அல்சைமர் நோயாளர்களுக்காக செபிப்போம் – திருத்தந்தை
மெரினா ராஜ் - வத்திக்கான்
அல்சைமர் எனப்படும் நோய்க்கான அதிகமான சிகிச்சை வழிமுறைகளை மருத்துவ அறிவியல் விரைவில் வழங்க வேண்டும் என்றும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உதவும் வகையில் ஏராளமான செயல்திட்டங்கள் உருவாக்கப்பட செபிப்போம் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
செப்டம்பர் 21 சனிக்கிழமை சிறப்பிக்கப்படும் உலக அல்சைமர் நாளை முன்னிட்டு இவ்வாறு தனது கருத்துக்களைக் குறுஞ்செய்தியாக வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக நாடுகளில் அமைதி நிலவ வேண்டும் என்பது குறித்து மேலும் இரண்டு குறுஞ்செய்திகளையும் பதிவிட்டுள்ளார்.
மறதி நோய் விழிப்புணர்வு உலக நாள்
Alois Alzheimer என்னும் ஜெர்மன் நாட்டு மனநல மற்றும், நரம்பியல் நோய் மருத்துவர் 1901 ஆம் ஆண்டு தனது நாட்டில் உள்ள 50 வயது மதிக்கத்தக்கப் பெண்ணுக்கு அறிவாற்றல் இழப்பு அல்லது நினைவு மறதி நோயின் அறிகுறி இருப்பதைக் கண்டறிந்தார்.
மறதி நோய் ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணங்களை ஆராய்ந்து அதனைக் குணப்படுத்தும் வழிவகைகளையும் இவர் கண்டறிந்தார். எனவே இந்நோய்க்கு அந்த மருத்துவரின் பெயரான அல்சைமர் என்ற பெயர் சூட்டப்பட்டது.
1984ஆம் ஆண்டில் இருந்துதான் அல்சைமர் நோய் விழிப்புணர்வுக்கான உலக நாள் உருவாக்கப்பட்டது, 1994ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21ம் நாள் அல்சைமர் உலக நாளாக அறிவிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இரண்டாவது குறுஞ்செய்தி
அமைதி என்பது ஆயுதங்களால் அல்ல, பொறுமையுடன் செவிசாய்த்தல், உரையாடல் மற்றும் ஒத்துழைப்பின் வழியாகக் கட்டமைக்கப்படுகிறது என்றும், இவைகளே மோதல்களைத் தீர்ப்பதற்கு மனிதனுக்குத் தகுதியான ஒரே வழிகள் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மூன்றாவது குறுஞ்செய்தி
மாநிலத் தலைவர்கள் அமைதிக்காக பணியாற்றுகின்றார்களா அல்லது பணியாற்றவில்லையா என வரலாற்றால் தீர்மானிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், நமது அன்றாடச் செயல்களின் வழியாக உலகில் அன்பைப் பரப்புவதும் வெறுப்பை ஒழிப்பதும்தான் நமது பணி, உலகை மாற்றுவதற்கு நாம் செய்யக்கூடியது இதுதான் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்