தேடுதல்

வத்திக்கான் கொடி நிறத்தில் உடையணிந்த கோவில் பாடகர் குழு வத்திக்கான் கொடி நிறத்தில் உடையணிந்த கோவில் பாடகர் குழு  (ANSA)

உலகில் கத்தோலிக்கர்களின் இருப்பு.-கத்தோலிக்க நாடு கிழக்கு திமோர்

நாட்டில் கத்தோலிக்கர்களை அதிகமாகக் கொண்டுள்ள நாடுகள் என்று பார்த்தோமானால், ஏறக்குறைய 11 கோடி கத்தோலிக்கர்களைக் கொண்டு பிரேசில் நாடு முதலில் நிற்கிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

நாட்டு மக்கள் தொகையில் கத்தோலிக்கர்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகளுள் வத்திக்கானுக்குப்பின் முதல் நாடாக இருப்பது கிழக்கு திமோர் நாடாகும். வத்திக்கான் நாட்டில் ஆயிரத்திற்கும் குறைவானவர்களே குடிமக்களாக, அதுவும் அனைவரும் கத்தோலிக்கர்களாக இருக்க, கிழக்கு திமோர் நாட்டிலோ மொத்த மக்கள் தொகையில் 97.8 விழுக்காட்டினர்  கத்தோலிக்கர்களாக உள்ளனர். PEW என்ற ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, கிழக்கு திமோர் நாட்டிற்குப்பின், சான் மரினோ, பரகுவாய் மால்ட்டா, மோனக்கோ, போர்த்துக்கல், குரோவேசியா, காப்போ வெர்தே, லித்துவேனியா, செய்செலஸ் ஆகிய நாடுகளைத் தாண்டித்தான், விழுக்காட்டு விகிதத்தில் கத்தோலிக்கர்களைக் கொண்டு இத்தாலி நாடே வருகிறது. நாட்டு மக்கள் தொகையில் 74 விழுக்காட்டுக் கத்தோலிக்கர்களைக் கொண்டுள்ளதாக இத்தாலி, மெக்சிகோ மற்றும் பெரு நாடுகள் வருகின்றன. இந்த ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, இந்தியாவில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 0.9 விழுக்காடுதான். மக்கள் தொகை விகிதத்தில் இதைவிட அதிக விழுக்காட்டைக் கொண்டு இலங்கை, சவுதி அரேபியா, குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், புரூனே, ஓமன், இஸ்ராயேல் ஆகியவை உள்ளன. சவுதி அரேபியாவில் உள்ள மொத்த மக்களுள் 2.5 விழுக்காட்டினர் கத்தோலிக்கர் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இது, நாட்டிற்குள் கத்தோலிக்கரின் எண்ணிக்கையில் அதிக விழுக்காட்டைக் கொண்டுள்ள நாடுகளின் பட்டியல். ஆனால், நாட்டில் கத்தோலிக்கர்களை அதிகமாகக் கொண்டுள்ள நாடுகள் என்று பார்த்தோமானால், ஏறக்குறைய 11 கோடி கத்தோலிக்கர்களைக் கொண்டு பிரேசில் நாடு முதலில் நிற்க, அதைத் தொடர்ந்து மெக்சிகோ, பிலிப்பீன்ஸ், அமெரிக்க ஐக்கிய நாடு, இத்தாலி, காங்கோ ஜனநாயக குடியரசு, கொலம்பியா, நெதர்லாந்து, பிரான்ஸ், போலந்து ஆகியவை அடுத்தடுத்து வருகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 September 2024, 14:58