தேடுதல்

கிறிஸ்துவினுடைய நற்செய்தி அனைத்து மக்களுக்குமானது!

நம்பிக்கை என்பது ஒரு வாழும் கலாச்சாரமாக மாறுகிறது, மனதையும் செயல்களையும் ஊக்குவிக்கிறது மற்றும் முன்னோக்கி செல்லும் பாதையை ஒளிரச் செய்து அதனை ஒளிதரும் கலங்கரை விளக்கமாக மாற்றுகிறது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

செப்டம்பர் 7, சனிக்கிழமை இன்று, பாப்புவா நியூ கினியின் தலைநகர்  போர்ட் மோர்ஸ்பிவிலுள்ள APEC (Asia-Pacific Economic Cooperation) என்னும் இல்லத்தில் அந்நாட்டின் அரசு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், பொதுநிலை அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய அருளுரை.

அன்பு நிறைந்த சகோதரர் சகோதரிகளே, நூற்றுக்கணக்கான தீவுகளைக் கொண்ட உங்கள் தாயகத்தில், எண்ணூறுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இது பல இனக்குழுக்களுடன் தொடர்புடையது மற்றும் உங்களின் வியத்தகு கலாச்சார  வளமையைக் காட்டுகிறது. இது ஆன்மிக நிலையிலும் என்னை மிகவும் கவர்ந்துள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும், ஏனென்றால், இந்த மகத்தான பல்வேறு வேறுபாடுகளுக்கு மத்தியில் நல்லிணக்கத்தை உருவாக்கும் தூய ஆவியாருக்கு ஒரு சவால் என்றே நான் கருதுகின்றேன்.

இயற்கை வளங்கள் கடவுளால் அருளப்பட்டவை

உங்கள் நாடு, தீவுகள் மற்றும் மொழிகளை உள்ளடக்கியது மட்டுமன்றி, இயற்கை வளங்களைக் கொண்டதாகவும் இருக்கின்றது. இவை அனைத்தும், முழு சமூகத்திற்கும் கடவுளால் வழங்கப்பட்டவை. இந்தச் சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார வளங்கள் ஒரே நேரத்தில் ஒரு பெரிய பொறுப்பை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. ஏனெனில் இவை யாவும் அரசு அதிகாரிகள் மற்றும் குடிமக்கள் அனைவரையும், நிலையான மற்றும் சமமான முறையில் இயற்கை மற்றும் மனித வளங்களை மேம்படுத்தும் முயற்சிகளை ஊக்குவிக்கக் கோருகின்றன.

வன்முறைகள் முடிவுக்கு வரட்டும்

பூர்வகுடி மக்களின் வன்முறை முடிவுக்கு வரும் என்பது எனது குறிப்பிட்ட நம்பிக்கை. இது பல அப்பாவி மக்கள் பாதிக்கப்பட காரணமாக அமைகிறது. மேலும் அவர்களின் நிம்மதியான வாழ்வையும் வளர்ச்சியையும் இது தடுக்கிறது. ஆகவே, இந்த வன்முறைச் சுழலைத் தடுத்து நிறுத்தி, நாட்டின் அனைத்து மக்களின் நலனுக்காகப் பயனுள்ள ஒத்துழைப்பிற்கு வழிவகுக்கும் பாதையில் உறுதியுடன் இறங்குமாறு உங்கள் ஒவ்வொருவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் குடிமைச் சமூகத்தின் அடிப்படைக் கூறுகள் மீதான ஒப்பந்தத்தை வலுப்படுத்துவதன் வழியாக, ஒவ்வொரு நபரும் தனது பங்கிற்கு அனைவரின் நலனுக்காக எதையாவது தியாகம் செய்யும் விருப்பத்துடன், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், மக்களின் நலவாழ்வு மற்றும் கல்வித் தேவைகளை நிவர்த்தி செய்யவும், மனித மாண்புக்குரிய வேலைக்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும் தேவையான வலிமையைப் பயன்படுத்தலாம்.

