தேடுதல்

அன்பே நற்செய்தியின் மையம்!

இவ்வுலகில் ஏதேனும் நன்மையான காரியங்கள் நிலைத்து நிற்கின்றன என்றால், அதற்குக் காரணம் எண்ணற்ற சூழ்நிலைகளில் வெறுப்பை விட அன்பும், அலட்சியத்தை விட ஒற்றுமையும், சுயநலத்தை விட பெருந்தன்மையும் மேலோங்கியிருப்பதுதான் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

செப்டம்பர் 12, வியாழக்கிழமை இன்று, சிங்கப்பூர் தேசிய திறந்தவெளி மைதானத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றிய சிறப்புத் திருப்பலியில் வழங்கிய மறையுரை.

அன்பான சகோதரர் சகோதரிகளே, "நம் அனைவருக்கும் அறிவு உண்டு. இது நமக்குத் தெரிந்ததே. இவ்வறிவு இறுமாப்படையச் செய்யும்; ஆனால், அன்பு உறவை வளர்க்கும்" (1 கொரி 8:1) என்று புனித பவுலடியார் கொரிந்து நகர மக்களுக்குக்  கூறுகின்றார். மேலும் “கிறிஸ்து இயேசுவின் வழியாக நீங்கள் பெற்றுக்கொண்ட இறையருளை முன்னிட்டு உங்களை நினைத்து என் கடவுளுக்கு என்றும் நன்றி செலுத்துகிறேன். ஏனெனில், நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பெற்றுச் சொல்வன்மையும் நிறையறிவும் பெற்று, எல்லா வகையிலும் செல்வர்களானீர்கள்” (1 கொரி 1:4-5) என்றும் அம்மக்களுக்கு எழுதுகிறார்.

பவுலடியாரின் இந்த வார்த்தைகளுக்குச் செவிமடுத்து, அனைவரும் இணைந்த நிலையில் செல்வ வளங்கள் நிறைந்த, உயிர்த்துடிப்பான, வளர்ந்து வரும் மற்றும் பல்வேறு பிரிவினர் மற்றும் மதங்களுடன் ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபட்டுள்ள சிங்கப்பூரின் இந்தத் தலத்திருஅவைக்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

இந்த நகரத்தின் அழகு மற்றும் அதன் சிறந்த கட்டிடக்கலை, குறிப்பாக நம்மை ஈர்க்கக்கூடிய இந்தத் தேசிய அரங்க வளாகம் யாவும், சிங்கப்பூரை மிகவும் புகழ்பெற்ற மற்றும் கவர்ந்திழுக்கக் கூடியதாக மாற்றுவதற்குப் பங்களிக்கிறது, என்றாலும் கூட இங்கே இவை அனைத்திலும் நாம் கண்டறிவது மக்களிடம் உறவுகளை வளர்க்கும் அன்பு ஒன்றைத்தான்.

அன்பான சகோதரர் சகோதரிகளே, இவ்வுலகில் ஏதேனும் நன்மையான காரியங்கள் நிலைத்து நிற்கின்றன என்றால், அதற்குக் காரணம் எண்ணற்ற சூழ்நிலைகளில் வெறுப்பை விட அன்பும், அலட்சியத்தை விட ஒற்றுமையும், சுயநலத்தை விட பெருந்தன்மையும் மேலோங்கியிருப்பதுதான்.

ஆகவே, இவை இல்லாமல், இவ்வளவு பெரிய பெருநகரத்தை இங்கு யாரும் உருவாக்கயிருக்க முடியாது, அதாவது, கட்டிடக் கலைஞர்கள் அதை வடிவமைத்திருக்க மாட்டார்கள், தொழிலாளர்கள் வேலை செய்திருக்க மாட்டார்கள், எதுவும் சாதித்திருக்க மாட்டார்கள். நாம் பார்ப்பது ஓர் அடையாளம் மட்டுமே. மேலும் நம் முன்னால் இருக்கும் ஒவ்வொரு வேலைக்குப் பின்னாலும் கண்டுபிடிக்கப்படுவதற்கான பல அன்பின் கதைகள் பல உள்ளன.

