தேடுதல்

நட்பின் சுரங்கப் பாதையாகத் திகழ்ந்திடுங்கள்!

'மனிதகுலத்திற்காக மத நல்லிணக்கத்தை வளர்ப்பது' என்பது நாம் பின்பற்ற வேண்டிய பாதையாகும். இந்தத் தருணத்திற்காகத் தயாரிக்கப்பட்ட கூட்டு அறிவிப்பின் தலைப்பும் இதுவாகும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

செப்டம்பர் 05, வியாழக்கிழமை இன்று, இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள, இஸ்திக்லால் மசூதியில் நிகழ்ந்த அனைத்து மதக்கூட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய அருளுரை.

அன்புமிக்க சகோதரர் சகோதரிகளே,  ஆசியாவிலேயே மிகப் பெரிய மசூதியில் உங்கள் அனைவரோடும் இனணந்திருப்பதில் நான் மகிழ்வடைகின்றேன். தொழுகை மற்றும் இறைவேண்டலுக்கான இவ்விடம் மனிதகுலத்திற்கான பெரியதொரு இல்லம் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது,

மேலும், இந்த மசூதியின் வடிவமைப்பு போட்டியில் வெற்றி பெற்ற கிறிஸ்தவரான ஃபிரெட்ரிக் சிலபன் என்பவரால் இது வடிவமைக்கப்பட்டது என்பதை உங்களுக்கு நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்த நாட்டின் வரலாறு முழுவதிலும், அதன் கலாச்சாரத்தின் கட்டமைப்பிலும், மசூதிகளும் மற்ற வழிபாட்டுத் தலங்களைப் போலவே, மதங்கள் மற்றும் பல்வேறு ஆன்மிக உணர்வுகளுக்கு இடையே உரையாடல், ஒருவருக்கொருவர்மீதான மரியாதை மற்றும் இணக்கமான சகவாழ்வுக்கான இடங்கள் என்பதற்குச் சான்றளிக்கின்றன.

இது நீங்கள் ஒவ்வொரு நாளும் வளர்க்க அழைக்கப்படும் உங்களுக்கான சிறந்ததொரு பரிசு. ஆகவே, மத அனுபவங்கள் ஓர் உடன்பிறந்த மற்றும் அமைதியான சமூகத்திற்கான குறிப்புப் புள்ளிகளாக (reference points) இருக்கலாமே தவிர, மோதலுக்கு ஒருபோதும் காரணமாக இருந்துவிடக் கூடாது.

நட்பின் சுரங்கபாதை

இது சம்பந்தமாக பார்க்கும்போது, இஸ்திக்லால் மசூதி மற்றும் விண்ணேற்பு அன்னைப் பேராலயத்தை இணைக்கும் நிலத்தடி சுரங்கப்பாதை, நட்பின் சுரங்கப்பாதையாக அமைந்துள்ளது என்பதை நான் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். இந்த இருபெரும் வழிபாட்டுத் தலங்களும் ஒன்றுக்கொன்று முன்னால் இருப்பது மட்டுமல்லாமல், ஒன்றோடொன்று இணைக்கப்படவும் அனுமதிக்கும்  சுரங்கப்பாதை ஒரு தேனொழுகத்தக்க அறிகுறியாக அமைந்துள்ளது. உண்மையில், இந்தப் பாதையானது சந்திப்பதற்கும், உரையாடலுக்கும், உண்மையான சாத்தியக்கூறுகளை அனுமதிக்கிறது.

இந்தப் பாதையில் தொடர்ந்து பயணிக்குமாறு உங்களை நான் ஊக்குவிக்கிறேன். இதன் வழியாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து, ஒவ்வொருவரும் அவரவர் ஆன்மிகத்தை வளர்த்து, அவரவர் மதத்தைப் பின்பற்றி, கடவுளைத் தேடி நடக்கவும், ஒருவருக்கொருவர்மீதான மரியாதை மற்றும் அன்பின் அடிப்படையில் திறந்த சமூகங்களை உருவாக்கவும் நமது பங்களிப்பை வழங்கிட வேண்டும்.

