தேடுதல்

இளையோரைச் சந்தித்தபின் கிழக்கு திமோரிலிருந்து விடைபெறுதல்

சுதந்திரம், அர்ப்பணிப்பு, உடன்பிறந்த உணர்வு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அறிந்து, மற்றவர்களுக்கு நன்மை செய்வதற்கான வாய்ப்பாக விடுதலையைக் கைக்கொள்ளுங்கள்

ஜெர்சிலின் டிக்ரோஸ் – வத்திக்கான்

செப்டம்பர் 11ஆம் தேதி காலையில் திருப்பீடத் தூதரகத்தில் தனியாக திருப்பலியை நிறைவேற்றியபின், திருப்பீடத்தூதரக அதிகாரிகள், பணியாளர்கள் அனைவருக்கும் தன் நன்றியை வெளியிட்டு விடைபெற்ற திருத்தந்தை, அங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கருத்தரங்கு மையம் நோக்கி பயணமானார். அங்கு அவருக்காக இளையோர் காத்திருந்தனர். ஒவ்வொரு நாட்டிலும் இளைய சமுதாயத்தைச் சந்திப்பதை குறிக்கோளாகக் கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிழக்கு திமோர் நாட்டிலிருந்து விடைபெறும் முன்னால் அந்நாட்டின் இறுதி நிகழ்ச்சியாக இளையோருடனான சந்திப்பை மேற்கொண்டார். ஏற்கனவே பாப்புவா நியூ கினி நாட்டிலும் விடைபெறும் முன்னர் இடம்பெற்ற இறுதி நிகழ்ச்சியாக இளையோருடன் ஆன சந்திப்பு இருந்தது. இந்தோனேசிய நாட்டிலோ 4ஆம் தேதி மாலை ஸ்கோலாஸ் ஒக்காரந்தஸ் என்ற இளையோர் குழுவை அவர்களின் மையத்திலேயே சந்தித்து உரை வழங்கியது இந்த நம் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கேட்டுவருவோருக்கு தெரிந்ததே. செப்டம்பர் 11 ஆம் தேதி காலையில் திலியின் கருத்தரங்கு மையத்தை திருத்தந்தை வந்தடைந்தபோது உள்ளூர் நேரம் காலை 9 மணி 30 நிமிடங்கள். இந்திய நேரம் காலை 6 மணி.

இளம் கத்தோலிக்க நாடான கிழக்கு திமோரின் இளையோருடனான இச்சந்திப்பானது கருத்தரங்கு மையத்தில் நடைபெற, இந்த நிகழ்வில் இளையோர் ஏறக்குறைய 3000 பேர் கலந்துகொண்டனர். சுதந்திரம், அர்ப்பணிப்பு, உடன்பிறந்த உணர்வு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, மற்றவர்களுக்கு நன்மை செய்வதற்கான வாய்ப்பாக விடுதலையைக் கைக்கொள்ளுங்கள் என அந்நாட்டின் இளையோருக்கு அறிவுரை வழங்கினார் திருத்தந்தை.

ஏறக்குறைய ஒரு மணி நேரம் இடம்பெற்ற இளையோருடனான சந்திப்புக்குப்பின் 7.3 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள திலி பன்னாட்டு விமான நிலையம் நோக்கி காரில் பயணம் செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தையை வழியனுப்ப கிழக்கு திமோர் நாட்டின் அரசுத்தலைவர் José Manuel Ramos-Horta அவர்கள் வந்திருந்தார். விமான நிலைய சிறப்பு விருந்தினர் அறையில் இரு தலைவர்களும் சிறிது நேரம் சந்தித்து உரையாடியபின், திருத்தந்தையின் சிங்கப்பூர் நாட்டிற்கான விமானப் பயணம் உள்ளூர் நேரம் காலை ஏறக்குறைய 11 மணி 30 நிமிடங்களுக்குத் துவங்கியது.

கிழக்கு திமோர் தலைநகர் திலிக்கும் சிங்கப்பூருக்கும் இடையேயான தூரம் 2640 கிலோமீட்டராகும். 4 நாடுகளை உள்ளடக்கிய திருத்தந்தையின் திருப்பயணத்தில் சிங்கப்பூர் கடைசி நாடாகும். 13ஆம் தேதி காலை வரை சிங்கப்பூர் நாட்டில் திருப்பயணம் மேற்கொள்கிறார் திருத்தந்தை. ஏற்கனவே திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் 1986ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் திருப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 3.5 விழுக்காட்டினரையே கத்தோலிக்கர்களாகக் கொண்ட சிங்கப்பூரில் 3 உரைகளை வழங்க உள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்நாட்டில் 30 உயர் குருமடமாணவர்கள் அருள்பணியாளராவதற்கு பயிற்சிபெற்று வருகின்றனர். சிங்கப்பூரில் 1128 கத்தோலிக்கருக்கு ஓர் அருள்பணியாளர் என்ற விகிதத்தில் அருள்பணியாளர்களின் எண்ணிக்கை உள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 September 2024, 15:18