தேடுதல்

சிங்கப்பூர் தலத்திருஅவை அதிகாரிகளுடன் உரையாடிய திருத்தந்தை

மக்களிடையே வாழ்பவராகவும், கடவுளோடு ஒன்றித்திருப்பவராகவும், தங்கள் உடன்வாழ் குருக்களிடையே சகோதரராகவும், ஆயர்களுடன் இணைந்து செயல்படுபவராகவும் அருள்பணியாளர் இருக்க....

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அன்பு நெஞ்சங்களே, செப்டம்பர் 13, வெள்ளிக்கிழமையன்று திருத்தந்தையின் 45வது திருப்பயணத்தின் இறுதி நாள். இந்தோனேசியா, பாப்புவா நியூ கினி, கிழக்கு திமோர் ஆகிய நாடுகளுக்கான திருப்பயணத்தை நிறைவுச் செய்து செப்டம்பர் 11ஆம் தேதியன்று உள்ளூர் நேரம் பிற்பகலில் சிங்கப்பூர் வந்தடைந்த திருத்தந்தை, அன்று, தான் தங்கியிருக்கும் புனித பிரான்சிஸ் சேவியர் தியான இல்லத்தில் இயேசு சபையினரை சந்தித்து உரையாடியதோடு வேறு எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை. வியாழக்கிழமையன்று பாராளுமன்ற இல்லத்தில் அரசுத்தலைவர் மற்றும் பிரதமரை சந்தித்தல், வரவேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளல், சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழகத்தில் அரசு மற்றும் அரசியல் தலைவர்களையும் அரசியல் தூதுவர்களையும் சந்தித்தல், பின் புனித பிரான்சிஸ் சேவியர் இல்லத்தில் முன்னாள் பிரதமரைச் சந்தித்தல், தேசிய விளையாட்டரங்கில் விசுவாசிகளுக்கு திருப்பலி நிறைவேற்றல் ஆகியவை இடம்பெற்றன.

திருப்பயணத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமையன்று காலையில், தான் தங்கியிருக்கும் புனித பிரான்சிஸ் சேவியர் தியான மையத்திலேயே ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் துறவியரைச் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை. மலேசியா, சிங்கப்பூர் மற்றும் புருனே நாடுகளின் ஆயர் பேரவைத் தலைவர்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். அங்கு குழுமியிருந்த ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் துறவியரிடம், திருஅவையின் தாய்மைப் பண்பை வெளிப்படுத்துபவர்களாக அவர்கள் செயல்படவேண்டும் என கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். அருள்பணியாளர்களை நோக்கி, அவர்கள் மக்களிடையே வாழ்பவர்களாகவும், கடவுளோடு ஒன்றித்திருப்பவர்களாகவும், தங்கள் உடன்வாழ் குருக்களிடையே சகோதரர்களாகவும், ஆயர்களுடன் இணைந்து செயல்படுபவர்களாகவும் இருக்க வேண்டும் என விண்ணப்பித்தார்.  அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுப்பதற்கு முன்னர் அனைவரையும் நோக்கி, புன்னகையுடன் எப்போதும் இருங்கள் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 September 2024, 14:18