தேடுதல்

மனிதகுலம் எதைச் சாதிக்க முடியும் என்பதற்கு சிங்கப்பூர் ஓர் எடுத்துக்காட்டு!

சிங்கப்பூரில் கத்தோலிக்கத் திருஅவை தோன்றிய காலத்திலிருந்தே நாட்டின் முன்னேற்றத்திற்கு, குறிப்பாக, கல்வி மற்றும் நலத் துறைகளில் அதன் தனித்துவமான பங்களிப்பை வழங்கியுள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

செப்டம்பர் 12 வியாழக்கிழமை இன்று, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்திலுள்ள கலாச்சார மையத்தில் அந்நாட்டின் அரசு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், பொதுநிலை அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய அருளுரை.

அன்புக்குரிய சகோதரர் சகோதரிகளே, உங்கள் நாடான சிங்கப்பூர் கீழான தொடக்கத்திலிருந்து, வளர்ச்சியின் மேம்பட்ட நிலையை எட்டியுள்ளது, இது அறிவார்ந்த  முடிவுகளிலிருந்து மட்டுமே உருவாகும், தற்செயலாக அல்ல.  உண்மையில், அந்த இடத்தின் குறிப்பிட்ட குணாதிசயங்களுடன் நன்கு சிந்திக்கக்கூடிய மற்றும் இணக்கமான திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை மேற்கொள்வதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் விளைவாக இது அமைந்துள்ளது.

சிங்கப்பூர் பொருளாதார ரீதியில் முன்னேறியது மட்டுமன்றி, சமூக நீதி மற்றும் பொதுநலன் உயர்வாகக் கருதப்படும் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப கடினமாக உழைத்துள்ளது என்பது மிகவும் முக்கியமானது.

வளர்ச்சியின் பயன்  எல்லோருக்கும் கிடைக்கட்டும்

வீட்டுவசதி வாரிய திட்டங்களுக்கான கொள்கைகள், உயர்தரக் கல்வி, திறமையான நலவாழ்வு அமைப்பு ஆகியவற்றின் வழியாக குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான உங்கள் உறுதிப்பாட்டை குறிப்பாக நான் இங்கே நினைவு கூர்கின்றேன். மேலும் அனைத்து சிங்கப்பூர் மக்களும் அவற்றிலிருந்து முழுமையாகப் பயன்பெறும் வரை இந்த முயற்சிகள் தொடரும் என்றும் நான் நம்புகிறேன்.

இது சம்பந்தமாக, நடைமுறைவாதத்தில் மட்டுமே கவனம் செலுத்துவது அல்லது எல்லாவற்றிற்கும் மேலாக தகுதியை மட்டுமே முன்வைப்பதில் உள்ள ஆபத்தையும் நான் இங்கே முன்னிலைப்படுத்த விரும்புகிறேன். அதாவது, முன்னேற்றத்திலிருந்து பயனடையாமல் விளிம்பில் உள்ளவர்களை விலக்குவதை நியாயப்படுத்துவதன் எதிர்பாராத விளைவு குறித்து குறிப்பிடுகிறேன்.

இங்கு, மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை ஆதரிப்பதற்கான பல்வேறு கொள்கைகள் மற்றும் முன்முயற்சிகளை நான் அங்கீகரித்து பாராட்டுகிறேன். மேலும் இன்று நாம் காணும் சிங்கப்பூருக்கு அடித்தளம் அமைத்த ஏழைகள் மற்றும் முதியோர்கள்மீது சிறப்புக் கவனம் செலுத்தப்படும் என்று நம்புகிறேன். அத்துடன் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மனித மாண்பு பாதுகாக்கப்பட வேண்டும். சமூகத்திற்குப் பெரும் பங்களிப்பை வழங்கும் இந்தத் தொழிலாளர்களின் நியாயமான ஊதியத்திற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் விரும்புகின்றேன்.

