தேடுதல்

பெல்ஜியத்தில் அரசு மற்றும் சமூக அதிகாரிகளுக்கு உரை வழங்கிய திருத்தந்தை பெல்ஜியத்தில் அரசு மற்றும் சமூக அதிகாரிகளுக்கு உரை வழங்கிய திருத்தந்தை  (REUTERS)

பெல்ஜியத்தில் அரசு, சமூகத் தலைவர்களுக்கு திருத்தந்தை உரை

ஐரோப்பா தனது மக்களிடையே, சமாதானப் பாதையிலும் சகோதரத்துவப் பாதையிலும் தொடர்ந்து பயணிக்க பெல்ஜியம் தேவைப்படுகிறது.

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

பெல்ஜியம் நாடு மேற்கில் உள்ள அதே நேரத்தில் மையத்தில் உள்ள ஒரு மகத்தான, இதயத்துடிப்பாக விளங்கும் நாடு. பெல்ஜியம் ஒரு பெரிய நாடாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அதன் குறிப்பிட்ட வரலாறு மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  இரண்டாம் உலகப் போர் முடிந்த உடனேயே, களைத்துப் போயிருந்த மற்றும் மனமுடைந்திருந்த ஐரோப்பிய மக்கள், சமாதானம், ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பின் ஆழமான செயல்முறையைத் தொடங்குகையில், முக்கிய ஐரோப்பிய நிறுவனங்களை நிறுவுவதற்கான இயற்கையான இடமாக உங்கள் நாட்டைக் கண்டனர். இதற்குக் காரணம், பெல்ஜியம் ஜெர்மானிய மற்றும் இலத்தீன் பகுதி நாடுகளுக்கும்  இடையில், மற்றும்  பிரான்சுக்கும் ஜெர்மனிக்கும்  இடையில் சிக்கிக் கொண்டிருந்தது. இந்த இரண்டு நாடுகளும் மோதலின் அடித்தளத்தில் இருந்த எதிரெதிரான தேசியவாத இலட்சியங்களை கொண்டவைகளாக இருந்தன.

பெல்ஜியம் நாட்டை  ஐரோப்பியக் கண்டத்திற்கும் பிரிட்டானிய தீவுகளுக்கும் இடையேயும், ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு மொழி பேசும் பகுதிகளுக்கு இடையேயும், தெற்கு மற்றும் வடக்கு ஐரோப்பாவிற்கும் இடையேயும் ஒரு பாலம் என்று நாம் விவரிக்கலாம்.    அனைத்து மக்களும், தங்கள் சொந்த மொழிகள், சிந்தனைகள், நம்பிக்கைகள் வழியாக  மற்றவர்களை சந்திக்கவும்,  உரையாடல், பகிர்வு ஆகியவற்றை நிகழ்த்தும் பாலமாகவும்.   வர்த்தகத்தை ஊக்குவிக்கும், கலாச்சாரங்களை இணைக்கும்  பாலமாகவும்,  போரை நிராகரிப்பதற்கும் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கும் ஓர்  இன்றியமையாத பாலமாகவும் பெல்ஜியம் நாடு உள்ளது.

மெய்யாகவே, ஐரோப்பாவின் நாடுகள் எல்லைகளை மதிக்காமல்  ஏற்றுக்கொள்ள முடியாத சாக்குப்போக்குகளைப் பயன்படுத்தி  ஒப்பந்தங்களை மீறும்போது, உண்மையான சட்டத்தை மாற்ற  "வலிமையுள்ளவர் செய்வதே சரி" என்ற கோட்பாட்டுடன்  ஆயுதங்களைப் பயன்படுத்தும் போது, ஐரோப்பா   தனது மக்களிடையே, சமாதானப் பாதையிலும் சகோதரத்துவப் பாதையிலும் தொடர்ந்து பயணிக்க  பெல்ஜியம் தேவைப்படுகிறது. மேலும், அமைதியும் நல்லிணக்கமும் ஒரே முயற்சியில் வென்றெடுக்கப்படுவதில்லை, மாறாக, அவை இடைவிடாது மிகுந்த கவனத்துடனும், பொறுமையுடனும் மேற்கொள்ளவேண்டிய ஒரு கடமை. ஏனெனில், மனிதர்கள் கடந்த காலத்தின் நினைவுகளையும், மதிப்புமிக்க பிடிப்பினைகளையும் மறக்கும் போது, முந்தைய தலைமுறையினர் அனுபவித்த துன்பங்களையும், பொருளாதார இழப்புக்களையும் மறந்து, மீண்டும் பின்னோக்கி விழும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர்.

