தேடுதல்

இறைவழிபாடு இறைவழிபாடு  (ANSA)

இத்தாலிய திருவழிபாட்டு வாரத்திற்கு திருத்தந்தையின் செய்தி

திருத்தந்தை பிரான்சிஸ் : திருவழிபாட்டுச் செபங்கள் விசுவாசிகள் அனைவரையும் ஒரே உடலாக இணைத்து திருஅவையின் ஒன்றிணைந்த செபத்தில் பங்குபெற வைக்கிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருவழிபாட்டு செபம் என்பது, தூய ஆவியாரில் இறைத்தந்தையை நோக்கிய இயேசுவின் செபத்தில் பங்கேற்பதாகும் என வட இத்தாலியில் இடம்பெறும் 74வது தேசிய திருவழிபாட்டு வாரத்திற்கு அனுப்பிய செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Modena-Nonantola என்ற வட இத்தாலிய நகரில் “கடவுளின் பெயரை அறிக்கையிடும் உதடுகளின் கனி” என்ற தலைப்பில் இடம்பெறும் தேசிய திருவழிபாட்டு வாரத்திற்கு திருத்தந்தையின் செய்தியை கையெழுத்திட்டு அனுப்பியுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

பொதுவில் இடம்பெறும் திருவழிபாட்டு இறைவேண்டல், வழிபாட்டு இசை, மௌனம் காத்தல் மற்றும் திருவழிபாட்டுப் பணிகள் என்பவைகளின் முக்கியத்துவத்தைக் குறித்து ஆராய்ந்துவரும் இந்த 74வது தேசிய திருவழிபாட்டு வாரத்திற்கென அனுப்பப்பட்டுள்ள திருத்தந்தையின் செய்தி, தனியுரிமைக் கோட்பாட்டைக் கடந்து செல்லும் பகிரும் அனுபவமாக திருவழிபாட்டு செபம் உள்ளது என்பதை விவரிக்கிறது.

தனிமனித தேவைகளை மையமாகக் கொண்ட தனியார் செபங்களைப்போல் அல்லாமல், திருவழிபாட்டுச் செபங்கள் விசுவாசிகள் அனைவரையும் ஒரே உடலாக இணைத்து திருஅவையின் ஒன்றிணைந்த செபத்தில் பங்குபெற வைக்கிறது என தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களில், அந்த வழிபாட்டுமுறைகளின் வழி கிட்டும் அருள் அதில் பங்குபெறும் அனைவரின் வாழ்வையும் தொடுகிறது என்ற திருத்தந்தை, தங்கள் தனியுரிமை கோட்பாடுகளை விட்டுவிட்டு திருஅவையின் செபத்தின் பகிரும் தனித்தன்மையில் பங்குபெறும் அனைத்து திருஅவை அங்கத்தினர்களுக்கும் இந்த அருள் கிட்டுவதாக உள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.

திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களில் திருஇசையின் முக்கியத்துவம், திருவழிபாட்டில் இறைவனின் குரலுக்கு செவிமடுக்க உதவும் மௌனத்தின் அவசியம், தூய ஆவியார் தன் பல்வேறு கொடைகளை வழங்கும் திருவழிபாட்டுப் பணிகள் என்பவை குறித்தும் தன் சிந்தனைகளை, வடஇத்தாலியில் இடம்பெறும் தேசிய திருவழிபாட்டு வாரத்திற்கு என அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 August 2024, 14:35