அன்பு இல்லாமல் எதுவும் பிறக்காது

அப்படியானால், அன்பு இல்லாமல் எதுவும் பிறக்காது மற்றும் வளராது என்பதை அறிந்துகொள்ள நம் வீட்டின் முன்பக்கங்களிலும், தெருக்களின் பாதைகளிலும் எழுதப்பட்ட இந்தக் கதைகளைப் படிப்பதும் அவற்றிலிருந்து கற்றுக்கொள்வதும் நல்லது.

நமது வாழ்வில் சில வேளைகளில், நமது திட்டங்களின் மகத்துவமும் மேன்மையும் இந்த உண்மையை மறக்கடிக்கச் செய்துவிடலாம். மேலும் நம் வாழ்வின் படைப்பாளர்களாக நாம் மட்டுமே இருக்க முடியும் என்ற தவறான எண்ணம் நம்மை மதியற்றவர்களாக்கிவிடலாம். ஆனாலும்கூட,  நமது வாழ்க்கை இறுதியில், ‘அன்பு இல்லாமல் நாம் ஒன்றுமில்லை’ என்ற ஒரு எதார்த்தத்திற்கு நம்மை மீண்டும் கொண்டு வருகிறது.

நமது விசுவாசம், இந்த நம்பிக்கையைப் பற்றி இன்னும் ஆழமாக உறுதிப்படுத்துகிறது மற்றும் அறிவூட்டுகிறது. ஏனென்றால் அன்புகூர்வதற்கும், அன்புகூரப்படுவதற்கும்,  நம்முடைய திறனின் ஆணிவேர் கடவுளே என்று அது நமக்குச் சொல்கிறது.  இதனைத்தான், "நமக்குக் கடவுள் ஒருவரே; அவரே நம் தந்தை. அவரிடமிருந்தே அனைத்தும் வருகின்றன; அவருக்காக நாம் இருக்கின்றோம். அவ்வாறே, நமக்கு ஆண்டவரும் ஒருவரே; அவரே இயேசு கிறிஸ்து. அவர் வழியாகவே அனைத்தும் வருகின்றன; அவர் மூலமாகவே நாம் வாழ்கிறோம்” (காண்க. 1 கொரி 8:6) என்கின்றார் புனித பவுல்.

அன்பே நற்செய்தியின் மையம்

“கடவுள் நம்மிடம் காட்டும் அன்பும், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள நம்மை அழைக்கும் அன்பும், ஏழைகளின் தேவைகளுக்கு தாராளமாகப் பதிலளிக்கிறது மற்றும் துயரத்தில் இருப்பவர்களுக்கு இரக்கத்தைக் காண்பிக்கிறது. மேலும் விருந்தோம்பல் அளிக்கும் அன்பாகவும், சோதனைக் காலங்களில் நம்மைப் பாதுக்காக்கும் அன்பாகவும் வெளிப்படுகிறது. சாபத்திற்குப் பதிலாக ஆசீர்வாதம் வழங்கும் அன்பாகவும், ‘அன்பே நற்செய்தியின் மையம்’ என்று நாம் நம்பித் திரும்பும் அளவிற்கு நம்மை மன்னித்து ஏற்கத் தயாராக உள்ள அன்பாகவும் இருக்கிறது” என்று இந்நாட்டிற்க்கான தனது முதல் அப்போஸ்தலிக்கத் திருத்தூதுப் பயணத்தின் போது திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்கள் கூறியதையும் நான் நினைவு கூறுகின்றேன் ((SAINT JOHN PAUL II, Homily at Holy Mass at the National Stadium, Singapore, 20 November 1986)).