இது ஏதோ கடமைக்காக நிறைவேற்றப்படவேண்டிய ஒரு காரியம் மட்டும் அல்ல, மாறாக, பல்வேறு மதத் தலைவர்களால் ஊக்குவிக்கப்பட்ட நாட்டிலுள்ள குடிமை மற்றும் அரசியல் தலைவர்களால் ஆதரிக்கப்பட்டு, சில காலத்திற்கு முன்பு நீங்கள் தொடங்கிய நட்புக்கான பொதுவான பாதையைப் பற்றியது. இந்தோனேசிய மக்களாகிய உங்களின் தாராள மற்றும் திறந்த மனப்பான்மையால் இது சாத்தியமாயிருக்கிறது.

நான் தொடக்கத்தில் கூறிய நட்பின் சுரங்கப்பாதையின் அடையாளமாக சொல்லப்பட்ட அனைத்தையும் மனதில் கொண்டு, நீங்கள் ஏற்கனவே தொடங்கிய ஒன்றிப்பு மற்றும் நல்லிணக்கத்தின் பாதையில் உங்களை ஊக்குவிக்க இரண்டு பரிந்துரைகளை உங்களுக்கு வழங்கிட விரும்புகிறேன்.

ஆழமாக உற்றுநோக்குங்கள்

முதலாவது, எப்போதும் ஆழமாக உற்றுநோக்க வேண்டும், ஏனென்றால் இந்த வழியில் மட்டுமே நமக்குள் வேறுபாடுகள் இருக்கும் போதிலும் ஒன்றிணைவதைக் கண்டறிய முடியும். உண்மையில், மசூதி மற்றும் பேராலயம் இரண்டின் மேற்பரப்பிலும் அந்தந்த நம்பிக்கையாளர்களால்  நன்கு வரையறுக்கப்பட்ட மற்றும் அடிக்கடி செல்லும் இடங்கள் உள்ளன. ஆனால் சுரங்கப்பாதைத் தளத்தின் கீழே, அதே மக்கள் அவரவர் மதக் கண்ணோட்டங்களுடன் ஒருவரையொருவர் எதிர்கொள்ளலாம் மற்றும் சந்திக்கலாம்.

மேலும் மதங்களில் காணக்கூடிய சிறப்பு அம்சங்களான வழிபாடுகள், நடைமுறைகள் போன்றவை பாதுகாக்கப்பட வேண்டிய மற்றும் மதிக்கப்பட வேண்டிய ஒரு பாரம்பரியம் என்பதை இந்த உறவின் சுரங்கப்பாதை படம் நமக்கு நினைவூட்டுகிறது.

இங்கே, நம்மையே நாம் ஆழமாக உற்றுநோக்குவதன் வழியாக, நம் இதயத்தின் ஆழத்தில் குடிகொண்டிருக்கும் முழுமைக்கான ஆசையின் வழியாக, கடவுளை நோக்கிய பாதையில், நாம் அனைவரும் சகோதரர் சகோதரிகள், திருப்பயணிகள் என்பதை நினைவில் கொள்வோம்.

பிணைப்புகளைப் பாதுகாத்திடுங்கள்

உங்களுக்கிடையில் உள்ள பிணைப்புகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதை எனது இரண்டாவது பரிந்துரையாக முன்வைக்கின்றேன். இரண்டு வெவ்வேறு மற்றும் தொலைதூர இடங்களுக்கு இடையே ஓர்  இணைப்பை உருவாக்குவதற்காக இந்தச் சுரங்கப்பாதை கட்டப்பட்டது.

இத்தகையதொரு பணியைத்தான் இந்தச் சுரங்கபாதைச் செய்கிறது. அதாவது, இது இணைப்பையும் பிணைப்பையும் உருவாக்குகிறது. சில வேளைகளில், மதங்களுக்கு இடையேயான சந்திப்பு என்பது பல்வேறு மதக் கோட்பாடுகள் மற்றும் நம்பிக்கைகளுக்கு இடையே பொதுவான நிலையைத் தேடுவது என்று நாம் நினைக்கிறோம். எவ்வாறாயினும், அத்தகைய அணுகுமுறை நம்மைப் பிரிக்கலாம், ஏனென்றால் ஒவ்வொரு மத அனுபவத்தின் கொள்கைகளும் கோட்பாடுகளும் வேறுபட்டவை.

