தேடுதல்

நம்பிக்கை வாழ்க்கைக்கு சான்று பகர்ந்தவர் அருளாளர் ஜான் ஹாவ்லிக்

ஆகஸ்ட் 31 சனிக்கிழமை ஸ்லோவாக்கியாவின் சஸ்டின் நகரில், தூய வின்சென்ட் தே பவுல் மறைப்பணி சபையைச் சார்ந்த ஜான் ஹாவ்லிக் அருளாளராக உயர்த்தப்பட்டார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

அருளாளர் ஜான் ஹால்விக் அவர்கள் மறைசாட்சிய வாழ்வு, நம்பிக்கை வாழ்க்கைக்கு சான்று பகரும் விடாமுயற்சி போன்ற நற்பண்புகளைக் கொண்டவர் என்றும், அவரது சான்று வாழ்வானது அவரைப்போல கிறிஸ்தவத்திற்காக மறைசாட்சிய துன்பங்களை அனுபவிக்கும் மக்களுக்கு ஊக்கமூட்டுவதாக இருக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 1 ஞாயிற்றுக்கிழமை வழங்கிய மூவேளை செபஉரையைத் தொடர்ந்து வழங்கிய செப விண்ணப்பங்களின்போது இவ்வாறு எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், ஆகஸ்ட் 31 சனிக்கிழமை ஸ்லோவாக்கியாவின் சஸ்டின் நகரில் தூய வின்சென்ட் தே பவுல் மறைப்பணியாளர் சபையைச் சார்ந்த ஜான் ஹால்விக் அருளாளராக உயர்த்தப்பட்டதை எடுத்துரைத்து வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தார்.

புர்கினா பாசோ தாக்குதல்

ஆகஸ்ட் 24, சனிக்கிழமையன்று, புர்கினா பாசோவின் பர்சலோகோ பகுதியில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலினால் இறந்த நூற்றுக்கணக்கான பெண்கள், குழந்தைகள் மற்றும் காயமடைந்தவர்களுக்காகத் தனது ஆழ்ந்த வருத்தத்தை எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், மனித உயிர்களுக்கு எதிரான இந்த கொடூரமான தாக்குதல்களை கண்டித்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது நெருக்கத்தையும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இதயப்பூர்வமான இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் புர்கினா பாசோவின் அன்பான மக்கள் அனைவரும் அமைதியையும் பாதுகாப்பையும் மீட்டெடுக்க கன்னி மரியா உதவுவாராக என்றும் கூறிய திருத்தந்தை அவர்கள் பிரேசிலின் ரெசிஃப் நகரில் உள்ள நோசா சென்ஹோரா டா கான்செய்சாவோ ஆலயத்தில் நடந்த விபத்தில் பலியானவர்களுக்காக செபிப்பதாகவும், உயிர்த்த இறைவன் காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறட்டும் என்றும் கூறினார்.

துன்புறும் உக்ரைன் 

கடுமையாக தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரேனிய மக்களுடன் தனது நெருக்கத்தை எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இச்செயல்கள் உயிரிழப்புகள் மற்றும் காயங்களை ஏற்படுத்துவதோடு, மின்சாரம் மற்றும் தண்ணீர் இல்லாமல் இலட்சத்திற்கும் அதிகமான மக்களை துன்பத்தில் வாட்டியுள்ளன என்றும் எடுத்துரைத்தார்.

எளிய மக்களின் குரலை எப்போதும் கடவுள் கேட்கின்றார் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், அம்மக்களின் துன்பங்களில் அவர்களின் குரல் கேட்காமல் அலட்சியமாக கடவுள் ஒருபோதும் இருக்கமாட்டார் என்றும் கூறினார்.

பாலஸ்தீன், இஸ்ரயேல் போன்ற பகுதிகளில் நிலவும் தொடர் மோதல்கள் வருத்தத்தைத் தருகின்றன என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், போலியோ உட்பட பல நோய்கள் காசாவில் பரவி வருவதால் பேச்சுவார்த்தைகளை நிறுத்தாமல் உடனடி போர்நிறுத்தம்,  பிணையக்கைதிகளை விடுவித்தல், மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டுகோள்விடுத்தார்.

புனித பூமியில், எருசலேமில் அமைதி நிலவட்டும்! புனித நகரம் கிறிஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் முஸ்லிம்கள் மரியாதை மற்றும் வரவேற்பை உணரக்கூடிய சந்திப்பின் இடமாக இருக்கட்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

படைப்பு மீது அக்கறைக்கான செபநாள்

கத்தோலிக்க திருஅவையில் செப்டம்பர் முதல் நாள் சிறப்பிக்கப்படும் படைப்பு மீது அக்கறைக்கான செபநாள் பற்றி எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், நிறுவனம், இயக்கம், குடும்பம் மற்றும் ஒவ்வொரு நபரும் நாம் வாழ்கின்ற இந்த பொதுவான இல்லமாகிய பூமியின்மீது அக்கறை கொண்டு வாழ வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் காயம்பட்ட பூமியின் அழுகுரலானது அதிகமாகி வருகின்றது, அது ஆபத்தை எடுத்துரைக்கின்றது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், இதனைத் தடுக்க உறுதியான மற்றும் அவசர நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.   

ஆசியா இந்தோனேசியா திருத்தூதுப்பயணம்

செப்டம்பர் 2 முதல் தான் தொடங்க இருக்கும் ஆசியா மற்றும் ஓசியானியாவிற்கான திருத்தூதுப் பயணம் பற்றி எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இந்தப் பயணம் நன்முறையில் அமைய சிறப்பாக செபிக்க வேண்டும் என்று திருப்பயணிகளிடம் கேட்டுக்கொண்டார்.

உரோம் நகரத்தார், உலகின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தி தனது செப விண்ணப்பங்களை நிறைவுசெய்தார் திருத்தந்தை  பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 September 2024, 14:41