பெல்ஜியத்தின் வரலாறு ஐரோப்பாவை அதன் பாதைக்கு திரும்பவும், அதன் உண்மையான அடையாளத்தை மீண்டும் கண்டுகொள்ளவும், வாழ்வுக்கு தன்னைத் திறந்தவர்களாக குழந்தைப் பிறப்புக்களை ஊக்குவிக்கவும், போரின் வேதனைகளை வெற்றிகொள்ளவும், நல் எதிர்காலத்திற்காக மீண்டும்  முதலீடு  செய்யவும் அழைக்கிறது!

உயிர்த்தெழுந்த கிறிஸ்துவில் தான் கொண்டுள்ள விசுவாசத்திற்குச் சாட்சியமளிக்கும் கத்தோலிக்கத் திருஅவை, தனிநபர்கள், குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் தேசங்களுக்கு பாரம்பரிய, தொன்மையான  மற்றும் எப்போதும் புதிய நம்பிக்கையை வழங்கும் ஒரு பிரசன்னமாக இருக்க விரும்புகிறது.    திருஅவை இறைவனால் நிறுவப்பட்டது  என்பதால் அது புனிதமானது என்பதை  அறிந்திருந்தாலும், அதே நேரத்தில் அதன் உறுப்பினர்களின் பலவீனம் மற்றும் குறைபாடுகளை திருஅவை அனுபவிக்கிறது. திருஅவை உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணி, சிலவேளைகளில்  அவர்களின் ஆற்றலுக்கு  அப்பாற்பட்டதாக இருப்பதால் இவ்வாறு நிகழ்கிறது.

எண்ணற்ற பிறரன்பு நடவடிக்கைகளை திருஅவை கொண்டிருந்தாலும், அது ஒவ்வொரு இடத்திலும் அந்தந்த கலாச்சாரத்திற்கு இயைந்த வகையில் வாழவேண்டியிருக்கிறது எனபதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே, திருஅவை அங்கத்தினர்கள் நற்செய்தி தருவதை அதன் முழுமையிலும் அதன் தூய்மை நிலையிலும் புரிந்துகொள்வது சிரமமாக உள்ளது. இத்தகைய நிலைகளை எண்ணிப் பார்க்கும்போது, சிறார் பாலியியல் ரீதியாக தவறாக நடத்தப்பட்டதை இங்கு எடுத்துரைக்க விழைகிறேன். இச்செயலால் பாதிக்கப்பட்டவர்களிடையே அக்கறையுடன் செயல்படும் திருஅவை இத்தகு செயல்கள் மீண்டும் இடம்பெறாமலிருக்க தடுப்பு நடவடிக்கைகளைக் கொண்டு செயல்படுத்தி வருகிறது. இதைப் போன்று இந்நாட்டில் 1950 மற்றும் 70ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற கட்டாய தத்தெடுப்பு முறைகள் குறித்தும் ஆழ்ந்த கவலை கொள்கிறேன். திருமணமாகாத ஒரு பெண், குழந்தை பெற்றுக்கொள்ளும்போது அந்த குழந்தைக்கும் தாய்க்கும் நல்லது என்ற போர்வையில் தத்துக்கொடுக்கும் செயல்பாட்டை சமூகமும் சில திருஅவைத் தலைவர்களும் ஆதரித்தது இங்கு நடந்தது. தாயின் விருப்பம் இல்லாத நிலையிலும் சிலவேளைகளில் குழந்தை அவரிடம் இருந்து பிரிக்கப்பட்டு தத்து கொடுக்கப்பட்ட கொடுஞ்செயலும் நடந்தது.

பெல்ஜியத்தையும் அதன் வரலாற்றையும் பார்க்கும் ஏனைய நாடுகள் பலவற்றை அதனிடமிருந்து கற்றுக்கொள்வார்களாக. பொதுநலனுக்கே முதலிடம் கொடுக்கும்வகையில் நம் மனங்கள் மாற்றம்பெற இறைவன் நமக்கு உதவுவாராக.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 September 2024, 14:35