தேடுதல்

உரை வழங்கும் திருத்தந்தை உரை வழங்கும் திருத்தந்தை   (AFP or licensors)

உங்கள் நம்பிக்கை உங்கள் கலாச்சாரமாக மாறட்டும்!

உற்சாகம், புத்துணர்ச்சி, முன்னோக்கிப் பார்க்கும் கண்ணோட்டம், துணிவு, சீர்தூக்கி பார்த்தல் ஆகிய இவை அனைத்தும் இளைஞர்களின் பொதுவான அனுபவங்கள் மற்றும் முதியவர்களின் ஞானத்துடன் இணைந்து, அறிவின் கலவையை உருவாக்குகின்றன : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

செப்டம்பர் 9, திங்கள்கிழமை இன்று, கிழக்கு திமோரின் தலைநகர் டிலியில் (Dili) உள்ள  அரசுத்தலைவர் மாளிகையில் அந்நாட்டின் அரசு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், பொதுநிலை அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய அருளுரை.

அன்புள்ள சகோதரர் சகோதரிகளே, ஆசியாவில் பிறந்த கிறித்தவம், ஐரோப்பிய மறைப்பணியாளர்கள் வழியாக, இந்தத் தொலைதூர கண்டத்தின் பகுதிகளுக்கு வந்து, அதன் உலகளாவிய இறையழைத்தல் மற்றும் மிகவும் மாறுபட்ட கலாச்சாரங்களுடன் இணக்கமாக இருக்கும் திறனை உறுதிப்படுத்துகிறது. இது நற்செய்தியை எதிர்கொள்ளும் போது உயர்ந்த மற்றும் ஆழமான ஒரு புதிய ஒருங்கிணைப்பைக் காண்கிறது.

இயற்கை வளம் கொழிக்கும் இந்த நாடு, ஆன்மாவில் அமைதி மற்றும் மகிழ்ச்சியின் உணர்வுகளைத் தூண்டும் ஒரு நிலமாக, கடந்த காலங்களில் ஒரு துயரமிகுந்த காலகட்டத்தை கடந்துள்ளது. மேலும் அது எழுச்சியையும் வன்முறையையும் அனுபவித்திருக்கிறது, மக்களின் சுதந்திரத்திற்கான ஒரு தேடல் நிறைந்த இந்தக் காலங்களைப் பார்க்கும்போது, சுயாட்சிக்கான அதன் தேடலை நிராகரிக்கவோ அல்லது முறியடிக்கவோ மட்டுமே இது அடிக்கடி நிகழ்ந்திருக்கிறது என்பதைக் காண முடிகிறது.

நம்பிக்கையை இழக்கவில்லை

1975-ஆம் ஆண்டு நவம்பர் 28 முதல் 2002-ஆம் ஆண்டு மே 20 வரை, அதாவது, சுதந்திரம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து அது உறுதியாக மீட்கப்படும் வரை, கிழக்கு திமோர் அதன் மிகப்பெரிய துயரத்தையும் சோதனையையும் தாங்கிக் கொண்டது.

உங்கள் வரலாற்றின் இத்தகைய வியத்தகு காலகட்டத்தை கடந்து செல்லும்போது நீங்கள் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை என்பதாலும், இருண்ட மற்றும் கடினமான நாட்களுக்குப் பிறகு, அமைதி மற்றும் சுதந்திரத்தின் விடியல் இறுதியாக உதயமானது என்பதாலும், நாம் இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

கத்தோலிக்க நம்பிக்கையில் நீங்கள் வேரூன்றி இருந்ததுதான் இத்தகைய முக்கியமான இலக்குகளை அடைய பெரிதும் உதவியது. கடந்த 1989-ஆம் ஆண்டு உங்கள் நாட்டிற்கு அப்போஸ்தலிக்கத் திருப்பயணத்தை மேற்கொண்ட திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்கள் இதை வலியுறுத்தினார் என்பதையும் நான் இங்கே நினைவுகூர விழைகிறேன்.

இது சம்மந்தமாக, இந்தோனேசியாவில் உள்ள உங்கள் சகோதரர் சகோதரிகளுடன் முழு நல்லிணக்கத்தை அடைவதற்கான உங்கள் விடாமுயற்சிகளை நினைவு கூரவும், பாராட்டவும் விரும்புகிறேன். துயரங்களின் மத்தியிலும் உங்கள் நம்பிக்கையில் உறுதியாக இருந்தீர்கள். உங்கள் மக்களின் நற்குணங்களாலும், உங்கள் நம்பிக்கையாலும், துயரத்தை மகிழ்ச்சியாக மாற்றிவிட்டீர்கள்!

உலகின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்றுவரும் மற்ற மோதல்களில், காயங்களைக் கட்டுவதற்கும், வெறுப்பை மாற்றுவதற்கும், ஒன்றிப்புடன் ஒப்புரவை ஏற்படுத்துவதற்கும், எதிர்ப்புக்குப் பதிலாக ஒத்துழைப்பை நல்குவதற்கும் விரும்பும் விருப்பங்களை கடவுள் உங்களுக்கு அருள்வாராக!

2019-ஆம் ஆண்டு, பிப்ரவரி 4 அன்று, நான் அபுதாபியில் பெரிய இமாம் அல்-அசாருடன் இணைந்து கையெழுத்திட்ட உடன்பிறந்த உறவு குறித்த ஆவணத்தை ஏற்றக்கொண்டு பள்ளி பாடத்திட்டத்தில் அதனைச் சேர்க்கும் வகையில் இதைச் செய்திருக்கிறீர்கள்.  உண்மையில், கல்வி என்பது செயல்முறை அடிப்படையானது.

