நாம் வாழும் இடங்களில் மறைப்பணியாளர்களாகச் செயல்படமுடியும்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
Holy Trinity பள்ளியானது 1964ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது மனிதாபிமானத்தை பெரிதும் வலியுறுத்தும் கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இங்குள்ள துவக்கப் பள்ளியில் 400 மாணவர்களும், இடைநிலைப் பள்ளியில் 100 மாணவர்களும் பயில்கின்றனர். இங்கு மறைப்பணியாளர்களை தனியாகச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு கிறிஸ்துவின் அன்பின் நற்செய்தியை பரப்பிட உதவுமாறுக் கேட்டுக்கொண்டார். தினசரி வாழ்வில் நற்செய்தியின் உண்மைக்கு சான்று பகருமாறு அனைவரையும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, நாம் வாழும் இடங்களில் மறைப்பணியாளர்களாகச் செயல்படமுடியும் என்றார்.
நேரமின்மை காரணமாக ஏறக்குறைய அரை மணி நேரமே இடம்பெற்ற இச்சந்திப்பிற்குப்பின், வனிமோ விமான நிலையம் சென்றடைந்து போர்ட் மோர்ஸ்பி நோக்கி பயணமானார் திருத்தந்தை பிரான்சிஸ். இரவு எட்டு மணிக்கு போர்ட் மோர்ஸ்பி விமான நிலையம் வந்தடைந்த திருத்தந்தை, அங்கிருந்து 7.9 கிலோமீட்டர் தூரமுள்ள திருப்பீடத்தூதரகம் வந்தடைந்தார். அங்கேயே இரவு உணவருந்தி நித்திரையிலாழ்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்றைய அவரின் பயணத்திட்டத்தில், காலையில் பாப்புவா நியூ கினி பிரதமரை திருப்பீடத் தூதரகத்தில் சந்தித்தல், விசுவாசிகளுக்கு திருப்பலி நிறைவேற்றல், வனிமோ நகருக்கு பயணம் செய்து விசுவாசிகளையும், பின்னர் மறைப்பணியாளர் குழுவையும் சந்தித்தல், அங்கிருந்து போர்ட் மோர்ஸ்பி நகர் திரும்புதல் ஆகியவை இடம்பெற்றன. அவரின் நாளைய தினநிகழ்வாக, அதாவது செப்டம்பர் 9ஆம் தேதியின் நிகழ்வாக, காலையில் இளையோரைச் சந்தித்து உரை வழங்குவதும், பாப்புவா நியூ கினி நாட்டிலிருந்து விடைபெறுதலும், கிழக்கு திமோர் நாட்டில் வந்திறங்கி அரசுத்தலைவர் மாளிகையில் அரசுத் தலைவரை சந்திப்பது, மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கும் அரசியல் தூதுவர்களுக்கும் உரை வழங்குவதும் திட்டமிடப்பட்டுள்ளன.
அன்பு நெஞ்சங்களே, செப்டம்பர் 2ஆம் தேதி திங்கள்கிழமையன்று தன் திருப்பயணத்தை வத்திக்கானிலிருந்து துவங்கி இந்தோனேசியாவிற்குப்பின், தற்போது பாப்புவா நியூ கினியில் தன் திருப்பயணத்தை முடித்து கிழக்கு திமோர் செல்லவுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருப்பயணம் நன்முறையில் நிறைவேறிட நம் செப உதவியை வழங்குவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்