தேடுதல்

திருத்தந்தையின் சனிக்கிழமை மாலை பயணத்திட்டங்கள்

ஆயர்கள், அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், துறவிகள், குருமடமாணவர்கள், பொதுநிலை மறைக்கல்வி ஆசிரியர்கள் என ஏறக்குறைய 300 பேர் திருத்தந்தையைச் சந்தித்தனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

1995ஆம் ஆண்டு இயேசுவின் பிறரன்பு சகோதரிகள் சபையால் துவக்கப்பட்ட இந்த பள்ளி கிறிஸ்தவ மதிப்பீடுகளின் பாதையில் இளம் சிறுமிகளை வழிநடத்தி, அவர்கள் தங்கள் பிற்கால வாழ்வுக்கு குடும்ப ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பங்களிப்பு வழங்கும்வகையில் ஒரு கைத்தொழிலை கற்றுக்கொள்ள உதவுகிறது. சமூக வளர்ச்சிக்கு பங்காற்றும்வகையில் இந்த பெண்கள் பள்ளியை நடத்தி வருகின்றனர் இக்கத்தோலிக்க துறவு சபையினர்.

இந்த பள்ளிக்கு வந்த திருத்தந்தையை முதலில் அந்நாட்டு கர்தினால் John Ribat அவர்களும், இயேசுவின் பிறரன்பு சபை இல்ல தலைமைச் சகோதரியும், அப்பள்ளியின் தலைமை ஆசிரியரும் வாசலில் வந்து வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். இந்த பள்ளிக்குள் திருத்தந்தை நுழையும்போது, பாரம்பரிய உடையணிந்த, மரியா மற்றும் ஜெப்ரி மேத்தேயு என்ற இரு சிறார்கள் திருத்தந்தைக்கு மலர்க்கொத்துக்களை வழங்கி வரவேற்றனர். அவர்களை அரவணைத்த திருத்தந்தை அவர்களுக்கு சில இனிப்புக்களையும் வழங்கினார்.

சிறிய அரங்கினுள் வந்த திருத்தந்தையை முதலில் கர்தினால் வரவேற்றுப் பேசினார். அதைத்தொடர்ந்து பாரம்பரிய நடனம் ஒன்று இடம்பெற, இரு மாணவர்கள் திருத்தந்தையிடம் கேள்விகளை முன்வைத்தனர். மீண்டும் ஒருமுறை பாரம்பரிய நடனம் குழந்தைகளால் நடத்தப்பட, திருத்தந்தையும் வாழ்த்துக்கள் அடங்கிய மிகச் சிறு உரை ஒன்றையும் வழங்கினார்.

இரு பாரம்பரிய நடனங்களை வழங்கிய சிறார்களை பாராட்டிய திருத்தந்தை, சமூகத்தில் எவரும் ஒரு சுமையாக நோக்கப்படக்கூடாது என்பதை வலியுறுத்திக் கூறினார்.

அங்கு குழுமியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார் திருத்தந்தை. அதன்பின் அங்கிருந்து 1.2 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மரியன்னை திருத்தலம் நோக்கி வந்தார் திருத்தந்தை. அங்குதான் பாப்புவா நியூ கினி மற்றும் சாலமன் தீவில் உள்ள ஆயர்கள், அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், துறவிகள், குருமடமாணவர்கள், பொதுநிலை மறைக்கல்வி ஆசிரியர்கள் என ஏறக்குறைய 300 பேர் காத்திருந்தனர். திருத்தல வாசலுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வந்ததும் பாப்புவா நியூ கினி கர்தினால், அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், அத்திருத்தல அதிபர் இணைந்து திருத்தந்தையை வரவேற்க, பாரம்பரிய உடையணிந்த இரு சிறார் அவருக்கு மலர்க்கொத்துக்களை வழங்கி வரவேற்றனர். முதலில் ஆயர் பேரவைத் தலைவர் திருத்தந்தையை வரவேற்றுப் பேச, ஓர் அருள்சகோதரியும் அருள்பணியாளரும் தங்கள் சான்று வாழ்வைப் பகிர்ந்தனர். இதையடுத்து பாடகர் குழு பாடல் ஒன்றை பாடியது.  அதன் பின் பொதுநிலை மறைக்கல்வி ஆசிரியர் ஒருவரும், அடுத்த மாதம் வத்திக்கானில் இடம்பெறும் ஆயர் மாமன்றக் கூட்டத்தின் பிரதிநிதி ஒருவரும் தங்கள் வாழ்வு சாட்சியங்களை வழங்கினர். அடுத்து திருத்தந்தையின் உரை இடம்பெற்றது. இந்த நிகழ்ச்சியை முடித்தபின்னர் ஆயர்கள், அருள்பணியாளர், துறவியர், திருத்தொண்டர், குருமடமாணவர்கள் மற்றும் பொதுநிலை மறைக்கல்வி ஆசிரியர்களிடம் இருந்து விடைபெற்று அங்கிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருப்பீடத்தூதரகம் சென்றடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அப்போது உள்ளூர் நேரம் மாலை  ஏறக்குறைய 7 மணியாக இருந்தது. இந்திய நேரம் மாலை 2 மணி 30 நிமிடங்கள். இத்துடன் திருத்தந்தையின் சனிக்கிழமை திருப்பயணத் திட்டங்கள் நிறைவுக்கு வந்தன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 September 2024, 15:09