மத உரையாடல் ஒருவருக்கொருவர்மீதான மரியாதையை வளர்க்கிறது!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
செப்டம்பர் 4, புதன்கிழமை இன்று இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள, இஸ்தானா நெகாரா அரசுத்தலைவரின் மாளிகையில் அந்நாட்டின் அரசு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், பொதுநிலை அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய உரை.
அன்புநிறைந்த சகோதரர் சகோதரிகளே! உங்கள் தேசிய பொன்மொழியான வேற்றுமையில் ஒற்றுமை என்பது பல்வேறுவகைப்பட்ட மக்கள் ஒரே நாட்டில் உறுதியாக ஒன்றுபட்டிருக்கும் இந்தப் பன்முக எதார்த்தத்தை நன்றாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.
ஒற்றுமையை வளர்க்கும் உடன் பிறந்த உறவு
குறிப்பிட்ட முன்னோக்குகள் அனைவருக்கும் பொதுவான தேவைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளும்போதும், ஒவ்வொரு இனக்குழுவினரும் மதப் பிரிவினரும் உடன்பிறந்த உணர்வோடு செயல்படும்போதும், அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்ற உன்னத இலக்கைத் தொடரும்போதும், வேற்றுமையில் நல்லிணக்கம் என்பது சாத்தியமாக்கப்படுகிறது.
ஒன்றிப்பு மற்றும் அனைவரின் பங்களிப்பை உள்ளடக்கிய பகிரப்பட்ட வரலாற்றில் பங்கேற்பது பற்றிய விழிப்புணர்வு என்பது, சரியான தீர்வுகளை அடையாளம் காணவும், முரண்பாடுகளின் எரிச்சலைத் தவிர்க்கவும் மற்றும் எதிர்ப்பை பயனுள்ள ஒத்துழைப்பாக மாற்றவும் உதவுகிறது.
பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் கருத்தியல் பார்வைகள் மற்றும் ஒன்றிப்பை உறுதிப்படுத்தும் இலட்சியங்களுக்கு இடையிலான இந்த அறிவார்ந்த மற்றும் நுட்பமான சமநிலையானது, சமநிலையின்மைக்கு எதிராகத் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும்.
இது அனைவருக்கும் ஒப்படைக்கப்பட்ட பணிதான் என்றாலும், அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் ஒரு சிறப்பு வழியில், சமூகம் மற்றும் பிற மக்கள் மற்றும் நாடுகளுடன் நல்லிணக்கம், சமத்துவம், மனிதர்களின் அடிப்படை உரிமைகளுக்கான மரியாதை, நிலையான வளர்ச்சி, ஒன்றிப்பு மற்றும் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதில் தங்களை முழுமையாக அர்பணித்துக்கொள்ள வேண்டும்.
மத உரையாடலை விரும்பும் திருப்பீடம்
அமைதியான மற்றும் நற்பயனளிக்கும் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும், நாட்டின் சில பகுதிகளில் இன்னும் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் துயரங்களை அகற்றுவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கும், கத்தோலிக்கத் திருஅவை மதங்களுக்கிடையேயான உரையாடலை அதிகரிக்க விரும்புகிறது.
இந்த வழியில், முற்சார்பு எண்ணங்கள் அகற்றப்பட்டு, ஒருவருக்கொருவர்மீதான மரியாதை மற்றும் நம்பிக்கையின் சூழல் வளர முடியும். மேலும் மதத்தை சிதைப்பதன் வழியாக ஏமாற்றுதல் மற்றும் வன்முறையைப் பயன்படுத்தி தங்கள் கருத்துக்களை திணிக்க முயற்சிக்கும் தீவிரவாதம் மற்றும் சகிப்புதன்மையின்மையை எதிர்கொள்வது உட்பட பொதுவான சவால்களைச் சந்திப்பதற்கு இது மிகவும் இன்றியமையாதது.
