தன் 45வது வெளிநாட்டுத் திருப்பயணத்தைத் துவக்கினார் திருத்தந்தை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி வத்திக்கானிலிருந்து ஆசியா மற்றும் ஒசியானியாவின் 4 நாடுகளுக்கான பயணத்தைத் துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏறக்குறைய 13 மணி நேர விமான பயணத்திற்குப்பின் செவ்வாய்க்கிழமையன்று முற்பகலில் இந்தோனேசியா சென்றடைந்தார்.
இந்தோனேசியாவில் திருத்தந்தை பிரான்சிஸ்
இந்தோனேசியா, பாப்புவா நியு கினி, கிழக்கு திமோர், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு என 11 நாட்கள் திருப்பயணத்தையொட்டி முதல் நாடாக இந்தோனாசியாவில் உள்ளூர் நேரம் காலை 11 மணி 19 நிமிடங்களுக்கு தலைநகர் ஜகார்த்தாவில் வந்திறங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, முதலில் இந்தோனேசியாவிற்கான திருப்பீடத்தூதுவர் பேராயர் பியெரோ பியொப்போ அவர்கள் விமானத்திற்குள் வந்து சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். விமானத்திலிருந்து கீழே வந்த திருத்தந்தையை மத விவகாரங்களுக்கான இந்தோனேசிய அமைச்சர் முதலில் வரவேற்க, பாரம்பரிய உடையணிந்த இரு குழந்தைகள் திருத்தந்தையை வரவேற்கும் விதமாக பூங்கொத்துக்களை வழங்கினர். விமான நிலையத்தில் இதுதவிர வேறு எந்த வரவேற்பு நிகழ்ச்சிகளும், உரையும் இடம்பெறவில்லை. இந்த வரவேற்பு நிகழ்ச்சி அரசுத்தலைவர் மாளிகைக்கு முன்வளாகத்தில் செப்டம்பர் 4ஆம் தேதி காலையில் முதல் நிகழ்ச்சியாக இடம்பெறும் என ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்ததால், விமான நிலையத்திலிருந்து உடனேயே திருப்பீடத் தூதரகத்திற்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். 13 மணி நேரம் பயணம் செய்து ஜகார்த்தா வந்திறங்கிய திருத்தந்தைக்கு ஓய்வு கொடுக்கும் வண்ணம் செப்டம்பர் 3ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலையில் எவ்வித பொது நிகழ்ச்சித் திட்டங்களும் திட்டமிடப்படவில்லை. தன் 45வது திருப்பயணத்தின் முதல் நாளான செப்டம்பர் 3ஆம் தேதியன்று, விமான நிலையத்திலிருந்து 27 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இந்தோனேசியாவிற்கான திருப்பீடத்தூதரகத்திற்கு ஊர்தியில் பயணம் மேற்கொண்டார். தலைநகர் ஜகார்த்தாவின் மையத்தில் இருக்கும் இந்த திருப்பீடத்தூதரகம் 1966ஆம் ஆண்டு அப்போதைய அரசுத்தலைவர் சுகார்னோ அவர்களின் முன்னிலையில் திறந்துவைக்கப்பட்டது. திருப்பீடத்தூதரகத்தை அரை மணி நேர பயணத்திற்குப்பின் வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அங்கேயே மதிய உணவருந்தி சிறிது ஓய்வும் எடுத்துக்கொண்டார்.
இந்நாள் பிற்பகலில் தனியாக திருப்பலி நிறைவேற்றுவது தவிர, எவ்வித நிகழ்ச்சிகளோ, சந்திப்புக்களோ பயணத்திட்டத்தில் இல்லை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்