தற்போதைய டிஜிட்டல் காலத்தின் அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டின் விரைவான முன்னேற்றங்கள் யாவும் உண்மையான மற்றும் உறுதியான மனித உறவுகளை வளர்ப்பதற்கான அடிப்படைத் தேவையை மறந்துவிடக் கூடாது.

அத்துடன் இந்தத் தொழில்நுட்பங்கள் யாவும் புரிந்துணர்வையும் ஒன்றிப்பையும் ஊக்குவிப்பதன் வழியாக நம்மை நெருக்கமாகக் கொண்டு வருவதற்குப் பயன்படுத்தப்பட வேண்டும். மேலும் இவைகள் ஆபத்தான, தவறான, மற்றும் புலப்படாத எதார்த்தத்தில் நம்மை ஒருபோதும் தனிமைப்படுத்தாமல் இருக்க வேண்டும்.

சிங்கப்பூரின் பன்னிறக் கூட்டமைவு

சிங்கப்பூர் பல்வேறு இனங்கள், கலாசாரங்கள் மற்றும் மதங்கள் ஒற்றுமையாக வாழும் ஒரு பன்னிறக் கூட்டமைவு (mosaic) ஆகும். மேலும் அனைவருடனும் ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபடும் பொது அதிகாரிகளின் நடுநிலைத் தன்மை, இந்த நேர்மறையான, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு நிலையை அடைவதற்கும் அதனைப் பாதுகாப்பதற்கும் உதவுகிறது.

ஒருவருக்கொருவர்மீதான மரியாதை, ஒத்துழைப்பு, உரையாடல், சட்டத்தின் எல்லைக்குள் ஒருவரின் நம்பிக்கைகளைப் பயன்படுத்துவதற்கான சுதந்திரம் ஆகியவை சிங்கப்பூரின் வெற்றி மற்றும் நிலைத்தன்மைக்கு அனுமதிக்கும் நிபந்தனைகளாகும்.  இவைகள் மோதல்கள் மற்றும் குழப்பங்களைத் தவிர்ப்பதற்கு அவசியமானவைகளாக இருப்பதுடன், ஒரு சீரான மற்றும் நிலையான வளர்ச்சியை வழங்குகின்றன.

கத்தோலிக்கத் திருஅவையின் பங்களிப்பு

சிங்கப்பூரில் கத்தோலிக்கத் திருஅவை தோன்றிய காலத்திலிருந்தே நாட்டின் முன்னேற்றத்திற்கு, குறிப்பாக, கல்வி மற்றும் நலத் துறைகளில் அதன் தனித்துவமான பங்களிப்பை வழங்கியுள்ளது. மறைப்பணியாளர்கள், மற்றும் கத்தோலிக்க விசுவாசிகளின் தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வால் இது சாத்தியமானது.

எப்பொழுதும் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியின் வழியாக உயிரூட்டப்பட்ட கத்தோலிக்கச் சமூகம், பிறரன்புப்  பணிகளில் முன்னணியில் உள்ளது. மேலும் மனிதாபிமான முயற்சிகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும், பல நலவாழ்வு நிறுவனங்களையும், காரித்தாஸ் உட்பட பல மனிதாபிமான அமைப்புகளையும் நிர்வகிக்கிறது.

கிறிஸ்தவர் அல்லாத பிற மதங்களுடனான உறவுகள் குறித்த இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்தின் ஆவணமான 'நமது காலத்தின்' (Nostra Aetate) என்ற போதனையின்படி, திறந்த மனப்பான்மை மற்றும் ஒருவருவருக்கொருவர்மீதான மரியாதை, ஒரு நீதியான மற்றும் அமைதியான சமூகத்தைக் கட்டமைக்க வேண்டும் என்பதன் அடிப்படையில், உலகாளாவியத் திருஅவை பல்வேறு நம்பிக்கை சமூகங்களுக்கிடையில் மத உரையாடல் மற்றும் ஒத்துழைப்பை தொடர்ந்து ஊக்குவித்து வந்துள்ளது.

