங்குகளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செய்தி வழங்குவது இது நான்காவது முறையாகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 August 2024, 15:07