தேடுதல்

கர்தினால் பியெத்ரோ பரோலின். கர்தினால் பியெத்ரோ பரோலின். 

நெருக்கத்தையும் அமைதியையும் கொண்டு வரும் திருப்பயணம்

திருத்தந்தை தனது திருத்தூதுப் பயணத்தின் முதல்நம்பிக்கையாக தனது இதயத்தில் சுமந்து செல்வது சந்திப்பு, அதாவது தான் செல்லும் நாடுகளின் மக்களை நேரில் சந்திப்பது ஆகும்.

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

இந்தோனேசியா, பாப்புவா நியூ கினி,  கிழக்கு திமோர், சிங்கப்பூர் ஆகிய நான்கு நாடுகளும் புனித பேதுருவின் பிரதிநிதியான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வரவேற்க தயாராகி வரும் நிலையில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நீண்ட திருப்பயணத்தின் போது, அவரை சந்திப்பதற்கான மக்களுடைய எதிர்பார்ப்பு மற்றும் விருப்பத்தைப் பற்றி எடுத்துரைத்தார்.

கிறிஸ்துவின் ஒளியை தாங்கி வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வருகைக்காக, செப்டம்பர் 2 முதல் 13 வரை ஆசியா மற்றும் ஒசீயானியாவின் நான்கு நாடுகளும் காத்திருக்கும் நிலையில் உடன்பிறந்த உணர்வையும், ஒன்றிப்பையும் கட்டியெழுப்பும் உரையாடலின் சாட்சியாக திருத்தந்தை இருப்பார் என்று தெரிவித்ததுடன், திருத்தந்தையின் 45வது திருத்தூதுப் பயணத்தை முன்னிட்டு வத்திக்கான் ஊடகத்திடம் உரைத்த கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், போர்களாலும், வன்முறைகளாலும் காயப்பட்ட இவ்வுலகத்தில், சந்திப்புகள், நேர்மையான உறவுகள் மற்றும் சுயநலத்தை வெல்வதன் வழியாகவே அமைதியானது கட்டமைக்கப்படுகிறது என்றும் திருத்தூதுப் பயணத்தின் முக்கிய அம்சம் இந்த உறவு ஒன்றிப்பே என்றும் அடிக்கோடிட்டு காட்டினார்.

திருத்தந்தை தனது திருத்தூதுப் பயணத்தின் முதல் நம்பிக்கையாக தனது இதயத்தில் சுமந்து செல்வது சந்திப்பு, அதாவது தான் செல்லும் நாடுகளின் மக்களை நேரில் சந்திப்பது ஆகும் என்றுரைத்த கர்தினால், சந்திப்பானது திரு அவையின் பாங்கினை மிகவும் அழகாக வகைப்படுத்தக்கூடிய, உறவு ஒன்றிப்பின் கருப்பொருளை வெளிப்படுத்துவதாகும் என்றும் கூறினார்.

மேலும் திருத்தூதுப் பயணங்கள் ஒரு குறிப்பிடத்தக்க வெளிப்பாடு என்றும், அதாவது செவிமடுத்தலுக்கான உறவு ஒன்றிப்பையும், கஷ்டங்கள் மற்றும் துன்பங்களை பகிர்ந்து கொள்வதற்கான உறவு ஒன்றிப்பையும், நற்செய்தியின் மகிழ்ச்சி, ஆறுதல் மற்றும் நம்பிக்கையைக் கொண்டு வரும் வெளிப்பாடு ஆகும் என்ற கர்தினால் பரோலின் அவர்கள், திருத்தந்தை அவர்கள் பார்வையிடும் தேசங்கள், பல கலாச்சாரங்கள், பிரிவுகள் மற்றும் மத மரபுகளால் வகைப்படுத்தப்படுகின்றன, அவை உண்மையிலேயே பன்மைத்துவ யதார்த்தங்கள் எனவும் எடுத்துரைத்தார்.

இந்தோனேசியா

அதிலும் குறிப்பாக இந்தோனேசியாவில் மதங்களுக்கு இடையிலான உறவு ஒன்றிப்பையும் குறித்து காட்டுவதுடன், திருத்தந்தை அவர்களின் வார்த்தைகளும் செயல்களும், தீவிரவாத சோதனைகளுக்கும், எந்த ஓர் அழுத்தத்திற்கும் இந்த ஒன்றிப்பின் பாதையை விட்டுவிடாத ஒரு வலுவான அழைப்பாகவும், உடன்பிறந்த உணர்வு ஒன்றிப்பையும், வேற்றுமையில் ஒற்றுமையையும் நிலைநிறுத்தவும், ஊக்குவிக்கவும் உதவியாகவும் இருக்கும் என்றும் கர்தினால் அவர்கள் தெரிவித்தார்.

