தேடுதல்

துணிவு, அழகு மற்றும் நம்பிக்கையின் சாட்சிகளாக உங்கள் பணியைத் தொடருங்கள்!

சிரமங்கள் அல்லது தவறான புரிதல்களால் நம்மையே நாம் சோர்வடைய அனுமதிக்காமல் பொறுமையாக நற்செய்தி அறிவிக்கும் பணியைத் தொடர்வோம். நீங்கள் ஆற்றும் அரும்பணிகளுக்காக உங்களுக்கு நன்றி கூறுகின்றேன் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

செப்டம்பர் 7, சனிக்கிழமை இன்று பாப்புவா நியூ கினியின் தலைநகர்  போர்ட் மோர்ஸ்பியில் ஆயர்கள், அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், துறவியர், அருள்பணித்துவ மாணவர்கள் மற்றும் பொதுநிலை மறைக்கல்வி ஆசிரியர்களுக்குத்  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய அருளுரை.

அன்புள்ள சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்தவர்களின் தூய சகாய அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த மறைமாவட்டத்தின் பேராலயத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான் பெரிதும் மகிழ்வடைகின்றேன்.

இப்போது நாம் காணும் இந்த அழகியப் பேராலயம் நமது கிறிஸ்தவ மற்றும் மறைபரப்புப் பயணத்தின் மூன்று அம்சங்களின் அடையாளமாக அமைந்துள்ளது. அவைகள் : தொடங்குவதற்கான துணிவு,  பிரசன்னமாயிருப்பதன் அழகு மற்றும் வளர்ச்சியின் நம்பிக்கை.

தொடங்குவதற்கான துணிவு

முதலாவது, தொடங்குவதற்கான துணிவு. இந்த ஆலயத்தின் கட்டுநர்கள் பெரியதொரு நம்பிக்கையுடன் தங்கள் பணியைத் தொடங்கினர், அது அவர்களுக்குப் பலனைத் தந்தது. அவர்களுக்கு முன்சென்ற கட்டுநர்களின் துணிவுமிக்க தொடக்கங்களால் மட்டுமே இது அவர்களுக்குச் சாத்தியமாயிற்று. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையப்பகுதியில் மறைபரப்புப் பணியாளர்கள் இந்த நாட்டிற்கு வந்தனர், அவர்களின் தொடக்கப் பணிகள் அவ்வளவு எளிதானதாக அமையவில்லை.

உண்மையில் அவர்களின் சில முயற்சிகள் தோல்வியடைந்தன.  எனினும், அவர்கள் தாங்கள் தொடங்கிய பணிகளைக் கைவிடவில்லை; மிகுந்த நம்பிக்கையுடனும், அப்போஸ்தலிக்கப் பேரார்வத்துடனும், பல தியாகங்களுடனும், அவர்கள் தொடர்ந்து நற்செய்தியை அறிவித்து, தங்கள் சகோதரர் சகோதரிகளுக்குச் சேவை செய்தனர். அவர்கள் தோல்வியுற்ற போதெல்லாம் மீண்டும் பல முறை தொடங்கினர்.

அவர்களுக்கு நன்றி கூறுவோம். காரணம், அவர்களின் தொடக்கங்கள் (starts) மற்றும் மறுதொடக்கங்களால்தான் (restarts) நாம் இங்கே இருக்கிறோம். நம்மத்தியில் தற்போது சவால்கள் இருந்தபோதிலும், நாம்  தனியாக இல்லை என்பதை அறிந்து அச்சமின்றி தொடர்ந்து முன்னேறுகிறோம்.

இது சம்பந்தமாக, நாம் கேள்விப்பட்டவற்றின் ஓளியில், உங்கள் சொந்த "தொடக்கங்களுக்கு" (starts) இந்த நாட்டின் விளிம்புநிலை பகுதிகளை, உங்களின் பணிக்கான ஒரு முக்கியமான திசையாக (பகுதியாக) உங்களுக்குப் பரிந்துரைக்க விரும்புகிறேன். நகர்ப்புற மக்கள்தொகையில் மிகவும் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் சில நேரங்களில் அடிப்படைத் தேவைகள் இல்லாத மிகவும் தொலைதூர மற்றும் கைவிடப்பட்ட பகுதிகளில் வாழ்பவர்களைப் பற்றி நான் இங்கே நினைக்கிறேன். மேலும் முற்சார்பு எண்ணம் மற்றும் மூடநம்பிக்கையால், தார்மீக ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஒதுக்கப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களைப் பற்றியும் நான் நினைக்கிறேன்.

திருஅவை, குறிப்பாக, இந்தச் சகோதரர் சகோதரிகளுடன் நெருக்கமாக இருக்க விரும்புகிறது, ஏனென்றால் அவர்களில் இயேசு ஒரு சிறப்பு வழியில் இருக்கிறார் (காண்க. மத் 25:31-40). நம் தலையாகிய இயேசு கிறிஸ்து பிரசன்னமாயிருக்கும் இடத்தில், அவருடைய உறுப்புகளாகிய நாமும் இருக்கிறோம், ஏனென்றால் நாம் ஒரே உடலைச் சேர்ந்தவர்கள், "அவரால்தான் தசைநார் ஒவ்வொன்றினாலும் இணைக்கப்பட்டு பின்னப்பட்டுள்ளோம்" (எபே. 4:16).

