திருநற்கருணையினால் அன்பின் மறைப்பணியாளர்களாக மாறுகின்றோம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
திருநற்கருணையில் இருக்கும் இயேசுவை ஒருமுறை சந்தித்து, நம் கைகளால் உணர்ந்து, அவரைப் பெற்றுக்கொண்டோமானால், அவரை நம்முடனே வைத்துக்கொள்ள நம்மால் முடியாது. மாறாக, பிறருடன் பகிர்ந்து வரது அன்பின் மறைப்பணியாளர்களாக நாம் மாறுகின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மடகஸ்காரில் நடைபெற உள்ள தேசிய நற்கருணை மாநாட்டை முன்னிட்டு Morondava மறைமாவட்ட ஆயரும், மடகஸ்கார் ஆயர் பேரவையின் தலைவருமான ஆயர் Marie Fabien Raharilamboniaina விற்கு ஆகஸ்ட் 24 சனிக்கிழமை அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்தவர்களை தங்களது அடிப்படை வாழ்க்கைக்குத் திரும்ப கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட முயற்சி தேசிய நற்கருணை மாநாடு என்றும், திருநற்கருணை ஆராதனையின் அர்த்தத்தையும், கிறிஸ்துவுடன் நேரத்தை செலவிடுவதற்கான சுவையையும் மீண்டும் கண்டறிய இம்மாநாடு உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒருங்கிணைந்த ஆயர் பேரவையின் முடிவில் நடைபெறும் இந்த தேசிய நற்கருணை மாநாடானது, திருநற்கருணையில் இருக்கும் இயேசுவை சந்தித்தல், அவரிடம் செபித்தல், நம்மைக் கையளித்து அவரைப் பின்பற்றுதல் போன்றவற்றை மீண்டும் கண்டறிய இம்மாநாடு உதவட்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
திருநற்கருணை நமது அண்டை அயலாரை அன்பு செய்வதற்கான உறுதியான அர்ப்பணிப்பை வலியுறுத்துகின்றது என்று கூறியுள்ள திருத்தந்தை அவர்கள், ஏனெனில் நமது இதயத்தை நாம் மூடி வைத்திருந்தால் நாம் வாழ்கின்ற வாழ்க்கையின் அர்த்தத்தை முழுமையாக நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நம்பிக்கையை ஒரு பெரிய சவாலாக கருதும் நேரத்தில் 100ஆவது ஆண்டைக் கொண்டாடும் இளையோர் நற்கருணை இயக்கத்தை சார்ந்த உறுப்பினர்களை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், நமது உடன்வாழும் சகோதர சகோதரிகள் அனைவரும் நற்கருணையில் இருக்கும் கடவுளின் அனுபவத்தைப் பெற உதவவேண்டும் என்றும் கூறினார்.
தங்கள் வாழ்க்கையைக் கடவுளுக்குக் காணிக்கையாக்கி, பலிபீடத்தின் மீதுள்ள இயேசுவோடு தங்களை இணைக்கவும், அதன்வழியாக அவரை எப்போதும் சிறப்பாக அறிந்துகொள்ளவும், அன்புசெய்யவும், பணியாற்றவும் நம்முடன் வாழும் பிறருக்கு நாம் உதவவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.
சோதனைகளை அனுபவித்து துன்புறும் மக்கள், தங்களது வாழ்க்கைப்பாதை மிகவும் கடினமானது, மகிழ்ச்சியைத் தராது என்ற எண்ணத்துடன், வருங்காலத்தை சந்தேகம் மற்றும் அவநம்பிக்கையுடன் பார்க்கும் மக்களாக மாறி விடுகின்றனர் என்றும், அத்தகைய மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டி கடவுளுடைய இரக்கத்திற்கும், இரக்கமுள்ள அன்பிற்கும் சாட்சிகளாக இருங்கள் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்