தேடுதல்

அரசர் பால்டோவின் விளையாட்டரங்கத்தில் திருப்பலி

செப்டம்பர் 29 ஞாயிற்றுக்கிழமை காலை உள்ளூர் நேரம் 8.30 மணியளவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் சார்ல்ஸ மிக்கேல் என்பவரைச் சந்தித்து சிரிது நேரம் உரையாடினார் திருத்தந்தை. அங்கிருந்து 13.6 கிமீ தூரம் காரில் பயணித்து ஞாயிறு திருப்பலி நிறைவேற்றுவதற்காக அரசர் பால்டோவின் விளையாட்டரங்கத்திற்கு வந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

அரசர் பால்டோவின் விளையாட்டரங்கத்தை உள்ளூர் நேரம் காலை 9.15 இந்திய இலங்கை நேரம் காலை 12.45 மணியளவில் வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திறந்த காரில் பயணித்து மக்களிடையே வலம் வந்தார். ஏறக்குறைய 40000 மக்கள் கூடியிருந்த விளையாட்டரங்கில் ஞாயிறு திருப்பலியினை பிரெஞ்சு மொழியில் நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். பொதுக்காலம் 26ஆவது ஞாயிற்றுக்கிழமை திருவழிபாட்டு திருப்பலியானது ஆரம்பமானது. அதன்பின் பேராயர் லூக் பிரிதெலின்  இறையடியார் அன்னா தெ ஜீசஸ் அதாவது இயேசுவின் அன்னா அவர்களின் அருளாளராக உயர்த்தப்படுவதற்கான கோரிக்கையை திருத்தந்தையின் முன் வைத்தார். அதனைத்தொடர்ந்து இறையடியாரின் வாழ்க்கைக் குறிப்புக்கள் வாசிக்கப்பட்டன.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இறையடியார் இயேசுவின் அன்னா அருளாளராக உயர்த்தப்பட்டார் என எடுத்துரைத்தார். மக்களின் கரவொலியைத் தொடர்ந்து வானவர் கீதம் பாடப்பட்டது. மூன்று அருள்சகோதரிகள் அருளாளர் ஆனா தே ஜீசஸின் அருளீக்கத்தை பீடத்தின் வலப்புறத்தில் வைக்கப்பட்டிருந்த அன்னையின் திருஉருவத்தின் முன் வைத்தனர். தொடர்ந்து ஞாயிறு வழிபாட்டு வாசகங்கள் வாசிக்கப்பட்டன. நற்செய்தி வாசகத்திற்குப் பின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது மறையுரையினை மக்களுக்கு வழங்கினார்.

திருத்தந்தையின் மறையுரையைத் தொடர்ந்து ஓலாந்தா, பிரெஞ்சு, ஜெர்மன், ஆங்கிலம், இத்தாலியம் ஆகிய மொழிகளில் நம்பிக்கையாளர் மன்றாட்டுக்கள் வாசித்தளிக்கப்பட்டன. பேராயர் லூக் திருப்பலியின் நற்கருணைப் பகுதியை வழிநடத்த திருநற்கருணைக் கொண்டாட்டத்துடன் திருப்பலி நிறைவுற்றது. பேராயர் லூக் பிரிதெலின் அவர்களின் நன்றியுரைக்குப் பின் மக்களுக்கு மூவேளை செப உரையினை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தனது திருத்தூதுப்பயணத்திற்கு உதவிய அனைவருக்கும் தன் நன்றியினைத் தெரிவித்த திருத்தந்தை அவர்கள், தனக்காக செபித்த அனைவருக்காகவும் குறிப்பாக ஏழைகள், நோயாளிகள், முதியவர்கள், புலபெயர்ந்தோர் என தான் சந்தித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். உலக புலம்பெயர்ந்தோர் நாளை முன்னிட்டு உடன்பிறந்த உறவுடன் புலம்பெயர்ந்தோரை நாம் பார்க்க வேண்டும் என்றும், இயேசுவை அவர்கள் முகத்தில் காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

லெபனோனில் போரினால் துன்புறும் மக்களை நினைவுகூர்ந்த திருத்தந்தை மத்திய தரைக்கடல் பகுதிகள், காசா, பாலஸ்தீனம், இஸ்ரயேல், உக்ரைன் என போரினால் துன்புறும் மக்கள் அனைவருக்காகவும் செபிக்க வலியுறுத்தினார்.

பெல்ஜியம் மட்டுமல்லாது ஓலாந்தா, ஜெர்மனி, பிரான்ஸிலிருந்து வந்திருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், அரசர் பால்டோவினோவின் மறைசாட்சிய வாழ்வை அருளாளர் நிலைக்கு உயர்த்துவதற்கான படிநிலைகளை முன்னெடுக்க தான் உரோம் சென்ற உடன் வலியுறுத்த இருப்பதாகவும் வாக்குறுதி அளித்தார்.  

அதன் பின் கூடியிருந்த மக்களுக்கு மூவேளை செப உரையைத் தொடர்ந்த தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார் திருத்தந்தை.  அதன்பின் அங்கிருந்து 14.7 கிமீ தூரம் காரில் பயணித்து திருப்பீடத்தூதகரகம் வந்தார் திருத்தந்தை. உள்ளூர் நேரம் பிற்பகல் 13.21 மணிக்கு புரூக்செல்ஸ் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மதிய உணவினை விமானத்திலே எடுத்துக்கொண்டு உரோம் பிற்பகலில் உரோம் திரும்ப உள்ளார். இத்துடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 46ஆவது திருத்தூதுப்பயணம் நிறைவிற்கு வருகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 September 2024, 15:24