பிரசன்னமாயிருப்பதன் அழகு

தொடங்குவதற்கான துணிவு என்ற நமது முதல் அம்சம், இப்போது பிரசன்னமாயிருப்பதன் அழகு என்ற இரண்டாவது அம்சத்திற்கு நம்மைக் கொண்டுவருகிறது. இந்தப் பேராலயத்தின் பங்குத்தந்தை இல்லத்தை அலங்கரிக்கும் வளமையின் அடையாளமான கினா கடற்குப்பிகளில் இது அடையாளப்படுத்தப்படுவதை நாம் காணலாம். இறைத்தந்தையின் பார்வையில் நாம் மிகவும் அழகான விலைமதிப்பற்ற செல்வம் என்பதை அவை நமக்கு நினைவூட்டுகின்றன.

இயேசுவின் அருகிலும், மரியாவின் மேலங்கியின் கீழும், ஆண்டவர் நம்மிடம் ஒப்படைத்த அனைத்து சகோதரர் சகோதரிகளோடும், இந்நிகழ்வில் பங்குபெற முடியாதவர்களோடும், முழு உலகமும் நற்செய்தியை அதன் ஆற்றல் மற்றும் ஒளியில் அறிந்து பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையால் நாம் ஆன்மிக ரீதியாக இங்கே இணைந்திருக்கிறோம்.

ஒன்றிணைந்த பயணத்தினுடைய அருளின் அனுபவம் (Grace’s experience of the Synod) நமக்கு நினைவூட்டுவது போல, ஒருவரையொருவர் மதிப்பதன் வழியாகவும்,  மதித்து, ஒருவருக்கொருவர் பணியாற்றுவதன் வழியாகவும், நாம் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் இயேசுவைப் பின்பற்றி அவருடைய நற்செய்தியை அறிவிப்பது எவ்வளவு அழகாக இருக்கிறது என்பதைக் காட்டலாம்.

அப்படியானால், தற்போது பிரசன்னமாகியிருப்பதன் அழகு என்பது, பெரிய நிகழ்வுகளிலும் வெற்றியின் தருணங்களிலும் அதிகம் அனுபவிக்கப்படுவதில்லை, மாறாக நாம் ஒவ்வொரு நாளும் ஒன்றித்து வளர முயற்சிக்கும் நம்பிக்கையிலும் அன்பிலும்தான் அனுபவிக்கப்படுகிறது என்பதை உணர்ந்துகொள்வோம்.

நம்பிக்கையின் வளர்ச்சி

இப்போது நாம் மூன்றாவது மற்றும் இறுதி  அம்சமான நம்பிக்கையின் வளர்ச்சிக்கு வருகின்றோம். இந்தப் பேராலயத்தில், இஸ்ரயேல் மக்கள் செங்கடலைக் கடக்கும் மற்றும் ஆபிரகாம், ஈசாக், மோசேயின் உருவங்களை உள்ளடக்கிய ஒரு கவனத்தை ஈர்க்கத்தக்க நம்பிக்கை உருவாக்கும் படங்கள் உள்ளன.

அவர்கள் நம்பிக்கையின் வழியாக பலனடைந்த நம் முதுபெரும் தந்தையர்கள். அவர்கள் கடவுளை நம்பியதால் ஏராளமான சந்ததிகளைப் பெற்றனர் (காண்க. தொநூ 15:5; 26:3-5; விப. 32:7-14). இது ஒரு முக்கியமான குறியீடாகும், ஏனென்றால், நமது அப்போஸ்தலிக்கப் பலன்களில் நம்பிக்கை வைத்து, உலகத்தின் உழவுசால் நிலங்களில் நன்மையின் சிறு விதைகளைத் தொடர்ந்து விதைப்பதற்கு இது இன்று நம்மை ஊக்குவிக்கிறது.

இவைகள் கடுகு விதைகள் போல சிறியதாகத் தோன்றலாம், ஆனால் நாம் கடவுளை நம்பி, அவற்றைத் தொடர்ந்து விதைக்கும்போது, அவ்விதைகள் அவரின் அருளால் துளிர்விட்டு, ஏராளமான விளைச்சலைக் கொடுக்கும் (காண்க. மத் 13:3-9) மற்றும் வானத்துப் பறவைகளை வரவேற்கும் திறன் கொண்ட மரங்களை உருவாக்கும். (காண்க. மாற்  4:30-32).  மேலும் நாம் எதை விதைக்கிறோமோ அதன் வளர்ச்சி நம்முடைய சொந்த வேலை அல்ல, மாறாக அது கடவுளுக்குரியது (காண்க. 1 கொரி 3:7) என்பதை புனித பவுல் நமக்கு நினைவூட்டுகிறார்.

நமது தூய அன்னையாம் திருஅவை, நமது சொந்த முயற்சியால் கூட, கடவுள் அவரது இறையாட்சியை இம்மண்ணகத்தில் நிறுவச் செய்பவர்" (இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கம், விதித்தொகுப்பு, 42) என்பதை வலியுறுத்தும்போது இதே கருத்தையே போதிக்கிறது.

எனவே, சிரமங்கள் அல்லது தவறான புரிதல்களால் நம்மையே நாம் சோர்வடைய அனுமதிக்காமல் பொறுமையாக நற்செய்தி அறிவிக்கும் பணியைத் தொடர்வோம். அன்பான சகோதரர் சகோதரிகளே, பாப்புவா நியூ கினி மற்றும் சாலமோன் தீவுகளில் நற்செய்தி நன்றாக வேரூன்றி இருப்பதற்கும், தொடர்ந்து பரவி வருவதற்கும் நாம் ஒன்றிணைந்து இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

துணிவு, அழகு மற்றும் நம்பிக்கையின் சாட்சிகளாக உங்கள் பணியைத் தொடருங்கள்! நீங்கள் ஆற்றும் அரும்பணிகளுக்காக உங்களுக்கு நன்றி கூறுகின்றேன். என் இதயத்தின் ஆழத்திலிருந்து உங்கள் அனைவரையும் நான் ஆசீர்வதிக்கின்றேன்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 September 2024, 15:26