கிறிஸ்தவர்களை ஊக்குவிக்க வந்துள்ளேன்

திருப்பீடத்திற்கும் சிங்கப்பூருக்கும் இடையே தூதரக உறவுகள் நிறுவப்பட்ட 43 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தூதர் புனித பேதுருவின் வாரிசாக, உங்கள் மத்தியில் நான் இப்போது பிரசன்னமாகியிருக்கிறேன். எனது இந்த அப்போஸ்தலிக்கத் திருப்பயணத்தின் நோக்கம், இங்குள்ள கத்தோலிக்கர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதும், இதன் வழியாக அவர்கள் அந்நம்பிக்கைக்குச் சான்று பகர உதவுவதும், மேலும் மகிழ்ச்சியுடனும் அர்ப்பணிப்புடனும், பொதுநன்மைக்காக நல்லதோர் சமூகத்தை உருவாக்கும் நல்லெண்ணம் கொண்ட அனைவருடனும் அவர்களின் ஒத்துழைப்பைத் தொடர அவர்களை ஊக்குவிப்பதுமே ஆகும்.

சவால்களுக்கு உட்படுத்தப்படும் குடும்பங்கள்

நாம் அன்புகூர வேண்டும் மற்றும் அன்புகூரப்பட வேண்டும் என்பதையும், எல்லாரும் மற்றவர்களுடன் தொடர்புகொள்ள வேண்டும் என்பதையும் நமக்கு முதன்முதலில் கற்றுக்கொடுக்கும் நமது குடும்பங்களின் பங்களிப்பையும் நான் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன். தற்போதைய சமூகச் சூழல்களில் குடும்பங்கள் கூட பல்வேறு சவால்களுக்கு உட்படுத்தப்படுவதையும், பலவீனமடைந்துவரும் ஆபத்துகளையும் நாம் காண்கின்றோம்.

குடும்பங்கள் வாழ்க்கைக்கு அர்த்தத்தையும் வடிவத்தையும் கொடுக்கும் மதிப்புகளை கடத்தவும், திடமான மற்றும் நலமான உறவுகளை எவ்வாறு உருவாக்குவது என்பதை இளைஞர்களுக்கு கற்றுக்கொடுக்கவும் அனுமதிக்கப்பட வேண்டும். எனவே பல்வேறு நிறுவனங்களின் பணிகள் வழியாக, குடும்ப ஒற்றுமையை மேம்படுத்தவும், பாதுகாக்கவும், ஆதரிக்கவும், மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் பாராட்டப்பட வேண்டியவை.

நிலையான வளர்ச்சி மற்றும் படைப்பின் பாதுகாப்பிற்கான உங்களின் அர்ப்பணிப்பு பின்பற்றப்படுவதற்கான ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. மேலும் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதற்கான புதுமையான தீர்வுகளுக்கான உங்களின் தேடல் மற்ற நாடுகளையும் இதைச் செய்ய ஊக்குவிக்கும்.

எடுத்துக்காட்டாகத் திகழும் சிங்கப்பூர்

பொறுப்புணர்வு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய, மற்றும் உடன்பிறந்த உணர்வுடன் ஒன்றிணைந்து இணக்கமுடன் பணியாற்றுவதன் வழியாக, மனிதகுலம் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு சிங்கப்பூர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. கடவுளின் வாக்குறுதியிலும் மற்றும் அனைவருக்குமான தந்தைக்குரிய அன்பிலும் நம்பிக்கை வைத்து இந்தப் பாதையில் நீங்கள் தொடர்ந்து பயணிக்க நான் உங்களை ஊக்குவிக்கிறேன்.

சகோதரர் சகோதரிகளே, உங்கள் மக்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்குப் பதிலளிக்கவும், தாழ்மையும் நன்றியுணர்வும் கொண்டிருப்பவர்கள் வழியாக, அனைவரின் நன்மைக்காகவும் கடவுள் பெரிய காரியங்களைச் செய்ய முடியும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவும் கடவுள் உங்களுக்கு உதவட்டும்.

கடவுள் சிங்கப்பூரை ஆசீர்வதிப்பாராக!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 September 2024, 14:53