தேடுதல்

பாப்புவா நியூ கினியிலிருந்து விடைபெறுதல்

திருத்தந்தை : சவால்கள் எழுகின்ற, கனவுகள் பிறக்கின்ற, கடல் வானைத் தொடுகின்ற பாப்புவா நியூ கினி நாட்டின் அழகினைப் பகிர்ந்ததற்கும், மக்களின் மகிழ்ச்சிக்கும் நன்றி

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோருடன் ஆன சந்திப்பின்போது, கடல்கள், மலைகள் மற்றும் காடுகள் நிறைந்த பாப்புவா நியூ கினி நாட்டில் தனது நேரத்தை செலவிடுவதில் உள்ள தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.  மேலும் திருத்தந்தை அவர்கள், பாப்புவா நியூ கினி நாடானது இளையோரால் நிரம்பிய இளம் நாடு என்றும், எதிர்காலத்தை நம்பிக்கை நிறைந்த புன்னகையுடன் எதிர்கொள்ள அவர்கள் அழைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டு, சவால்கள் எழுகின்ற, கனவுகள் பிறக்கின்ற, கடல் வானைத் தொடுகின்ற பாப்புவா  நியூ கினி நாட்டின் அழகினைப் பகிர்ந்ததற்கும், அவர்களின் மகிழ்ச்சிக்கும் நன்றி தெரிவித்தார்.

திருத்தந்தையின் உரையைத் தொடர்ந்து, பாரம்பரிய நடனம் ஒன்று இளையோரால் வழங்கப்பட்டது. இறுதியில் இயேசு கற்பித்த செபம் அனைவராலும் உரத்த குரலில் செபிக்கப்பட, அங்கு குழுமியிருந்த அனைவருக்கும் தன் ஆசீரையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏற்கனவே காலையிலேயே திருப்பீடத்தூதரக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு நன்றி கூறி விடைபெற்று விட்டதால், இங்கிருந்தே போர்ட் மோர்ஸ்பி பன்னாட்டு விமான நிலையம் நோக்கி காரில் பயணம் செய்தார் திருத்தந்தை. ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்கு மேல் இளையோருடன் செலவிட்டுள்ள திருத்தந்தை, அவ்விளையாட்டு மைதானத்தில் இருந்து 4.1 கிலோமீட்டர் தூரத்திலுள்ள விமான நிலையத்தை வந்தடைந்தபோது அவருக்காக பாப்புவா நியூ கினியின் பிரதமர் காத்திருந்தார். வெள்ளிக்கிழமை பாப்புவா நியூ கினி நாட்டிற்கு வந்ததிலிருந்து திருத்தந்தையை பலமுறை சந்தித்துள்ள பிரதமர் ஜேம்ஸ் மாரட் அவர்கள், வழியனுப்பும் நிகழ்வுக்கும் வந்திருந்தார்.  இரு தலைவர்களுக்கும் இடையே விமான நிலையத்தில்  சந்திப்பு இடம்பெற்றபின், உள்ளூர் நேரம் நண்பகல் 12மணி 12 நிமிடங்களுக்கு, இந்திய நேரம் காலை 7 மணி 52 நிமிடங்களுக்கு பாப்புவா நியூ கினியிலிருந்து விடைபெற்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 September 2024, 14:58