உண்மையில், பரிவிக்கம் கொண்ட கடவுளால் ஆட்கொள்ளப்பட்ட ஏராளமான புனிதர்களில் இத்தகையதொரு அன்பை நாம் காணலாம், அவர்கள் அந்த பரிவிரக்கத்தின் பிரதிபலிப்பாக, எதிரொலியாக, உயிருள்ள உருவமாக மாறினார்கள். இங்கே அவர்களில் இருவரை மட்டும் இப்போது உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

தூய அன்னை மரியா

அன்னை மரியாவின் தூய பெயரை இன்று நாம் சிறப்பிக்கின்ற வேளை, அவரை முதலில் உங்களுக்கு எடுத்துக்காட்ட விரும்புகின்றேன். அவர் தனது ஆதரவினாலும் இருப்பினாலும் பலருக்கு நம்பிக்கையை அளித்துள்ளதுடன் அதை அவர் தொடர்ந்து செய்தும் வருகின்றார்! துயரம் மற்றும் மகிழ்வின் தருணங்களில் அன்னையின் பெயர் தொடர்ந்து எண்ணற்ற மக்களால் உச்சரிக்கப்படுகிறது.

மேலும் இறைத்தந்தையின் அன்பு மிக அழகான மற்றும் முழுமையான வழிகளில் அன்னை மரியாவில் வெளிப்படுவதை நாம் காண்கிறோம், ஏனென்றால் எல்லாவற்றையும் புரிந்துகொண்டு மன்னித்து ஏற்கும் மற்றும் நம்மை ஒருபோதும் கைவிடாத ஒரு தாயின் கனிவிரக்கத்தை அவரில் காண்கிறோம். இதனால்தான் நாம் அவரைத் தேடி வருகிறோம்.

தூய பிரான்சிஸ் சவேரியார்

இரண்டாவது, இந்த மண்ணின் அன்புக்குரிய புனிதராக விளங்கிய தூய பிரான்சிஸ் சரியாரைப் பற்றி நான் இங்கே குறிப்பிடுகிறேன். அவர் இங்குப் பலமுறை நல்ல வரவேற்பைப் பெற்றவர். மேலும் அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு, அதாவது, 1552 -ஆம் ஆண்டு, ஜூலை 21-ஆம் நாளன்று, இந்த மண்ணில் தனது இறுதி வரவேற்பைப் பெற்றார்.

புனித இனிகோ மற்றும் அவரது முதல் தோழர்களுக்கு அவர் எழுதிய ஒரு அழகான கடிதம் எங்களிடம் உள்ளது. அதில் அவர் தனது காலத்தின் அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் சென்று பிறரன்புப் பணிகளைக் காட்டிலும் அறிவைப் பெறவிரும்பும் அவர்களிடம், ஒரு பித்துபிடித்தவரைப்போல, கூக்குரலிட வேண்டும்  என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்துகின்றார். இதன் காரணமாக, அவர்கள் தங்கள் சகோதரர் சகோதரிகளின் அன்பிற்காக மறைப்பணியாளர்களாக ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள் என்றும், மேலும் 'ஆண்டவரே, “இதோ நானிருக்கிறேன்,  நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?’’ என்று கடவுளை நோக்கி தங்கள் முழு இதயத்தோடு கூவி அழைப்பார்கள் என்றும் கூறுகின்றார் (Letter, Cochin, January 1544).

ஆகவே, தூய அன்னை மரியா மற்றும் தூய பிரான்சிஸ் சவேரியாரின் முன்மாதிரியைப் பின்பற்றி நாமும், “ஆண்டவரே, இதோ, நானிருக்கிறேன்; நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?"  என்று அவர்கள் கூறிய அதே வார்த்தைகளை நாமும் கூறி அவற்றைச் சொந்தமாக்கிக் கொள்வோம்.

இதன் காரணமாக, அன்னை மரியாவும், பிரான்சிஸ் சவேரியாரும் இந்த நாட்களில் மட்டுமல்ல, எப்பொழுதும், கடவுளின் முடிவற்ற அன்பிலிருந்து இன்றும் நமக்கு வந்துகொண்டிருக்கும் அன்பு மற்றும் நீதியுடன் வாழ்வதற்கான அழைப்புகளுக்கு செவிசாய்த்து உடனடியாகப் பதிலளிக்கும் ஒரு நிலையான அர்ப்பணிப்பாக எப்போதும் நம்முடன் வருவார்கள்.

கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 September 2024, 15:11