அமைதிக்காக இறைவனிடம் அருள்வேண்டுவோம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது அணுகுண்டு வீசப்பட்டதன் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வேளையில், குண்டு வெடிப்பு மற்றும் அனைத்து போர்களிலும் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக உக்ரைன், மத்திய கிழக்கு, பாலஸ்தீனம், இஸ்ரயேல், சூடான் மியான்மர் ஆகிய நாடுகளின் அமைதிக்காக இறைவனிடம் தொடர்ந்து அருள்வேண்டுவோம் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆகஸ்ட் 11 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செபஉரையைத் தொடர்ந்து வெளியிட்ட செப விண்ணப்பங்களின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய நாளில் திருஅவை நினைவுகூரும் தூய கிளாராவின் நாளை நினைவுகூர்ந்தார்.
மேலும் தூய கிளாராவின் திருவிழாவினைச் சிறப்பிக்கும் அனைத்து கிளாரா சபை துறவிகளுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த திருத்தந்தை அவர்கள், குறிப்பாக தனக்கு மிக நெருக்கமான நட்புறவுடைய வால்லேகுளோரியா தூய கிளாரா சபை துறவியருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்ந்தார்.
பிரேசிலில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக செபிப்போம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், இத்தாலி மற்றும் உலகின் பல நாடுகளில் இருந்து வந்திருந்த திருப்பயணிகள் அனைவரையும், குறிப்பாக அசிசியிலிருந்து பல நாட்கள் நடந்து திருப்பயணமாக உரோம் நகரை வந்தடைந்திருக்கும் பெர்கமோவின் இளங்குருமட மாணவர்களையும் வாழ்த்தினார்.
மேலும் அமலோற்பவ அன்னை சபை மாணவர்களையும், பிரேசில் நாட்டவர்களையும் வாழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வழக்கம்போல் தனக்காக செபிக்க மறக்க வேண்டாம் என்று திருப்பயணிகளிடம் கேட்டுக்கொண்டு ஞாயிறு மதிய வணக்கத்தினைத் தெரிவித்து தனது செப விண்ணப்பங்களை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்