சில வேளைகளில் மனிதர்களுக்கு வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளை விட மற்ற தேவைகளும் அதிகமாகத் தேவைப்படுகின்றன என்பதை நாம் மறந்து விடுகிறோம். அவர்களும் கூட தங்களின் இதயங்களில் பெரும் நம்பிக்கையைப் பெற விரும்புகின்றனர். இந்த நம்பிக்கை என்பது, அவர்களை முழுமையாக வாழ அனுமதிக்கிறது, பரந்த அளவிலான திட்டங்களை மேற்கொள்வதற்கான ஆர்வத்தையும் துணிவையும் அளிக்கிறது, மேலும் பரந்த எல்லைகளை நோக்கி அவர்களின் பார்வையை மேல்நோக்கி உயர்த்த உதவுகிறது.

வாழ்வளிக்கும், அமைதியான, கடின உழைப்பு மற்றும் மகிழ்ச்சியான சமுதாயத்தைப் பெறுவதற்கு ஏராளமான உலகியல் பொருள்கள் மட்டும் போதாது. இது பரந்ததொரு  ஆன்மிகக் கண்ணோட்டம் இல்லாமல் தன்னைத் தானே மாற்றிக்கொண்டு, இதயம் வறட்சியடைவதற்கு வழிவகுக்கிறது. இதன் விளைவாக, சமூகம் அதன் வழியை இழக்கிறது மற்றும் மதிப்பீடுகளின் சரியான படிநிலையை (hierarchy of values) மறந்துவிடுகிறது.

மேலும் இதயத்தில் ஏற்படும் இந்த வறட்சியானது, முன்னோக்கிச் செல்வதற்கான சமூகத்தின் ஊக்குவிக்கும் ஆற்றலை நீக்குகிறது. மேலும் சில வளமையான  சமூகங்களில் நடப்பது போல, எதிர்காலத்தில் நம்பிக்கையை இழக்கும் அளவிற்கு அதன் முன்னேற்றத்தைத் தடுக்கிறது, இதனால், எதிர்கால சந்ததியினருக்கு வாழ்க்கையையும் நம்பிக்கையையும் கடத்துவதற்கான காரணங்களைக் கண்டுபிடிக்க முடியாது.

ஆன்மிக விழுமியங்கள் முக்கியத்துவம் பெறட்டும்

ஆன்மிக விழுமியங்கள் என்பது, இம்மண்ணக நகரத்திற்குரிய கட்டிடம் மற்றும் அனைத்து தற்காலிக எதார்த்தங்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த ஆன்மிக விழுமியங்கள் ஓர் ஆன்மாவை உட்செலுத்துகின்றன, மேலும் ஒவ்வொரு திட்டத்தையும் ஊக்குவித்து புலப்படுத்துகின்றன. இக்கருத்து உங்கள் நாட்டிற்கான எனது திருப்பயணத் திட்டத்தின் இலட்சினையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 'இறைவேண்டல்' என்பதே அது. இறைவேண்டல் செய்யும் மக்களுக்கு எதிர்காலம் உள்ளது, மேலும் அது, விண்ணிலிருந்து வலிமையையும் நம்பிக்கையையும் ஈர்க்கிறது.

கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் உங்கள் அனைவருக்கும் திருச்சடங்குகள் மற்றும் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதால் உங்கள் நம்பிக்கை ஒருபோதும் குறைவுபடாது என்று நான் ஆவலுடன் நம்புகிறேன். அதற்குப் பதிலாக, இந்த நம்பிக்கையானது, இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள அன்பு மற்றும் ஒரு சீடராக அவரைப் பின்பற்றுவதன் வழியாக  அடையாளப்படுத்தப்படட்டும்.

இந்த வழியில், நம்பிக்கை என்பது ஒரு வாழும் கலாச்சாரமாக மாறுகிறது, மனதையும் செயல்களையும் ஊக்குவிக்கிறது மற்றும் முன்னோக்கிச் செல்லும் பாதையை ஒளிரச் செய்து அதனை ஒளிதரும் கலங்கரை விளக்கமாக மாற்றுகிறது. அதேவேளை, ஒட்டுமொத்த சமுதாயமும் வளரவும், அதன் மிகப்பெரிய சவால்களுக்கு நல்ல மற்றும் பயனுள்ள தீர்வுகளைக் கண்டறியவும் உதவுகிறது.