ஆக, பன்முகத்தன்மைக்கு மத்தியில் ஒரு தொடர்பை உருவாக்குவதும், நட்பு, அக்கறை மற்றும் ஒருவருக்கொருவர்மீதான உறவுகளை வளர்ப்பதும்தான் உண்மையில் நம்மை நெருக்கமாக்குகிறது. இத்தகைய உறவுகள் நம்மை மற்றவர்களுடன் இணைக்கின்றன. மேலும் நாம் ஒன்றிணைந்து உண்மையைத் தேடுவதற்கும், மற்றவர்களின் மத பாரம்பரியத்திலிருந்து கற்றுக்கொள்வதற்கும், நமது மனித மற்றும் ஆன்மிகத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள ஒன்றுபடுவதற்கும் நம்மை அனுமதிக்கின்றன.

மனித மாண்பை பாதுகாத்தல், வறுமைக்கு எதிராகப் போராடுதல், அமைதியை மேம்படுத்துதல் ஆகிய அதே குறிக்கோள்களைப் பின்தொடர்வதில் நாம் ஒன்றாக முன்னோக்கிச் செல்லவும், ஒன்றிணைந்து செயல்படவும் அனுமதிக்கும் பிணைப்புகள் அவை.  மேலும் ஒன்றிப்பு என்பது தனிப்பட்ட நட்பின் பிணைப்புகள் மற்றும் ஒருவருக்கொருவர்மீதான மரியாதை மற்றும் மற்றவர்களின் கருத்துக்கள் மற்றும் அவர்களின் புனித இடங்களின் பாதுகாப்பிலிருந்து பிறக்கிறது. நீங்கள் இதை எப்போதும் போற்றிப் பேணிக் காத்திடுங்கள்.

அன்பான சகோதரர் சகோதரிகளே, 'மனிதகுலத்திற்காக மத நல்லிணக்கத்தை வளர்ப்பது' என்பது நாம் பின்பற்ற வேண்டிய பாதையாகும். இந்தத் தருணத்திற்காகத் தயாரிக்கப்பட்ட கூட்டு அறிவிப்பின் தலைப்பும் இதுவாகும்.

நீங்கள் பயணிக்கும் இந்தப் பொதுவான உறவின் பாதைக்கு எனது நன்றி. கலாச்சாரங்கள், இனங்கள் மற்றும் மத மரபுகளின் வளமான ஒரு பன்முகத்தன்மையைக் கொண்டுள்ள இந்தோனேசியா ஒரு சிறந்த நாடு. இது பல்வேறுச் சுற்றுச்சூழல் அமைப்பிலும் பிரதிபலிக்கிறது.

நீங்கள் உலகின் மிகப் பெரிய தங்கச் சுரங்கத்திற்குத் தாயகம் என்பது உண்மையாக இருக்க வேண்டுமெனில், மோதலுக்குக் காரணமாக இருப்பதற்குப் பதிலாக, ஒன்றிப்பு மற்றும் ஒருவருக்கொருவர்மீதான மரியாதை வழியாக வேறுபாடுகளை ஒத்திசைக்க முடியும் என்ற உறுதியே மிகவும் விலைமதிப்பற்ற புதையல் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இந்தவொரு மேன்மையான புதையலை இழந்துவிடாதீர்கள். அதேவேளையில், இந்த அரியதொரு புதையலால் உங்களையே நீங்கள் நலிவூட்டிக்கொள்ளாதீர்கள். மாறாக, அதனை வளர்த்து, குறிப்பாக இளைஞர்களுக்குக் கொடுங்கள். மத அடிப்படைவாதம் மற்றும் வன்முறையின் மாயக்கவர்ச்சிக்கு யாரும் அடிபணித்துவிடாதீர்கள். ஒவ்வொருவரும் சுதந்திரமான, உடன்பிறந்த மற்றும் அமைதியான சமுதாயம் மற்றும் மனித நேயத்தின் கனவால் திகைக்கட்டும்!

இறைவன் உங்களை அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 September 2024, 15:00