தேடுதல்

இளையோர் மையத்தில் குழந்தை ஒன்றுடன் விளையாட முயலும் திருத்தந்தை இளையோர் மையத்தில் குழந்தை ஒன்றுடன் விளையாட முயலும் திருத்தந்தை  (ANSA)

அகதிகள் மற்றும் குடிபெயர்ந்தோருடன் திருத்தந்தையின் சந்திப்பு

விசுவாசிகளை சந்தித்து ஊக்கமளிக்கவும், மதங்களிடையே அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்கவும், இந்தோனேசிய திருப்பயணத்தை மேற்கொண்டிருக்கும் திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அன்பு நெஞ்சங்களே, செப்டம்பர் 2ஆம் தேதி, திங்கள்கிழமை மாலை புறப்பட்டு மறுநாள் செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரம் காலை 11.20 மணியளவில் இந்தோனேசியாவை வந்தடைந்த திருத்தந்தையை, முதலில் இந்தோனேசியாவின் மத விவகார அமைச்சர் விமான நிலையம் வந்தடைந்து வரவேற்றபின், திருப்பீடம் சென்றடைந்த திருத்தந்தைக்கு எதிர்பாராத ஒரு சந்திப்பு காத்திருந்தது. அதாவது, இந்தோனேசியாவில் ஏழ்மை காரணமாக குடிபுகுந்தவர்கள் மற்றும் அகதிகள் திருத்தந்தையைக் காண காத்திருந்தனர். திருத்தந்தையின் பயணத்திட்டத்தில் குறிக்கப்படாத ஒன்று இது. 13 மணி நேர பயணத்தின் களைப்பு இருந்தபோதிலும், அந்த நலிவடைந்த மக்களை சந்தித்து அவர்களோடு உரையாடி, அவர்கள் தனித்தனியாகச் சொல்வதைக் கேட்டு அவர்களுக்கு ஆறுதலை வெளிப்படுத்தினார் திருத்தந்தை.  விசுவாசிகளை சந்தித்து ஊக்கமளிக்கவும், மதங்களிடையே அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்கவும், இயற்கை மீதான அக்கறையை வெளிப்படுத்துவதை ஊக்கமளிக்கவும் இந்தோனேசிய திருப்பயணத்தை மேற்கொண்டிருக்கும் திருத்தந்தை முதலில் குடிபெயர்ந்த மக்களையும் அகதிகளையும் சந்தித்துள்ளது அவரின் பாப்பிறைப் பணியின் நோக்கத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. ஏனெனில், தான் திருத்தந்தையாக பொறுப்பேற்ற நாளிலிருந்தே, எளிய மக்களுக்காகவும் இறைவனின் படைப்பு பாதுகாக்கப்படவேண்டும் எனவும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார். அவரின் கடந்த 11 ஆண்டு பணிகளை உற்று நோக்குபவர்களுக்கு தெரியும், ஏழைகளுக்காகப் பரிந்துரைத்தல், இயற்கையை காக்க குரல் கொடுத்தல், பேரக்குழந்தைகள் மற்றும் தாத்தாபாட்டிகளிடையே உறவை ஊக்கமூட்டல், சிறைக்கைதிகளின்  திருந்திய வாழ்வுக்கு ஆதரவளித்தல், மத நல்லிணக்கத்தை வளர்த்தல், உலக அமைதிக்காக ஓயாது உழைத்தல் என்பதே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பணி வாழ்வு நோக்கங்களுள் முன்னணியில் நிற்கின்றன. இத்தகைய ஒரு மனநிலையைக் கொண்ட திருத்தந்தை, இந்தோனேசிய திருப்பயணத்தின்போது, அவரின் பயணத்திட்டத்தில் இடம்பெறாதிருந்தபோதும், ஆதரவின்றி கைவிடப்பட்ட சிறார், குடிபெயர்ந்தோர் மற்றும் அகதிகளை திருப்பீடத் தூதரகத்திலேயே சந்தித்தது ஆச்சரியமான ஒன்றல்ல. அண்மை நாடுகளிலிருந்து அடைக்கலம் கேட்டு குடியேறிய மக்கள் நிறைய பேர் திருத்தந்தையை சந்திக்க வந்திருந்தவேளையில், மியான்மாரைச் சேர்ந்த ரொஹிங்கியா இனத்தவரும் அங்கு கூடியிருந்தனர். தொடர்ந்து தங்கள் சார்பாக குரல் எழுப்பிவரும் திருத்தந்தைக்கு, அவர்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பிவரும் திருத்தந்தைக்கு, தங்கள் மனித மாண்பை உயர்த்திப் பிடிக்கும் திருத்தந்தைக்கு தங்கள் நன்றியை வெளியிடுவதற்கு ரொஹிங்கியா மக்கள் கூடியிருந்து அதனை தெரிவித்தனர். இச்சந்திப்புக்குப் பின்னர் ஜகார்த்தாவின் திருப்பீடத் தூதரகத்திலேயே மதிய உணவருந்தி ஓய்வும் எடுத்துக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 September 2024, 14:54