முதல் திருத்தந்தையான புனித பேதுருவின் வழிவரும் நான், கத்தோலிக்க விசுவாசிகள் தங்கள் பயணத்தைத் தொடர அவர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் இறைநம்பிக்கைப் பணியில் அவர்களை உறுதிப்படுத்தவும் வந்துள்ளேன். மேலும் அவர்கள் அடைந்து வரும் முன்னேற்றத்தில் மகிழ்ச்சியடையவும், அவர்களின் துயரங்களைப் பகிர்ந்து கொள்ளவுமே வந்துள்ளேன். "உங்கள் மகிழ்ச்சிக்காக உங்களுடன் பணிபுரிபவராக இருக்கிறேன்" (2 கொரி 1:24) என்று புனித பவுலடியார் கூறுவதுபோன்று இங்கே நான் உங்களோடு இருக்கின்றேன்.

அனைவருடனும் ஒன்றித்து செயல்படுங்கள்

இங்குள்ள கத்தோலிக்கக் கிறிஸ்தவச் சமூகங்கள் நாட்டில் செய்து வரும் பிறரன்புப் பணிகளுக்காக அவர்களைப் பாராட்டுகிறேன். அதேவேளையில், பாப்புவா நியூ கினியின் அனைத்து குடிமக்களின் பொது நலனுக்காக, மற்ற கிறிஸ்தவத் திருச்சபைகள் மற்றும் பிற மதங்களைச் சேர்ந்த சகோதரர் சகோதரிகள் தொடங்கி, பொது நிறுவனங்களுடனும், நல்லெண்ணம் கொண்ட அனைத்து மக்களுடனும் எப்போதும் ஒத்துழைக்குமாறு நான் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

பாப்புவா நியூ கினியின் விண்ணகப் பாதுகாவலராம் புனித மிக்கேல், எப்போதும் விழிப்புடன் இருந்து எல்லாவிதமான ஆபத்துகளிலிருந்தும் உங்களையும் உங்கள் அதிகாரிகளையும் இந்த நாட்டின் அனைத்து மக்களையும்பாதுகாப்பாராக!

கிறிஸ்துவினுடைய நற்செய்தி அனைத்து மக்களுக்குமானது

அன்புக்குரிய சகோதரர் சகோதரிகளே, உங்கள் மத்தியில் எனது திருப்பயணத்தை மகிழ்வுடன் தொடங்குகிறேன். உரோமையில் இருந்து வெகு தொலைவில் இருக்கும் உங்களிடம் வந்துள்ள எனக்கு, உங்கள் அழகிய நாட்டின் கதவுகளை எனக்காகத் திறந்து வைத்ததற்கு உங்களுக்கு நன்றி கூறுகின்றேன். ஏனென்றால், திருச்சிலுவையில் எல்லா ஆண்களையும் பெண்களையும் ஒன்றாக அரவணைத்த இயேசு கிறிஸ்துவின் அன்பு திருஅவையின் இதயத்தில் உள்ளது.

இயேசு கிறிஸ்துவினுடைய நற்செய்தி அனைத்து மக்களுக்குமானது, ஏனென்றால் அது எந்த மண்ணகத்திற்குரிய வலிமையுடனும் பிணைக்கப்படவில்லை, ஆனால் ஒவ்வொரு கலாச்சாரத்தையும் வளர்க்கவும், இறையாட்சியை, அதாவது, நீதி, அன்பு மற்றும் அமைதியின் இறையாட்சியை உலகில் வளரச் செய்யவும் சுதந்திரம் கொண்டதாக உள்ளது. பல்வேறு மரபுகளுடன் வாழும் பாப்புவா நியூ கினியில் உள்ள அனைத்து மக்களும் ஒன்றித்து வாழ்ந்து, உடன்பிறந்த உறவின்  முன்மாதிரியை உலகுக்கு வழங்கும் வகையில், இயேசுவின் இந்த இறையாட்சி இந்த மண்ணில் முழுமையாக வரவேற்கப்படட்டும்.

உங்கள் அனைவரையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 September 2024, 15:10