புதிய சவால்கள் மற்றும் சிக்கல்கள்

இப்போது, ​​ஒரு புதிய கீழ்வானம் (Horizon) உண்மையில் உங்கள் முன் திறக்கப்பட்டுள்ளது. அது இருண்ட மேகங்களை நீக்கியுள்ளது என்றபோதிலும், எதிர்கொள்ள வேண்டிய புதிய சவால்களையும் தீர்க்கப்படவேண்டிய புதிய சிக்கல்களையும் உங்கள்முன் வைத்துள்ளது. அவற்றிலுள்ள பல்வேறு தற்போதைய சிக்கல்களில், புலம்பெயர்தல் நிகழ்வைப் பற்றி நான் நினைக்கிறேன். போதுமான அளவிற்கு இயற்கை வளங்களைப் பகிராமை, எல்லோருக்கும் வேலைவாய்ப்பை வழங்காமை, குடும்பங்களின் வருமானத்திற்குப் போதிய உத்திரவாதம் இல்லாமை ஆகியவற்றால் இந்தப் புலம்பெயர்தல் ஏற்படுகிறது.

அளவுக்கு அதிகமான மது பயன்பாடு, கும்பலாக இளைஞர்களை உருவாக்குவது ஆகியவை சமூக அவலங்களாகக் கருதப்படுவதாக நான் நினைக்கிறன். இந்த கும்பலில் உள்ள இளைஞர்கள், தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்றவர்கள், ஆனால் பாதுகாப்பற்றவர்களின் சேவையில் இந்த அறிவைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அவர்கள் வன்முறை மற்றும் தீங்கு விளைவிப்பதில் தங்களின் வலிமையைக் காட்ட விரும்புகின்றனர்.

இந்தக் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் தங்கள் மாண்பை மீறுகிறார்கள் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, எல்லா வகையான முறைகேடுகளையும் தடுக்கவும், அனைத்து இளைஞர்களுக்கும் நலமான மற்றும் அமைதியான குழந்தைப் பருவத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடிந்த அனைத்தையும் செய்யவும் நாம் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணர்வோம்.

திருஅவையானது தனது சமூகக் கோட்பாட்டை அத்தகைய ஒரு உருவாக்கும் செயல்முறைக்கு அடித்தளமாக வழங்குகிறது. பல்வேறு அணுகுமுறைகளை உருவாக்குவதற்கும், அவைகள் உண்மையிலேயே ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஆதரிக்கின்றனவா அல்லது அதற்குப் பதிலாக தடைகளை ஏற்படுத்துகின்றனவா,  ஏற்றுக்கொள்ள முடியாத ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குவதோடு, நிராகரிக்கப்பட்ட அல்லது விளிம்பு நிலையில் உள்ள ஏராளமான மக்களை உருவாக்குகிறதா என்பதைச் சரிபார்க்கவும் இந்தச் சமூகக் கோட்பாடு ஒரு தவிர்க்க முடியாத மற்றும் நம்பகமான தூணாக அமைகிறது.

மாண்பை மேம்படுத்தும் கல்வி

நீங்கள் ஓர் இளைஞர் கூட்டமாக இருக்கிறீர்கள். நான் உங்கள் கலாச்சாரம் மற்றும் வரலாற்றைக் குறிப்பிடவில்லை, அவை மிகவும் பழமையானவை, ஆனால் கிழக்கு திமோரின் மக்கள்தொகையில் ஏறத்தாழ 65 விழுக்காட்டினர் முப்பது வயதுக்குட்பட்டவர்கள்.

குடும்பம் மற்றும் பள்ளிகளில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய முதல் பகுதி கல்வி என்று இந்தப் புள்ளிவிவரம் கூறுகிறது. குழந்தைகள் மற்றும் இளைஞர்களை மையமாக வைத்து அவர்களின் மாண்பை மேம்படுத்துகிறது கல்வி.

உற்சாகம், புத்துணர்ச்சி, முன்னோக்கிப் பார்க்கும் கண்ணோட்டம், துணிவு, சீர்தூக்கி பார்த்தல் ஆகிய இவை அனைத்தும் இளைஞர்களின் பொதுவான அனுபவங்கள் மற்றும் முதியவர்களின் ஞானத்துடன் இணைந்து, அறிவின் கலவையை உருவாக்குகின்றன மற்றும் எதிர்காலத்தை நோக்கி ஒரு பெரிய உத்வேகத்தை வழங்குகின்றன.

கத்தோலிக்கத் திருஅவையின் சமூகக் கோட்பாடு, தேவைப்படுபவர்களுக்கு உதவி மற்றும் பிறரன்பு சேவைகள் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் கல்வி மற்றும் நலவாழ்வு நிறுவனங்கள் அனைத்திற்கும் சேவை செய்கின்றது, மேலும் இது ஒரு மதிப்புமிக்க வளமாக இருப்பதுடன், எதிர்காலத்தை மனவுறுதியுடனும் நம்பிக்கையுடனும் எதிர்பார்க்க அனைவருக்கும் வழிகாட்டுகிறது.

எவரும் ஒதுக்கப்பட்டதாக உணராத, அனைவரும் அமைதியுடனும் மனித மாண்புடனும் வாழக்கூடிய சுதந்திரமான, மக்களாட்சி நிறைந்த மற்றும் ஒன்றிணைந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான உங்களின் பணியில் எப்போதும் அவர் உங்களுடன் வருவார்.  கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 September 2024, 16:14