பாப்புவா நியூ கினியா

வியத்தகு வளங்களையும் அழகினையும் கொண்ட பாப்புவா நியூ கினியா நாடானது அநீதி, ஊழல், அரசியல் மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் பெரும் வறுமையுடனும், இயற்கை வளங்களின் கண்மூடித்தனமான சுரண்டல்களினால், காலநிலை மாற்றத்தையும் எதிர்கொண்டு வருவது ஒரு முரண்பாட்டை வெளிப்படுத்துகிறது என்றும் கூறினார் கர்தினால்.

அரசியல் நிறுவனங்கள், மதங்கள் மற்றும் அனைவருக்கும் வேண்டுகோள் விடுப்பதன் வழியாக, நீதியை நிலைநாட்டவும் ஏழைகளின் பால் கவனம் செலுத்தவும், இவ்வுலகம் என்னும் பொதுவான நமது வீட்டை கவனிப்பதில், நிலையான அர்ப்பணிப்பை நோக்கி மாற்றத்தைக் கொண்டு வர ஏதுவான அனைத்து முயற்சிகளையும் திருத்தந்தை ஆதரிக்க விரும்புவதாகவும் கர்தினால் அவர்கள் எடுத்துரைத்தார்.

கிழக்கு திமோர்

நம்பிக்கையும் வரலாறும் பிரிக்க முடியாத வகையில் பின்னிப் பிணைத்திருக்கும் கிழக்கு திமோரின்  ஆழமான ஆன்மீக உருவாக்கம் மற்றும் நம்பிக்கை வழியாக திமோர் மக்களை அவர்களின் சமூகத்தை மாற்றியமைக்கவும், பிளவுகளை முறியடிக்கவும், சமத்துவமின்மை மற்றும் வறுமையை திறம்பட எதிர்த்து போராடவும், இளைஞர்களின் வன்முறை மற்றும் பெண்களின் கண்ணியத்தை மீறுதல் போன்ற எதிர்மறை நிகழ்வுகளை எதிர்க்கவும் தூண்ட வேண்டும் என்று தான் நினைப்பதாகவும்,   திருத்தந்தையின் இருப்பு நிச்சயமாக இந்த திசையில் ஒரு தீர்க்கமான ஊக்கத்தை வழங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

சிங்கப்பூர்

இந்த நீண்ட திருத்தூதுப் பயணத்தின் இறுதி சந்திப்பாகிய சிங்கப்பூர் நாடானது, பல்வேறு கலாச்சாரம் மற்றும் மதங்களைக் கொண்ட எடுத்துக்காட்டான, அமைதியான, ஒருங்கிணைந்த கலாச்சாரம் கொண்ட நாடு என்று கூறியதுடன், குறிப்பாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த ஒன்றிப்பின் உரையாடலில் ஈடுபடும் இளைஞர்களை சந்தித்து இந்தப் பாதையின் எதிர்காலத்தை அவர்களிடம் ஒப்படைத்து, அவர்கள் சகோதரத்துவ மற்றும் அமைதியான உலகின் கதாநாயகர்களாக மாற உந்துசக்தியாக இருப்பார் என்றும் நம்பிக்கையை வெளியிட்டார் கர்தினால்.

மேலும் பல்வேறு கலாச்சாரங்கள், மதங்கள், இனங்கள் மற்றும் ஆன்மீக மரபுகளை கொண்ட நாடுகளை சந்திக்கும் திருத்தந்தையின் திருத்தூதுப் பயணமானது திருப்பீடம் மற்றும் நாடுகளுக்கு இடையேயான உறவு ஒன்றிப்பை வலுப்படுத்தும் என்றும் கூறினார் திருப்பீடச் செயலர்.

அமைதியைக் கட்டியெழுப்ப மேற்கொள்ளப்படும் இந்த திருத்தூதுப் பயணமானது சுயநலமற்ற நேரடியான சந்திப்புகள் மற்றும் பொதுநலனைப் பின்தொடர்வதன் வழியாக உணர்ச்சியற்ற மற்றும் கடினமான இதயங்களைக் கூட உடைத்து மரியாதைக்குரிய மற்றும் ஆக்கபூர்வமான உரையாடலை சாத்தியமாக்க இயலும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் கர்தினால் பியெத்ரே பரோலின்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 September 2024, 16:25