தேடுதல்

பெல்ஜியம் நோக்கிய திருத்தந்தையின் பயணம்

பெல்ஜியம் உள்ளூர் நேரம் மாலை 7.06, அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 10.36 மணியளவில் Bruxelles இன் Melsbroek விமான நிலையத்தை வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைஇடைவிடாது பெய்த மழையிலும் பெல்ஜியம் நாட்டின் அரசர் பிலிப்போ, அரசி மத்தில்தே ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

செப்டம்பர் 26 வியாழன் பெல்ஜியம் உள்ளூர் நேரம் மாலை 7.06, அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 10.36 மணியளவில் Bruxelles இன் Melsbroek விமான நிலையத்தை வந்தடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 307 கிமீ தூரத்தை 55 நிமிடங்களில் பயணித்து விமான நிலையத்தை வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, பெல்ஜியம் திருப்பீடத்தூதுவரும் விந்தா மறைமாவட்ட பட்டம்சார் ஆயருமான பேரருள்திரு Franco Coppola அவர்கள், விமானத்திற்குள் சென்று வரவேற்றார். இடைவிடாது பெய்த மழையிலும் பெல்ஜியம் நாட்டின் அரசர் பிலிப்போ, அரசி மத்தில்தே ஆகியோர் திருத்தந்தையை விமான நிலையத்தில் வரவேற்றனர். இரு சிறார் பாரம்பரிய முறைப்படி மலர்களைக் கொடுத்து திருத்தந்தையை வரவேற்க, விமான நிலையத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் திருத்தந்தைக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு வழங்கப்பட்டது. வத்திக்கான் மற்றும் பெல்ஜியம் நாட்டுப்பண்கள் பாடப்பட்டதைத் தொடர்ந்து சிறுகுழந்தைகள் பாடல் ஒன்றினைப் பாடி திருத்தந்தையை மகிழ்வுடன் வரவேற்றனர்.

அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு 18.2 கிமீ தூரம் காரில் பயணித்து திருப்பீடத்தூதரகம் வந்து சேர்ந்தார் திருத்தந்தை.

பெல்ஜியம் நாட்டின் திருப்பீடத் தூதரகமானது வோலுவே-செயிண்ட்-பியர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. புரூக்செல்ஸ் தலைநகரத்தில் (Franciscains – Franciskanenlaan) ஃபிரான்சிஸ்கெய்ன்ஸ் பகுதியில் அமைந்துள்ளது. மேலும் பெல்ஜியம் Notre-Dame des Grâces பேராலயம் மற்றும் Parvis des Franciscains வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ளது. உள்ளூர் நேரம் ஏறக்குறைய இரவு 8.00 மணியளவில் திருப்பீடத்தூதரகத்தை வந்தடைந்த  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரவு உணவினை திருப்பீடத்தூதரகத்தில் உண்டு நித்திரைக்குச் சென்றார்.                 

செப்டம்பர் 26 வியாழனன்று காலை அரசுத்தலைவர்களுக்கான உரை, மாலையில் துறவறத்தாருக்கான உரை என இரண்டு உரைகளை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது  46ஆவது திருத்தூதுப் பயணத்தின் முதல் நாளினை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 September 2024, 13:55