தேடுதல்

போர்ட் மொரஸ்பி வந்தடைந்த திருத்தந்தை போர்ட் மொரஸ்பி வந்தடைந்த திருத்தந்தை 

பாப்புவா நியூ கினி தலைநகர் போர்ட் மோரஸ்பி

ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவால் அடுத்தடுத்து ஆக்கிரமிக்கப்பட்ட போர்ட் மோரஸ்பி நகரம், இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் நாட்டால் கைப்பற்றப்பட முயற்சி செய்யப்பட்டது.

ஜெர்சிலின் டிக்ரோஸ் – வத்திக்கான்

தலை நகர் போர்ட் மோரஸ்பியை எடுத்துக்கொண்டோமானால் இங்கு 3 இலட்சத்து 64 ஆயிரம்பேர் வாழ்கின்றனர். ஐரோப்பியர்கள் போர்ட் மோரஸ்பியில் வந்து குடியேறுவதற்கு முன்னால் அந்த மண்ணுக்கேயுரிய மொட்டு மற்றும் கொயிட்டாபு இனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இதில் மொட்டு இனம் கடற்கரையிலும், கொயிட்டாபு இனம்  உள்பகுதியிலும் வாழ்ந்து வந்தாலும் இவர்களுக்கிடையே திருமணத் தொடர்புகள் இருந்தன. ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவால் அடுத்தடுத்து ஆக்கிரமிக்கப்பட்ட இந்நகரம், இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் நாட்டால் கைப்பற்றப்பட முயற்சி செய்யப்பட்டது. 1975ல் பாப்புவா நியூ கினி நாடு சுதந்திரம் அடைந்தபோது போர்ட் மோரஸ்பி தலைநகரானது.

இத்தலைநகரில் திருத்தந்தையின் வரவேற்பிற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. பாப்புவா நியூ  கினி நாட்டின் தலைநகரான போர்ட் மோரஸ்பி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வருகைக்கான அனைத்து ஏற்படுகளையும் முடித்து தயார்நிலையில் உள்ளது.

ஆசியா மற்றும் ஓசியானியாவிற்கான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், இரண்டு வார திருப்பயணத்தின் இரண்டாம் கட்டமாக, செடம்பர் 6 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை மாலை வருகை தரும் திருத்தந்தை அவர்களின் வருகையை, பாப்புவா நியூ  கினி நாட்டு மக்கள், அதன் தலைநகரான போர்ட் மோரஸ்பியில் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். திருத்தந்தை அவர்களின் வருகையையொட்டி, பாப்புவா நியூ கினி நாட்டின் தலைநகரான போர்ட் மோரஸ்பி, மிகவும் பரபரப்பாக உள்ளது. தலைநகரில் ஏற்பாடுகள் அனைத்தும் நன்கு முடிவடைந்த நிலையில், தீவுகள், மலைப்பகுதிகள் என நாட்டின் 4 திசைகளிலிருந்தும் மக்கள் தலைநகரில் வந்து குவிந்துள்ளனர். மேலும் செப்டம்பர் 8 ஆம் தேதி  வரும் ஞாயிறன்று, சர் ஜான் குய்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள திருப்பலியானது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் தலைமையேற்று நிறைவேற்றப்படவுள்ளது. வழக்கமாக ரக்பி மற்றும் கால்பந்து விளையாட்டிற்காக ஒதுக்கப்படும் இம்மைதானமானது தற்போது பாப்புவா நியூ கினி நாட்டின் பரந்த கலாச்சார மற்றும் மொழியியல் பன்முகத்தன்மைக்கு சான்று பகரும் விதமாக பல்வேறு வண்ணமயமான தோரணங்களாலும், பாரம்பரியமிக்க கலை வேலைப்பாடுகளாலும் அணிசெய்யப்பட்டு மெருகூட்டப்பட்டுள்ளது.   இந்நிகழ்விற்குப் பின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செப்டம்பர் 9 ஆம் தேதி திங்களன்று அந்நாட்டின் இளையோரை சந்திக்கவுள்ளார். 1995 ஆம் ஆண்டு பாப்புவா நியூ கினி நாட்டிற்கு வருகை தந்த திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களைத் தொடர்ந்து, ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருப்பயணமானது, அந்நாட்டு மக்களிடையே பெரும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திருத்தந்தை தனது 87வது வயதிலும், பாப்புவா நியூ கினி நாட்டினை நோக்கிய இவ்வருகையானது, அந்நாட்டின் திருநிலையினர், பொதுநிலையினர் என அனைவரிடையேயும் ஓர் ஒன்றிப்பு உணர்வை ஏற்படுத்துவதுடன், மகிழ்ச்சி மிகுந்த இதயத்துடன் திருத்தந்தை அவர்களை வரவேற்க  உற்சாகத்தையும் தந்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 September 2024, 16:26