தேடுதல்

ஜகார்த்தாவிலிருந்து விடைபெறும் முன்னர் விமான நிலையத்தில் மக்களைச் சந்தித்த திருத்தந்தை ஜகார்த்தாவிலிருந்து விடைபெறும் முன்னர் விமான நிலையத்தில் மக்களைச் சந்தித்த திருத்தந்தை 

இந்தோனேசியாவிலிருந்து திருத்தந்தை விடைபெறுதல்

இந்தோனேசியாவின் தேசிய கருடா விமானத்தில் நாலாயிரத்து அறுநூற்று தொண்ணூற்று மூன்று கிலோமீட்டர்களை 6 மணி 5 நிமிடங்களில் கடந்து பாப்புவா நியூ கினியை சென்றடைந்தார் திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

விசுவாசிகளை சந்தித்து ஊக்கமளிக்கவும், மதங்களிடையே அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்கவும், இயற்கை மீதான அக்கறையை வெளிப்படுத்துவதை ஊக்கமளிக்கவும் இந்தோனேசிய திருப்பயணத்தை மேற்கொண்ட திருத்தந்தை, இந்தோனேசியா நாட்டின் முதல் நிகழ்வாக திருப்பீடத்தூதரகத்தில் செவ்வாய்க்கிழமையன்றே குடிபெயர்ந்த மக்களையும் அகதிகளையும் சந்தித்துள்ளது அவரின் பாப்பிறைப் பணியின் நோக்கத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது. மியான்மாரைச் சேர்ந்த ரொஹிங்கியா இனத்தவரையும் ஜகார்த்தாவில் அவர் சந்தித்தார். 

செப்டம்பர் 5ஆம் தேதி, அதாவது புனித அன்னை தெரேசாவின் விழாவாகிய வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஜகார்த்தாவின் Istiqlal மசூதியை வந்தடைந்து இஸ்லாமியத் தலைமைக்குரு, முனைவர் நசாருதின் உமர் அவர்களுடன் இணைந்து Istiqlal 2024 என்ற கூட்டறிக்கையில் கையெழுத்திட்டார். இந்த கூட்டறிக்கை, வன்முறை மற்றும் பாராமுகம் என்னும் கலாச்சாரத்தை எதிர்த்து போராடுவதையும், ஒப்புரவு மற்றும் அமைதியை ஊக்குவிப்பதையும் வலியுறுத்துவதாக இருந்தது.

திருத்தந்தையின் வியாழன் தின அடுத்த நிகழ்வு இந்தோனேசிய ஆயர் பேரவையின் தலைமை இல்லத்தில் பிறரன்பு உதவி நடவடிக்கைகளுடன் தொடர்புடையோரைச் சந்திப்பதாக இருந்தது. இங்கு ஏழைகள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் என ஆயர் பேரவையிலிருந்து பிறரன்பு உதவிகளைப் பெறும் பலர் குழுமியிருந்து, தங்கள் வாழ்க்கை அனுபவங்களை  அனைவருடனும் பகிர்ந்து கொண்டனர். இந்த சந்திப்பைத் தொடர்ந்து அன்று மாலை Gelora Bung Karno கால்பந்து விளையாட்டரங்கில் இந்தோனேசிய விசுவாசிகளுக்கு திருப்பலி நிறைவேற்றினார் திருத்தந்தை.

செப்டம்பர் 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை ஜகார்த்தா திருப்பீடத் தூதரகத்தில் உள்ளூர் நேரம் 7 மணியளவில் அங்குள்ள சிறு கோவிலில் தனியாக திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை, திருப்பீடத்தூதரகப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றியை வெளியிட்டு அவர்களிடமிருந்து விடைபெற்றார். அங்கிருந்து 28.6 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஜகார்த்தாவின் Soekarno-Hatta பன்னாட்டு விமான நிலையம் வந்தடைந்த திருத்தந்தையை இந்தோனேசியாவின் மதவிவகார அமைச்சர் சந்தித்து அவரை வழியனுப்பி வைத்தார்.

இந்தோனேசியாவின் தேசிய கருடா விமானத்தில் நாலாயிரத்து அறுநூற்று தொண்ணூற்று மூன்று கிலோமீட்டர்களை 6 மணி 5 நிமிடங்களில் கடந்து பாப்புவா நியூ கினி நேரம் 6.50 மணியளவில் அந்நாட்டைச் சென்றடைந்தார் திருத்தந்தை. இந்தோனேசியாவுக்கும் பாப்புவா நியூ கினிக்கும் இடையேயான நேர வித்தியாசம் 3 மணி நேரமாகும். அதாவது, இந்தியாவுக்கும் பாப்புவா நியு கினி நாட்டிற்கும் இடையேயான நேர இடைவெளி 4 மணி 30 நிமிடங்களாகும். அங்கு துணை பிரதமர் திருத்தந்தையை வரவேற்க விமான நிலையம் வந்திருந்தார். இரு குழந்தைகள் பாரம்பரிய உடையணிந்து திருத்தந்தைக்கு மலர்க்கொத்துக்களை வழங்கி வரவேற்றனர். அங்கு இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் இடம்பெற்று இரு நாட்டு தேசியப் பண்களும் இசைக்கப்பட்டபின், திருத்தந்தை Port Moresby விமான நிலையத்திலிருந்து 7.9 கிலோமீட்டர் தூரத்திலுள்ள பாப்புவா நியூ கினி திருப்பீடத்தூதரகம் வந்தடைந்தார். திருத்தந்தை Port Moresby திருப்பீடத்தூதரகம் வந்தடைந்தபோதே உள்ளூர் நேரம் மாலை 7.30க்கு மேலே இருந்தது, அதாவது இந்திய நேரம் மாலை 5 மணிக்கு மேல் இருந்தது. ஆகவே திருத்தந்தைக்கென அந்நாளில் பயணத்திட்டங்கள் எதுவும் வகுக்கப்பட்டிருக்கவில்லை.

பாப்புவா நியூ கினி என அழைக்கப்படும் நாடு, பசுபிக் பெருங்கடலில் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. போர்ட் மோரஸ்பியை தலைநகராகக் கொண்ட இது, உலகிலுள்ள மிகவும் பன்முகத்தன்மையுடைய நாடுகளுள் ஒன்றாகும். 82 இலட்சத்து 41 ஆயிரம் மக்கள் உடைய இந்நாட்டில் 850க்கும் மேற்பட்ட ஆதிக்குடிவாசிகளின் மொழிகளும், குறைந்தது அதே எண்ணிக்கையுடைய பழங்குடிக் குழுக்களும் உள்ளன. மக்கள் தொகையில் 30.6 விழுக்காட்டினர் கத்தோலிக்கர், அதாவது 25 இலட்சத்து 22 ஆயிரம் பேர். இங்கு 19 மறைமாவட்டங்களைக்கொண்டு தலத்திருஅவை பல பிறரன்பு மையங்களையும் 3559 கல்வி நிலையங்களையும் கொண்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 September 2024, 16:20