39வது உலக இளையோர் தினத்திற்கான திருத்தந்தையின் செய்தி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
இவ்வாண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதி கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று சிறப்பிக்கப்படும் 39வது உலக இளையோர் தினத்திற்கான செய்தியை இச்செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 17ஆம் தேதியன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
‘எதிர்நோக்கி இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்’ என்ற தலைப்பு கடந்த ஆண்டின் உலக இளையோர் தினத்திற்கு என எடுக்கப்பட்டதை அச்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, வரும் 2025 யூபிலி ஆண்டிற்கு தயாரிப்பாக, ‘ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர் நடந்து செல்வர்; சோர்வடையார்‘(எச 40:31) என்ற எசாயா நூல் வார்த்தைகளை இளையோர் தின கொண்டாட்டங்களின் தலைப்பாக எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்றைய உலகில் போர் தரும் துயரங்கள், சமூக அநீதி, சரிநிகரற்ற நிலைகள், மக்களும் இயற்கை வளங்களும் சுரண்டப்படல் என்ற பல்வேறு சூழல்களின் முன்னால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு, வருங்காலம் குறித்த அச்சத்தைப் பெறுபவர்கள் இளையோரே எனக்கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனச்சோர்வு, சலிப்பு ஆகியவைகளின் கைதிகளாக நம்பிக்கையை இழந்து வாழும் இளையோருக்கு நம்பிக்கையின் செய்தி கிட்ட வேண்டும் என தான் ஆவல் கொள்வதாகவும் தன் செய்தியில் கூறியுள்ளார்.
இவ்வாண்டிற்கான இளையோர் தின தலைப்பில் உள்ள ‘நடந்து செல்லலும்' ‘சோர்வடையாதிருத்தலும்' என்பதை எடுத்துக்கொண்டு தன் கருத்துக்களைப் பகிர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்வின் பலவேளைகளில் நாம் மனச்சோர்வை சந்திக்கும்போது அங்கேயே நின்று ஓய்வெடுக்க முயலாமல் நம்பிக்கையின் திருப்பயணியாக முன்னோக்கிச் செல்லக் கற்க வேண்டும் என்றார்.
அனைத்து மனச்சோர்வுகளையும் சலிப்பையும் வெற்றிகொள்ளும் நம்பிக்கையில் நடைபோடுங்கள் என்பது இளையோருக்கு தான் தெரிவிக்க விரும்பும் செய்தி எனக்கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நல்லதொரு இலக்கை வகுத்துக் கொண்டு அதனை நோக்கி நாம் நடைபோடும்போது, நம் கனவுகளும், திட்டங்களும், அதன் வெற்றிகளும் ஒரு நாளும் இழக்கப்படாது என்ற நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளார்.
வாக்களிக்கப்பட்ட நிலத்தை நோக்கி நாம் நடைபோடும்போது பாலைவனத்தில் பல சோதனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது குறித்தும், நம் பயணம் சுற்றுலாப் பயணி என்ற நிலையிலிருந்து திருப்பயணியாக உருவெடுக்க வேண்டும் என்பது குறித்தும், திருஅவையின் மறைப்பணிக்காக இளையோரின் பயணம் நம்பிக்கையின் திருப்பயணமாக மாறுவது குறித்தும் தன் செய்தியில் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்