அண்மைப் பயணத்தில் இயேசு சபையினருடன் உரையாடல் தொகுப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தான் அண்மையில் மேற்கொண்ட திருப்பயணத்தின்போது இயேசு சபையினரை இந்தோனேசியாவிலும், கிழக்குதிமோரிலும், சிங்கப்பூரிலும் சந்தித்த வேளையில் அவர்களுடன் உரையாடிய விடயங்களை தொகுத்து வழங்கியுள்ளது La Civiltà Cattolica என்ற இயேசு சபை இதழ்.
முன்னாள் இயேசு சபைத் தலைவர் அருள்பணி அருப்பே அவர்கள், இயேசு சபையினர் அகதிகளிடையே இணைந்து பணியாற்றவேண்டும் என விரும்பியதையும், அருள்பணி அருப்பே அவர்கள் விசுவாசத்தை பண்பாட்டுமயமாக்குதல் குறித்தும், கலாச்சாரத்திற்கு நற்செய்தி அறிவித்தல் குறித்தும் எடுத்துரைத்ததை இயேசு சபையினருடன் இந்நாடுகளில் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மியான்மாரின் இன்றைய நிலைகள் குறித்தும் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தற்போது சிறையில் இருக்கும் அவுங் சான் சு கி அவர்கள் விடுவிக்கப்படவேண்டும் என தான் அழைப்புவிடுத்ததையும், முன்னாள் பிரதமரின் மகனை தான் வத்திக்கானில் சந்தித்தையும் நினைவுகூர்ந்தார்.
மியான்மாரின் ரொஹிங்கியா அகதிகள் எப்போதும் தன் இதயத்திற்கு அருகாமையில் இருப்பதாக இயேசு சபையினரிடம் எடுத்துரைத்த திருத்தந்தை, மியான்மார் குறித்து நாம் மௌனம் காக்கமுடியாது, ஏதாவது செய்தாகவேண்டும் எனவும் கூறினார்.
கிறிஸ்தவர்களின் வாழ்வு என்பது எப்போதும் மறைசாட்சிய வாழ்வு என்பதையும் வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஓவ்வொரு கிறிஸ்தவரும் விவேகத்துடனும் தைரியமுடனும் சான்று வழங்க வேண்டிய தேவை உள்ளது என்பதையும் இயேசு சபையினரிடம் எடுத்துரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்