தங்களிடம் ஒப்படைக்கப்பட்டவற்றை பராமரிக்கும் விழிப்புணர்வு தேவை
மெரினா ராஜ் - வத்திக்கான்
பாதுகாத்தல் என்பது காத்தல், பராமரித்தல், கண்காணித்தல், தடுத்தல், கவனித்தல் போன்றவற்றை உள்ளடக்கிய பன்முகச்செயல் என்றும், தங்களிடம் ஒப்படைக்கப்பட்டவற்றைப் பராமரித்து கவனிக்கும் பொறுப்பு பற்றிய விழிப்புணர்வை உள்ளடக்கியது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
செப்டம்பர் 30 திங்கள்கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் இத்தாலிய ஆயர் பேரவையால் வழிநடத்தப்படும் Custodi del Bello (அழகைப் பாதுகாப்பவர்கள்) என்ற திட்டத்தின் உறுப்பினர்களைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவை மற்றும் முழு சமூகத்திற்கும் ஒரு முக்கியமான செய்தியை இச்செயல்திட்டம் கொடுப்பதாகவும் எடுத்துரைத்தார்.
வாழ்க்கைக்கானத் தேர்வு மற்றும் ஒரு பாணியை, அழகைப் பாதுகாப்பவர்கள் என்ற முழக்கம் எடுத்துரைப்பதாகக் கூறிய திருத்தந்தை அவர்கள், பாதுகாத்தல், அழகு என்னும் இரண்டு கருத்துக்களைக் குறித்து அவர்களுக்கு எடுத்துரைத்தார்.
பாதுகாத்தல்
பாதுகாத்தல் என்பது காத்தல், பராமரித்தல், கண்காணித்தல், தடுத்தல், கவனித்தல் போன்றவற்றை உள்ளடக்கிய பன்முகச்செயல், தங்களிடம் ஒப்படைக்கப்பட்டவற்றைப் பராமரித்து கவனிக்கும் பொறுப்பு பற்றிய விழிப்புணர்வை உள்ளடக்கியது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், கவனச்சிதறல், சோம்பல் போன்றவற்றிற்கு இது இடம் கொடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாவலில் இருப்பவர்கள் தங்கள் கண்களை அகலத்திறந்து கண்காணிக்கவும், அதற்கான நேரத்தை செலவழிக்க பயமில்லாதவர்களாகவும், பொறுப்பேற்க தயங்காதவர்களாகவும் இருப்பர் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், ஒவ்வொருவரும் அவரவர் திறன்கள், அறிவாற்றல், மற்றும் முழு இதயத்துடன் மற்றவர்களுக்காகவும், பொதுவான இல்லத்திற்காகவும், படைப்பிற்காகவும் ஒருங்கிணைந்த கவனிப்புடன் ஏதாவது ஒன்றினைச் செய்ய முடியும் என்று கூறினார்.
படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கின்றது என்ற திருத்தூதர் பவுலின் வார்த்தைகள், உறுதியான தீர்வுகளைக் கேட்டுக் கொண்டிருக்கும் ஏழைகளின் அழுகை மற்றும் பொது நன்மை, தீவிரமான பயனுள்ள முடிவுகளை எடுக்க அழைப்புவிடுக்கின்றது என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
அழகு
இக்காலகட்டங்களில் அதிகமாகப் பேசப்படுகின்ற அழகானது மக்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சியைக் காட்டிலும் வணிக மற்றும் விளம்பர அளவுகோல்களுடன் தொடர்புடையதாக, தீங்கு விளைவிக்கக்கூடிய அணுகுமுறையாக உள்ளது என்றும், அழகு என்பது இடைக்கால மற்றும் வெகுசன அழகியல் மாதிரிகளுடன் குழப்பத்தை ஏற்படுத்துகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தீங்கு விளைவிக்கக்கூடிய அழகானது மக்களின் செழிப்பான வாழ்க்கைக்கு உதவாது, மனிதனையும் இயற்கையையும் சீரழிக்க வழிவகுக்கிறது என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், அதற்குப் பதிலாக உண்மையான படைப்பின் அழகு கொண்ட ஒவ்வொரு உயிரினத்திற்கும் தனித்துவம், புனிதத்துவம் உள்ளது என்பதை உணர்ந்து வாழ வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கடவுளால் தொடக்க முதல் படைக்கப்பட்டு, அன்பு செய்யப்பட்டு, கொண்டாடப்பட்ட அழகை பொது நன்மைக்காக வளர்க்கக் கற்றுக்கொள்வதும், கடவுள் அருளின் பிரிக்க முடியாத ஒற்றுமையின் அழகாக வளர்க்கக் கற்றுக்கொள்வதும், நம் ஒவ்வொருவரின் உறுதியான முழுமையான கடமை என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்