தேடுதல்

பாப்புவா நியூ கினி துணை பிரதமருடன் திருத்தந்தை பாப்புவா நியூ கினி துணை பிரதமருடன் திருத்தந்தை  (AFP or licensors)

தலைநகரில் திருத்தந்தையின் சனி தின பயணத் திட்டங்கள்

அரசியல் தலைவர்களைச் சந்தித்தபின், 7ஆம் தேதி மாலையில் தெருவோரச் சிறார்களிடையே பணிபுரிவோரையும், அச்சிறார்களையும் சந்தித்து உரையாடுவார் திருத்தந்தை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி தலைநகர் போர்ட் மோரஸ்பி வந்தடைந்த திருத்தந்தை, இந்நகரிலேயே தன் பயணத்திட்டங்களை நிறைவேற்றுவதுடன் அந்நாட்டின் இன்னொரு நகரான வனிமோ என்பதற்கு மட்டும் பயணம் செய்ய உள்ளார். திருத்தந்தையின் சனிக்கிழமையின் பயணத்திட்டங்கள் குறித்து சிறிது நோக்குவோம்.

காலையில் பாப்புவா நியூ கினி ஆளுநர் மாளிகைச் சென்று அவரை சந்திப்பது திருத்தந்தையின் முதல் நிகழ்வாக உள்ளது. பாப்புவா நியூ கினியின் ஆளுனர் என்பவர் இங்கிலாந்து மன்னர் சார்லஸின் பிரதிநிதியாக பாப்புவா நியூ கினியின் ஆட்சி நிர்வாகத்தைக் கண்காணிப்பவராவார். தற்போது அந்நாட்டின் ஆளுநராக இருப்பவர் Sir Bob Bofeng Dadae என்பவராவார். ஆளுநரைச் சந்தித்து தன் வாழ்த்துக்களை வழங்கியபின் அந்நாட்டின் முக்கிய கருத்தரங்கு மையமான APEC Haus என்றழைக்கப்படும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மையத்தை வந்தடைவார் திருத்தந்தை. அங்குதான் அவர் அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களையும், பாப்புவா நியூ கினிக்கான அரசியல் தூதுவர்களையும் சந்திக்க உள்ளார். இங்கு ஏறக்குறைய 300 பிரதிநிதிகள் எதிர்பார்க்கப்படுகின்றனர். அரசியல் தலைவர்களைச் சந்தித்தபின், அதாவது அந்நாட்டிற்கான முதல் உரையை அவர்களுக்கு வழங்கியபின், மாலையில் தெருவோரச் சிறார்களிடையே பணிபுரிவோரையும், அச்சிறார்களையும் சந்தித்து உரையாடுவார் திருத்தந்தை. சனிக்கிழமையின் இறுதி நிகழ்ச்சியாக பாப்புவா நியூ கினியின் தலத்திருஅவை அதிகாரிகளைச் சந்தித்து அந்நாட்டிற்கான இரண்டாவது உரையை வழங்குவார். இத்துடன் அவரின் சனிக்கிழமை பயணத்திட்டங்கள் நிறைவுக்கு வரும்.

பாப்புவா நியூ கினி நாட்டிற்கான திருத்தந்தையின் திருப்பயணம் முக்கிய நிகழ்வுகளை உள்ளடக்கியதாக உள்ளது. சனிக்கிழமையின் பயணத்திட்டங்களை நிறைவுச் செய்தபின், ஞாயிறன்று காலையில் விசுவாசிகளுக்கு திருப்பலி, மாலையில் வனிமோ என்ற நகருக்கு விமானத்தில் சென்று திரும்புதல் ஆகியவை இடம்பெறும். திங்களன்று காலை பாப்புவா நியூ கினி நாட்டிற்கான திருப்பயணம், இளையோருடன் ஆன சந்திப்புடன் நிறைவுக்கு வரும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 September 2024, 16:31