தேடுதல்

APEC மையத்தில் பூர்வீகக் குடியினரை சந்தித்த திருத்தந்தை APEC மையத்தில் பூர்வீகக் குடியினரை சந்தித்த திருத்தந்தை 

அரசியல், சமூகத் தலைவர்கள், மதப்பிரதிநிதிகளுடன் திருத்தந்தை

பாப்புவா நியூ கினி நாட்டின் தொலை தூரப் பகுதிகளுக்கு, கல்வி மற்றும் நலஆதரவுச் சேவையை கொண்டு செல்வதற்கான திருஅவையின் தொடர் முயற்சிகளைப் பாராட்டும் ஆளுநர்.

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

ஆளுநருடன் சந்திப்பை முடித்து APEC Haus என்ற ஆசியா பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பிற்கான மையம் நோக்கி பயணமானார் திருத்தந்தை. ஆளுநர் மாளிகையிலிருந்து 3.2 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இந்த இல்லத்தில் அரசியல் தலைவர்கள், மதப்பிரதிநிதிகள், அரசுகளின் தூதுவர்கள், தொழில் முனைவோர், சமூக மற்றும் கலாச்சாரப் பிரதிநிதிகள் குழுமியிருக்க, முதலில் ஆளுநர் Sir Bob Bofeng Dadae  திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். இந்த கட்டிடத்தில் திருத்தந்தையை வரவேற்றுப்பேசிய ஆளுநர் Sir Bob Bofeng Dadae அவர்கள், பாப்புவா நியூ கினி நாட்டில் கத்தோலிக்கத் திருஅவையின் வருகை, இந்நாட்டிற்கென கத்தோலிக்கத் திருஅவை ஆற்றியுள்ள பணிகள், தொடர்ந்து ஆற்றிவரும் பங்களிப்பு ஆகியவைகளைப் பாராட்டிப் பேசினார். ஆளுநர் சர் பாப் போஃபெங் ததா தனது வாழ்த்துரையில், பாப்புவா நியூ கினி நாட்டின் வரலாற்று மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அந்நாட்டு அரசு மற்றும் மக்கள் சார்பாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை அன்புடன் வரவேற்றார். மேலும் ஆளுநர் அவர்கள், நாட்டில் 19 ஆம் நூற்றாண்டின் இடைப்பட்டப் பகுதியில் கல்வி, சுகாதாரம், ஆன்மிகம் ஆகியவற்றில் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிய முக்கிய பங்கினை நினைவு கூர்ந்ததுடன், இன்றளவும் அந்நாட்டிலுள்ள தொலை தூரப் பகுதிகளுக்கு, கல்வி மற்றும் நலஆதரவுச் சேவையை கொண்டு செல்வதற்கான திருஅவையின் தொடர் முயற்சியையும் பாராட்டினார்.

மேலும் அவர்கள், அமைதி, நீதி, மதிப்பு, பாலின சமத்துவம் ஆகியவற்றிற்கான திரு அவையின் பரிந்துரைகளையும், குறிப்பாக பாப்புவா நியூ கினி நாட்டின் தொலைதூர தீவுகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் பருவநிலை மாற்ற சூழலில், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளத்  தேவையான உலகளாவிய நடவடிக்கைகளுக்கான, திருத்தந்தையின் அழைப்பையும் வெகுவாகப் பாராட்டினார். மேலும் அவர் பாப்புவா  நியூ  கினியில், திருஅவை மற்றும் மாநில ஒன்றிப்புக்கான, ஆழமான அர்ப்பணிப்பை குறிக்கும் வகையில், திருஅவையுடனான அரசின் ஒத்துழைப்பை, நிதியுதவி வழங்குவதிலும், திருஅவை பணியாளர்களை, அரசு ஊதிய அமைப்பில் ஒருங்கிணைப்பதிலும் வெளிப்படுத்துவதாக எடுத்துரைத்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வருகையானது, பாப்புவா நியூ கினி நாட்டு மக்களிடையே ஒரு நீடித்த ஆன்மீக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்த ஆளுநர் அவர்கள், உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கு தேவையான தங்களின் நம்பிக்கையை வலுப்படுத்த, நாட்டின் தலைவர்கள் மற்றும் மக்கள் அனைவருக்காகவும் ஜெபிக்குமாறு திருத்தந்தை  அவர்களைக் கேட்டுக்கொண்டார்.

ஆளுநர் சர் பாப் போஃபெங் ததா அவர்களை வாழ்த்திய பின், அந்நாட்டிற்கான தனது முதல் அதிகாரப்பூர்வமான உரையின் போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நூற்றுக்கணக்கானத் தீவுகள் மற்றும் மொழிகளைக் கொண்ட பாப்புவா நியூ கினி நாட்டின் பன்முகத்தன்மையைக் குறிப்பிட்டு, பல இனக்குழுக்களின் ஒன்றிப்பு உணர்வையும் எடுத்துரைத்தார்.

ஆசிய பசிபிக் நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 2018 நவம்பர் தலைமைக் கூட்டத்திற்கென கட்டப்பட்ட APEC Haus என்ற இந்த மையம், அந்நாட்டின் இரு முக்கிய, மொட்டு மற்றும் கொயிட்டாபு இனங்களின் கலாச்சாரங்களை பிரதிபலிப்பதாக உள்ளது. ஒரு பெரிய கருத்தரங்கு அரங்கம், ஒரு கண்காட்சி மற்றும் அருங்காட்சியகத்தை நடத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது.

APEC Haus மையத்தில் இடம்பெற்ற சந்திப்பை நிறைவுச் செய்து திருப்பீடத் தூதரகம் திரும்பிய திருத்தந்தை, அங்கேயே மதிய உணவருந்தி சிறிது நேரம் ஓய்வும் எடுத்துக்கொண்டார். பின் அங்கிருந்து உள்ளூர் நேரம் மாலை 4 மணி 50 நிமிடங்களுக்கு, இந்திய நேரம் நண்பகல் 12 மணி 20 நிமிடங்களுக்கு திருப்பீட தூதரகத்தில் இருந்து 2.7 கிலோமீட்டர் தூரத்திலுள்ள பெண்குழந்தைகளுக்கான பிறரன்பு தொழில்நுட்ப பள்ளிக்கு பயணமானார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 September 2024, 14:59