மோதல்கள் முடிவுக்கு வருவதால் மட்டும் அமைதி வருவதில்லை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
2025 யூபிலி ஆண்டின் ஜனவரி முதல் தேதி சிறப்பிக்கப்படும் உலக அமைதி தினத்திற்கான தலைப்பாக, ‘எங்கள் குற்றங்களை மன்னியும்: எமக்கு உம் அமைதியை அருளும்,' என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துள்ளார்.
திருத்தந்தையின் இத்தலைப்பு பற்றி தன் கருத்துக்களை வெளியிட்டுள்ள ஒருங்கிணைந்த மனித வளர்ச்சிக்கான திருப்பீடத்துறை, தனிப்பட்ட, தல மற்றும் பன்னாட்டு அளவிலான உண்மை மனமாற்றத்தின் வழியாகவே உண்மை அமைதி மலரும் என தெரிவித்துள்ளது.
மோதல்கள் முடிவுக்கு வருவதால் மட்டும் அமைதி வருவதில்லை, மாறாக, காயங்கள் குணப்படுத்தப்பட்டு மனிதனின் மாண்பு ஏற்றுக்கொள்ளப்படும்போதே உண்மை அமைதி பிறக்கிறது என தன் செய்தியில் கூறியுள்ளது இத்திருப்பீடத்துறை.
திருத்தந்தையின் Laudato sí மற்றும் Fratelli tutti ஏடுகளினால் தூண்டப்பட்ட திருத்தந்தையின் இவ்வுலக அமைதி தின தலைப்பு, யூபிலி ஆண்டின் மையக்கருத்தான நம்பிக்கை மற்றும் மன்னிப்பை தன்னுள் கொண்டுள்ளது எனக்கூறும் ஒருங்கிணைந்த மனித வளர்ச்சிக்கான திருப்பீடத்துறை, இந்த யூபிலி ஆண்டில் நாம் மனமாற்றத்தையும், ஒப்புரவையும் அமைதியையும் கொணர அழைக்கப்படுகிறோம் என தெரிவித்துள்ளது.
மோதல்களும் சமூகப்பாவங்களும் மனித குலத்தை துன்புறுத்திவரும் இன்றைய காலக்கட்டத்தில் யூபிலி ஆண்டின் நம்பிக்கையின் ஒளியில் ஆன்மீக, சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார மாற்றங்களை நோக்கி நாம் வழிநடத்தப்படுவோம் எனற நம்பிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனவரி முதல்தேதி, அதாவது இறைவனின் தாயாம் அன்னை மரியாவின் விழாவன்று அனைத்துலக அமைதி தினம் திருஅவையில் சிறப்பிக்கப்படும் வழக்கத்தை 1967ஆம் ஆண்டு புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள் துவக்கிவைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்