தேடுதல்

பெல்ஜியம் நாட்டில் திருத்தந்தையின் முதல் நாள் பயண நிகழ்வுகள்

Bruxelles லிருந்து சிறிது தூரத்தில் உள்ள பெல்ஜியம் நாட்டு அரசரின் அரசு மாளிகையானது அதிகாரப்பூர்வ விழாக்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். இவ்வில்லத்தில் பெல்ஜியத்தின் மன்னர் வழி வந்த அரசர் பிலிப்போ மற்றும் அரசி மத்தில்தே ஆகியோரைச் சந்தித்து தனது திருத்தூதுப் பயணத்தின் இரண்டாம் நாளையும் பெல்ஜியம் நாட்டில் முதல் நாளையும் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

செப்டம்பர் 27 வெள்ளிக்கிழமை காலை திருப்பீடத்தூதரகத்தில் தனியாக திருப்பலி நிறைவேற்றி தனது திருத்தூதுப் பயணத்தின் இரண்டாம் நாளை துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புரூக்செல்ஸ் உள்ள திருப்பீடத்தூதரகத்திலிருந்து புறப்பட்டு 11. 9 கிமீ தூரம் காரில் பயணித்து கஸ்தெல்லோ தி லேக்கென் என்னுமிடத்தை வந்தடைந்தார்.

Bruxelles லிருந்து சிறிது தூரத்தில் உள்ள இவ்வில்லமானது பெல்ஜியம் நாட்டு அரசரின் அரசு மாளிகையாகும். அதிகாரப்பூர்வ விழாக்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் இவ்வில்லத்தில் பெல்ஜியத்தின் மன்னர் வழி வந்த அரசர் பிலிப்போ மற்றும் அரசி மத்தில்தே ஆகியோரைச் சந்தித்து தனது திருத்தூதுப் பயணத்தின் இரண்டாம் நாளையும் பெல்ஜியம் நாட்டில் முதல் நாளையும் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

உள்ளூர் நேரம் காலை 9.15 இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 12.45 மணிக்கு அரசு மாளிகையை வந்தடைந்த திருத்தந்தை அவர்கள், தனது வருகையை பதிவுசெய்து அரசுப் புத்தகத்தில் கையொப்பமிட்டார். அதன்பின் பரிசுப்பொருள்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

பெல்ஜியம் நாட்டு அரசர் பிலிப்போ

அரசர் பிலிப்பு லெயோபோல்ட் லோட்த்விக் மரியா 1960 ஆம் ஆண்டு  அரசர் இரண்டாம் ஆல்பர்ட் மறும் அரசி பவுலா ரூஃபோ என்பவருக்கு மகனாகப் பிறந்தவர். 1993ஆம் ஆண்டு ஜூலை 31 அன்று அரசர் பால்தோவினோ இறந்ததும் இவரது தந்தை இரண்டாம் ஆல்பர்ட் அரசரானார். இவரதுத் தந்தையைத் தொடர்ந்து பிலிப்போ 2013 ஆம் ஆண்டு ஜூலை 21 முதல் பெல்ஜியம் நாட்டின் அரசராகப் பொறுப்பேற்று பணியாற்றி வருகின்றார். மத்தில்தே என்பவரைத் திருமணம் செய்த அரசர் பிலிப்போவிற்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.

பெல்ஜியம் நாட்டு அரசர் மற்றும் அரசியைத் தனியாக சந்தித்து உரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அரசு மாளிகையில் பெல்ஜியம் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் உயர்மட்டத்தலைவர்களை சந்திப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிராண்டே கலேரியா இடத்தை வந்தடைந்தார். ஏறக்குறைய 300 அரசு அதிகாரிகள் குழுமியிருக்க முதலில் பெல்ஜியம் நாட்டின் அரசர் பிலிப்போ திருத்தந்தையை வரவேற்று உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது 46 ஆவது திருத்தூதுப் பயணத்தின் மூன்றாம் உரையும் பெல்ஜியம் நாட்டு அரசு அதிகாரிகள் மற்றும் தலைவர்களுக்கான முதல் உரையினையும் வழங்கினார். திருத்தந்தையின் உரையினது தமிழாக்கச் சுருக்கத்தினை இப்போது நாம் கேட்கலாம்.

இவ்வாறு தனது உரையினை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அரசு மாளிகையில் இருந்து புறப்பட்டு 10.9 கிமீ தூரம் காரில் பயணித்து பெல்ஜியம் திருப்பீடத்தூதரகம் வந்துசேர்ந்தார். மதிய உணவினை திருப்பீடத்தூதரகத்தில் எடுத்துக்கொண்ட திருத்தந்தை அவர்கள் இன்று மாலை லூவன் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தாரைச் சந்தித்து உரையாற்றி தனது திருத்தூதுப்பயணத்தின் இரண்டாம் நாளை நிறைவு செய்ய உள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 September 2024, 14:00