தேடுதல்

பூமியின் அழுகுரலை மனதில்கொண்டு இறைவேண்டலை எழுப்ப...

திருத்தந்தை பிரான்சிஸ் : தட்பவெப்ப நிலை மாற்றம், மாசுக்கேடு, உயிரினப் பன்மியத்தின் அழிவு போன்றவைகளை உள்ளடக்கிய சுற்றுச்சூழல் நெருக்கடி நம் பதிலுக்குக் காத்திருக்கிறது,

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

பூமியின் அழுகுரலை மனதில்கொண்டு அதற்காக நம் இறைவேண்டலை எழுப்புவோம் என செப்டம்பர் மாத செபக்கருத்தில் அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பூமி கிரகத்தின் வெப்பநிலையை நாம் கணக்கெடுத்துப் பார்ப்போமானால், அதற்கு காய்ச்சல் இருப்பதை நாம் அறிவோம், மற்றும் நாம் நோயுறுவதுபோல் அதுவும் நோயாளியாக இருக்கிறது என தன் செப்டம்பர் மாத செபக்கருத்தில் எடுத்துரைக்கும் திருத்தந்தை, பூமியின் இந்த வேதனைக் குரலுக்கு நாம் செவிமடுக்கிறோமா என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார்.

பூமியின் வேதனைக் குரலுக்கு நாம் செவிமடுக்கிறோமா என்ற கேள்வியை கேட்கும் திருத்தந்தை, மேலும், இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களின் குரலுக்கு நம் செவிகள் திறக்கின்றனவா என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார்.

இத்தகைய பேரிடர்களால் அதிக அளவில் துன்புறுவது ஏழைகளே எனக் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ், இவ்வாறு பாதிக்கப்படும் மக்களே வெள்ளப்பெருக்காலும், வெப்ப காற்று அலைகளாலும், வறட்சியாலும் தங்கள் சொந்த குடியிருப்புக்களைவிட்டு வேறு இடங்களுக்கு குடிபெயர கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் எனவும் கூறியுள்ளார்.

தட்பவெப்ப நிலை மாற்றம்,   மாசுக்கேடு, உயிரினப் பன்மியத்தின் அழிவு போன்றவைகளை உள்ளடக்கிய சுற்றுச்சூழல் நெருக்கடி நம் பதிலை, அதாவது இயற்கை சுற்றுச்சூழல் தொடர்புடையதற்கு மட்டுமல்ல, சமூக, பொருளாதார, அரசியல் சார்புடையதற்கும் நம் பதிலை எதிர்பார்க்கிறது என கூறியுள்ளார்.

நாம் ஒவ்வொருவரும் நம் தனிப்பட்ட மற்றும் சமூக பழக்கவழக்கங்களை மாற்றியமைத்து, ஏழ்மைக்கு எதிராகப் போராடவும், இயற்கையை பாதுகாக்கவும், நம்மை அர்ப்பணிக்கவேண்டும் என தன் செய்தியில் அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வுலகின், மற்றும், காலநிலை மாற்றம் மற்றும் இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் அழுகுரலுக்கு நாம் ஒவ்வொருவரும் செவிமடுக்கவேண்டும் என செபிப்பதுடன், நாம் வாழும் இவ்வுலகின் மீதான அக்கறைக்கு நம்மை அர்ப்பணிப்போம் என்ற விண்ணப்பதுடன் தன் செப்டம்பர் மாத இறைவேண்டலுக்கான விண்ணப்பத்தை நிறைவுச் செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 August 2024, 16:25