கத்தோலிக்கத் திருஅவை என்பது, பொது நலனுக்கான சேவையில் உள்ளது மற்றும் பொது நிறுவனங்கள் மற்றும் குடிமைச் சமூகத்தில் உள்ள பிற பணியாளர்களுடன் ஒன்றிப்பை வலுப்படுத்த விரும்புகிறது, மிகவும் சமநிலையான சமூக கட்டமைப்பை உருவாக்குவதை ஊக்குவிக்கிறது மற்றும் சமூக உதவியின் திறமையான மற்றும் சமமான பகிர்ந்தளிப்பை உறுதி செய்கிறது.
வேற்றுமையில் ஒற்றுமை, சமூக நீதி மற்றும் இறையாசீர்
வேற்றுமையில் ஒற்றுமை, சமூக நீதி மற்றும் இறையாசீர் மூன்றும் சமூக ஒழுங்கை ஊக்குவிக்கும் மற்றும் வழிநடத்தும் அடிப்படைக் கொள்கைகளாகும். இவைகளை வீட்டைக் கட்டுவதற்கான திடமான அடித்தளமாக அமையும் ஓர் ஆதரவு அமைப்புடன் ஒப்பிடலாம். இந்தோனேசியாவுக்கான எனது திருப்பயணத்திதின் விருதுவாக்கான நம்பிக்கை, உடன்பிறந்த உறவு, பரிவிரக்கம் ஆகியவற்றுடன் இந்தக் கொள்கைகள் நன்றாகப் பொருந்துகின்றன என்பதை நாம் எவ்வாறு கவனிக்கத் தவறலாம்?
இருப்பினும், எதிர்பாராதவிதமாக, இன்றைய உலகில் உலகளாவிய உடன்பிறந்த உறவின் வளர்ச்சியைத் தடுக்கும் சில போக்குகளை நாம் காண்கிறோம். பல்வேறு பகுதிகளில் வன்முறை மோதல்கள் தோன்றுவதை நாம் பார்க்கின்றோம். அவை பெரும்பாலும் ஒருவருக்கொருவர்மீதான மரியாதையின்மை உள்ளிட்ட சகிப்புத்தன்மையின் விளைவால் ஏற்படுபவை. இது போர் மற்றும் இரத்தம் சிந்துதல் வழியாக முழு சமூகமும் எல்லையற்ற துயரத்தைப் பெற வழிவகுக்கிறது.
சில வேளைகளில், வன்முறை பதட்டங்கள் நாடுகளுக்குள் எழுகின்றன, ஏனென்றால் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் எல்லாவற்றையும் ஒரே மாதிரியாக மாற்ற விரும்புகிறார்கள். தனிப்பட்டவர்கள் அல்லது தொடர்புடைய குழுக்களின் சுயாட்சிக்கு விடப்பட வேண்டிய விடயங்களில் கூட தங்கள் பார்வையைத் திணிக்கிறார்கள்.
அமைதி என்பது நீதியின் பணி
ஒவ்வொருவரும் தங்கள் அன்றாட வாழ்வில், இந்தக் கொள்கைகளிலிருந்து உத்வேகம் பெற்று, அவரவர் கடமைகளைச் செய்யும்போது அவற்றைச் செயல்படுத்த முடியும் என்பது எனது நம்பிக்கை, ஏனெனில் அமைதி என்பது நீதியின் பணியாகும்.
நமது சொந்த நலன்கள் மற்றும் நோக்கத்திற்கு மட்டும் அல்லாமல், அனைவரின் நலனுக்காகவும், உறவு பாலங்களைக் கட்டுவது, உடன்படிக்கைகள் மற்றும் ஒருங்கிணைப்புகளை வளர்ப்பது, அனைத்து வகையான தார்மீக, பொருளாதார மற்றும் சமூக துயரங்களையும் தோற்கடிப்பதற்காக ஒன்றிணைந்து, ஊக்குவிப்பதில் நல்லிணக்கமும் அமைதியும் அடையப்படுகிறது.
கடவுள் உங்கள் நாட்டையும் உங்களையும் ஆசீர்வதிப்பாராக!
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்