தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருப்பலியின்போது திருத்தந்தை பிரான்சிஸ் திருப்பலியின்போது  (AFP or licensors)

பெல்ஜியம் நாட்டு மக்களுக்கு வழங்கிய ஞாயிறு திருப்பலி மறையுரை

செப்டம்பர் 29 ஞாயிற்றுக்கிழமை பெல்ஜியம் நாட்டின் அரசர் பால்டோவின் விளையாட்டரங்கத்தில் கூடியிருந்த ஏறக்குறைய 40000 மக்களுக்கு ஞாயிறு திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றினார் திருத்தந்தை.

மெரினா ராஜ் - வத்திக்கான்

திறந்த மனம், ஒன்றிப்பு, சான்று வாழ்வு என்னும் மூன்று தலைப்புக்களில் திருத்தந்தை வழங்கிய மறையுரையின் தமிழாக்கச்சுருக்கம் இதோ.

“என்மீது நம்பிக்கைகொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது. என்ற இயேசுவின் வார்த்தைகளை எடுத்துரைக்கும் இன்றைய நற்செய்தி வாசகமானது எளியவர்களுக்கு இடையூறாக இருப்பவர்களுக்கு ஒரு  கடுமையான எச்சரிக்கையை விடுக்கின்றது.    

இன்றைய வாசகங்கள் வழியாக திறந்த மனம், ஒன்றிப்பு, சான்று வாழ்வு என்னும் மூன்று கருத்துக்கள் குறித்து உங்களுக்கு எடுத்துரைக்க விரும்புகின்றேன்.

திறந்தமனம்

முதல் வாசகமும் நற்செய்தியும் தூய ஆவியின் செயலுக்கு திறந்த மனதுடன் செயல்படுவதை எடுத்துரைக்கின்றன. தூய ஆவியார் மோசேயுடன் கூடாரத்தில் இருந்த மூப்பர்கள் மேல் மட்டுமல்லாது பாளையத்திலிருந்த இருவர் மேலும் செயல்பட்டார். அவர்களும் இறைவாக்கு உரைப்பதை பொறுக்காத மூப்பர்கள் மோசேயிடம் முறையிடுகின்றனர். ஞானமும் அறிவாற்றலும் கொண்ட மோசே இதனைப் புரிந்துகொள்கின்றார்.

ஆண்டவரின் மக்கள் அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணைச்சிறப்பு!”  என்று அவர்களுக்குப் பதிலளிக்கின்றார். இந்த ஞானமுள்ள வார்த்தைகளை இயேசு நற்செய்தியில் நமக்கு எதிராக இராதவர் நமக்கு சார்பாக இருக்கின்றார் என்று எடுத்துரைக்கின்றார்.

இந்த இரு நிகழ்வுகளையும் சிந்தித்து உற்று நோக்குவோம். திருமுழுக்கு அருளடையாளத்தினால் திருஅவையின் பணியாற்ற நாம் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளோம். இது நாம் பெற்றுள்ள கொடை. நம்பிக்கையாளர்களின் சமூகம் என்பது சிறப்பு சலுகை பெற்றவர்கள் அடங்கிய வட்டமல்ல மீட்கப்பட்டவர்களின் குடும்பம்.

கடவுளது நற்செய்தியை இவ்வுலகிற்கு கொண்டு செல்ல அழைக்கப்பட்டவர்கள் நாம், நமது சொந்த தகுதியால் அல்ல மாறாக, கடவுளின் அருள், இரக்கம் மற்றும் நம்பிக்கையால் செய்ய அழைக்கப்பட்டுள்ளோம். நம்முடைய எல்லா வரம்புகளையும் பாவங்களையும் தாண்டி, நம்மால் பார்க்க முடியாததை நம்மில் பார்த்து, தந்தையின் அன்புடன் தொடர்ந்து செயல்பட நம்மை அழைக்கிறார், அனுப்புகிறார், பொறுமையாக நாள்தோறும் நம்முடன் வருகிறார்.

எனவே திறந்த மனம் ஆர்வம், விருப்பம், போன்றவற்றுடன் திறந்த மனதுடன் பணிவு நன்றியுணர்வு மகிழ்ச்சியுடன் செயல்பட வேண்டும். இதன்வழியாக இறைத்தந்தையின் அரசை அனைவரும் ஒன்றிணைந்து வளர்த்தெடுப்போம்.   

ஒன்றிப்பு

“உங்கள் செல்வம் மக்கிப் போயிற்று. உங்கள் ஆடைகள் பூச்சிகளினால் அழிக்கப்பட்டுவிட்டன. உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்துவிட்டன. அந்தத் துருவே உங்களுக்கு எதிர்ச் சான்றாக இருக்கும்; அது நெருப்புப்போல உங்கள் சதையை அழித்துவிடும்”.  என்று திருத்தூதர் யாக்கோபு எடுத்துரைக்கும் வார்த்தைகள் அன்பு ஒன்றே வாழ்வின் வழி என்பதை சுட்டிக்காட்டுகின்றன.

தன்னலத்தின் வழிகள் சுவர்கள், தடைகள், அவதூறுகளால் நிறைந்திருக்கும். நம்மைக் கடவுளிடமிருந்தும் உடன் சகோதர சகோதரிகளிடமிருந்தும் விலக்கி வைக்கும். அறுவடையாளர்கள் பாதுகாப்பு, ஏழைகளின் அழுகை என்று கடவுள் தெளிவாக எடுத்துரைப்பவற்றை ஒருபோதும் புறக்கணிக்க முடியாது.

தூய ஆவியின் வாழும் குரலுக்கு செவிசாய்ப்பவர்களாக நாம்  அனைவரும் பாவிகள் ஏழைகள் என்பதை உணர்ந்து வாழ வேண்டும். நமது தூய வாழ்விற்கு இடையூராக இருப்பவற்றை விட்டு விலகி அன்பில்லாமல் செய்யப்படும் எல்லாம் வீண் என்பதை உணர்ந்து இறைஇரக்கத்தின் நற்செய்தியை எடுத்துரைப்பவர்களாக ஒன்றித்து வாழ்வோம். துன்புறும் மக்களுக்கு அவர்களின் முகத்தை  கண்களைப்பார்த்து உதவுவோம். பாதிக்கப்பட்டவர்களிடத்தில் இரக்கத்துடன் நடந்து கொள்வோம்.   

சான்றுவாழ்வு

புதிய அருளாளரான இயேசுவின் அன்னா வாழ்க்கை வரலாறானது தூய ஆவியின் இயக்கத்திற்கு தன்னைக் கையளித்து  தனது காலத்தில் திருஅவையின் வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்திய  ஒரு பெண்ணாக தூய அவிலா தெரசாவின் வழியைப் பின்பற்றி வாழ்ந்துள்ளார்.

கிறிஸ்தவ சமூகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஏற்பட்ட பல்வேறு துன்பங்களை தனது உடன் நண்பர்களுடன் ஏற்று செபம், பணி. பிறரன்புச்செயல்கள் போன்றவற்றின் வழியாக் பல்வேறு ஏழை எளிய மக்களுக்கு உதவி சான்று வாழ்வு வாழ்ந்தார். அவரது மாதிரிகையைப் பின்பற்றி வாழ முயல்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 September 2024, 15:33