தேடுதல்

கிழக்கு திமோர் வந்தடைந்தார் திருத்தந்தை

திருத்தந்தையை வரவேற்க திலி பன்னாட்டு விமானநிலையத்தில் அரசுத் தலைவர், பிரதமருடன் அந்நாட்டின் 14 நகராட்சிகளைக் குறிக்கும் வண்ணம் பாரம்பரிய உடைகளை அணிந்த 14 பேரும் காத்திருந்தனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

பாப்புவா நியூ கினியிலிருந்து அந்நாட்டின் Air Niugini தேசிய விமானத்தில் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு மேல் பறந்து கிழக்கு திமோர் நாட்டின் தலைநகர் திலியை திருத்தந்தை வந்தடைந்தபோது, உள்ளுர் நேரம் ஏறக்குறைய 2 மணி 20 நிமிடங்கள். ஜகார்த்தாவுக்கும் திலிக்கும் இடையேயான 2578 கிலோமீட்டரை 3 மணி 30 நிமிடங்களில் கடந்து வந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். பாப்புவா நியூ கினிக்கும் இந்தியாவுக்கும் இடையேயான நேர வித்தியாசம் 4 மணி 30 நிமிடங்களாக இருக்க, கிழக்கு திமோருக்கும் இந்தியாவுக்கும் இடையேயான இடைவெளி 3 மணி 30 நிமிடங்களே என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

திருத்தந்தையை வரவேற்க திலி பன்னாட்டு விமானநிலையத்தில் அரசுத் தலைவர் José Manuel Ramos-Horta, பிரதமர் Xanana Gusmao ஆகியோருடன் அந்நாட்டின் 14 நகராட்சிகளைக் குறிக்கும் வண்ணம் பாரம்பரிய உடைகளை அணிந்த 14 பேரும் காத்திருந்தனர். விமானம் வந்தடைந்ததும் கிழக்கு திமோர் நாட்டிற்கான திருப்பீடத் தூதுவர், பேராயர் Wojciech Załuski அவர்கள் விமானத்திற்குள் சென்று திருத்தந்தையை வாழ்த்தினார். பின் திருத்தந்தை சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட, இரு பெண்கள் கிழக்கு திமோர் நாட்டின் பாரம்பரியக் கழுத்துத் துண்டை, திருத்தந்தையின் கழுத்தில் அணிவிக்க, அவரும் அதனைப் பெருமையுடன் ஏற்றுக்கொண்டு, கழுத்திலிருந்து கழற்றாமலேயே வைத்திருந்தார். அரசு உயர்மட்டத் தலைவர்களை சந்தித்து இராணுவ மரியாதையையும் ஏற்றபின், அரசுத்தலைவரையும், பிரதமரையும் விமான நிலையத்தில் உள்ள சிறப்பு விருந்தினருக்கான அறையில் தனியாக சந்தித்து சிறிது நேரம் உரையாடினார் திருத்தந்தை. அதன்பின்னர் அனைவரிடமும் விடைபெற்று 6.1 கிலோமீட்டர் தூரம் உள்ள திருப்பீடத் தூதரகம் நோக்கிப் பயணமானார் திருத்தந்தை பிரான்சிஸ். திருப்பீடத்தூதரகம் செல்லும் வழியெங்கும் இருமருங்கும் மக்கள் நின்றுகொண்டு, மஞ்சள் வெள்ளை நிறத்திலான வத்திக்கான் கொடிகளைக் கையில் தாங்கியவர்களாக திருத்தந்தையை நோக்கி அசைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளியிட்டனர். இந்த திருப்பயணத்தில் கத்தோலிக்கர்களை பெரும்பான்மையினராகக் கொண்ட நாடு கிழக்கு திமோராகும். ஆசியாவிலேயே கத்தோலிக்கர்களை பெரும்பான்மையினராகக் கொண்ட நாடுகள் கிழக்கு திமோரும் பிலிப்பீன்ஸுமேயாகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 September 2024, 15:08